Tuesday, November 3, 2020

KANAKADASA


 

கனகதாசர்.      J. K. SIVAN  
                                                           
  சிறந்த  கிருஷ்ண பக்தர் கிடைத்தார்                                                                                     

துங்கபத்திரா நதிக்கரையில் மான்வி  ஒரு சிறிய கிராமம்.  அங்கே  இருக்கும்  ஹனுமான் கோவிலில் தான் ஸ்ரீ  ராகவேந்திரர் சாதுர் மாஸ்ய விரதம் இருப்பார். 
  
ஒருநாள்  அந்த கோவில் கொடிக்கம்பம் தாண்டி ஒருவர்  இரு கைகளை  கூப்பிக்கொண்டு  தூர நிற்பதை பார்த்தார்.

 ''வா''  என்று  உள்ளிருந்தே  அவரை நோக்கி கையாட்டினார் ஸ்வாமிகள். அந்த மனிதர் தலையாட்டினார்.

 ''சுவாமி  நான்  தாழ்ந்த வகுப்பு.உள்ளே வர இயலாது'' 
''அப்பா, நான் முன் பிறப்பில் வியாசராஜராக இருந்தபோது என் சிஷ்யன் நீ. கனகதாசன்
.பகவான் யாரையும் வித்யாசப்படுத்தவில்லை.  எல்லோரும் அவன் முன் சமம். வா''  

ஸ்ரீ  ராகவேந்திரர் வாழ்வில்  கனகதாசர் பெரும்பங்கு வகிப்பவர்.   சாதுர்மாஸ்ய  சமயத்தில்  ஸ்ரீ மடத்தில்  மூலராமருக்கு நைவேத்தியம் படைக்கும்போது  கடுகு உபயோகிக்க மாட்டார்கள்.  இதை மாற்றியவர்  ராகவேந்திரர்.  ''கனகதாசனுக்காக இதை மாற்றுகிறேன். பகவான்  பக்தனுக்காக எதையும் ஏற்றுக் கொள்வான்'' என்று சொன்னவர். .

இந்த கனகதாசருக்கு தரிசனம் கொடுக்கத்தான் உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணன் திரும்பி நின்றான் என்று ஏற்கனவே ஒரு கதை சொன்னேன்.  ஞாபகம் இருக்கிறதா?   மீண்டும் படிக்க விரும்பினால்  மறுபடியும் பதிவிடுகிறேன்.

புரந்தர  தாசர்  காலத்திலே வாழ்ந்தவர் தான்  கனகதாசரும்.  இருவருமே  குரு வியாசராஜரின் சீடர்கள். கனக தாசர்  கிருதிகள்  பக்தி பூர்வ மானவை. புரந்தரதாசர் பாடல்களை போலவே  அவை  இன்றும்  சேவிக்கினிமையாக உள்ளத்தை தொடும்படி  பாடப்படுகின்றன.  ஒரு பிரபலமான பாடல் உங்களுக்கு தெரிந்தது  தான்.  ''பாரோ க்ரிஷ்ணய்யா''.      MLV  இதைப் பாடி பல நூறு முறைகள் கேட்டும் இன்னும் அலுக்கவில்லை. 

திம்மன் என்ற இயற்பெயர் கொண்ட  கனக தாசர் கன்னட தேசத்தில், காகினிலா  எனும் ஊரில் வாழ்ந்த குரும்பர்கள்  வகுப்பை சேர்ந்தவர். தலைவன். செல்வாக்கோடு இருந்தவர். ஆடு மாடு  மேய்க்கும் வகுப்பினர். பலம் மிக்கவர்.   இவரும் திருப்பதி வெங்கடேச பெருமாள்  அனுக்ரஹத்தில் பிறந்தவர். திம்மன் தொட்டதெல்லாம்  பொன்னாக செல்வம் கொழித்தது.  எனவே கனகதாசர் என்ற பெயர் வந்தது என்பார்கள்.  ஆரம்பத்தில் சிறந்த போர் வீரர். ராஜாவின் தளபதி. ஆதிகேசவனுக்கு கோயில் கட்டி  வழிபாடுகளைத்  தானே நடத்தியவர்.  

அவ்வளவு   தீரமான வீரர் ஒரு யுத்தத்தில்  படுகாயமுற்று  களத்தில்  வீழ்ந்துகிடந்தார். 

''ஆதிகேசவா, நான் உன் பக்தன். எனக்கு  ஏன்  இந்த நிலைமை?''. கண்ணீர் சிந்தினார்.''கனகா, உன் வலி தீரவேண்டுமா, காயம்  ஆற வேண்டு மா?''   ஆதிகேசவன் அரூபமாக கேட்டான்.'

'ஆமாம்  இதென்ன கேள்வி.   என்னால் வலி தாங்கமுடியவில்லை'''
'அப்படியென்றால் உன்  தளபதி பதவி  அந்தஸ்து எல்லாம் விட தயாரா?''
''என்  பதவி, கௌரவம், அந்தஸ்து,  உத்தியோகம் எல்லாம் விட்டு விடவேண்டுமா?'
'''ஆமாம்.   உன் துன்பம் துயரம் தீர வேண்டாமா?'' ''சரி  முதலில் என் காயங்களை ஆற்று, என் உடல் வலி திரட்டும்.  பிறகு நீ சொன்னபடி செய்கி றேன்'''
'நீ  முதலில் என்னுடைய தாசன் என்று ஒப்புக் கொள். பிறகு பார்  என்ன நடக்கிறது என்று''

கனக  நாயக்கனுக்கு முதலில் நம்பிக்கை இல்லை.  இருந்தாலும்  என்ன நடக்கிறது பார்ப்போம் என்று  ''சரி'' என்று பதிலளித்தான் .''அடுத்த கணமே  அவன் உடல் காயங்கள் மறைந்து, உடல் பழையபடி ஆயிற்று. உள்ளம் ஏதோ லேசானது . நெஞ்சில்  சந்தோஷம் நிறைந்தது.

''ஆஹா   என்ன ஆச்சர்யம்'
''கனகா, நீ  உடனே வியாசராஜரை தேடிப்போ. அவரின் சிஷ்யனாகு.  அவரிடம் தீக்ஷை பெற்றுக் கொள். எனக்கு  தாசனாக  சேவை புரிவாய்''  என்றது அசரீரி.

வியாசராஜர் யார், எங்கிருக்கிறார் என்று தேடி கண்டுபிடித்த கனக நாயகன் அவர் முன் சாஷ் டாங் கமாக நமஸ்கரித்து நடந்ததை சொன்னான். விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயரின்  ராஜ குரு வியாசராஜர்.   அவரிடமிருந்து  தூர தள்ளி நின்று இத்தனையும் நடந்தது.

''அப்பனே  நீ யார்? எதற்கு  அருகே வராமல்   தூர மாக  தள்ளி நிற்கிறாய்?''
''சுவாமி  நான்  குறும்பர் வகுப்பை சேர்ந்தவன்
''உனக்கு முதலில்  தேவையானது கோன  மந்திரம்''   (கோனார்கள்  ஆடு மாடு மேய்ப்பவர்கள்) என்கிறார்  வியாசராஜர். அதை உச்சரித்து ஜபம் செய். பிறகு என்னிடம் வா. உனக்கு உபதேசம் செய்கிறேன்''

கோனா  என்றால் எருமை என அவர் பேசிய  மொழியில் அர்த்தம்.  உண்மையில்  கனகன் எமதர்மனின் அம்சம் என்பார்கள்.  இது வியாச ராஜருக்கு  தீர்க்க தரிசனமாக தெரியும்.
 கோனா  என்ற மந்திரத்தை விடாமல் உச்சரித்த கனகன் முன் ஒரு பெரிய எருமை நின்றது. அந்த எருமையோடு வியாசராஜர் முன் நின்றான்.

''எனக்கு  மந்த்ரோபதேசம் செய்யுங்கள் சுவாமி ''அதற்கு முன் உனக்கு ஒரு வேலை தருகிறேன்.  எதிரே  இருக்கிறது பார் ஏரி . அதற்கு வரும் நீரை பாறைகள் தடுக்கிறது தெரிகிறதா. அந்த பாறைகளை உடைத்து தகர்த்து   ஏரியில் நீர் தடங்கல் இல்லாமல் வரச்செய்'

'எருமையின் உதவியோடு பாறைகளை தகர்த் தெறிந்தான் கனகன். ஏரியில்  நீர் நிறைந்தது.  இன்றும்  அந்த ஏரி  ஆந்திர பிரதேச பகுதியில்   ''வியாச சமுத்திரம்'' என்றால் பெயரோடு இருக்கிறதாம்.   கனகரோடு இருந்த எருமை இடித்து தள்ளிய பெரிய  பாறை இன்றும்  ''கனக தோப்பு''  என்று பெயரோடு இருக்கிறதாம். நான் பார்க்க இன்னும்  பாக்யம் செய்யவில்லை.

வியாசராஜர்  அனுகிரஹத்துடன்  கனக நாயக்கன்,  கனகதாசரானான்.  ''காகினேலா   ஆதிகேசவா ''என்று வரும் கீர்த்தனைகளை கேட்கும்போது கனகதாசரை வணங்குவோம்.


No comments:

Post a Comment