ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம் நிஜமாகவே கெட்டுவிட்டது.
''யாரு?''
''காஞ்சிபுரத்திலிருந்து வந்திருக்கேன்....''
''ஓஹோ அடடா வாங்கோ .... ''
''உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்தரவு''
நான் என்ன கனவா காண்கிறேன்... எப்படி என் மனசுக்குள்ளேயே நான் பேசிக்கொள்வது எங்கோ காஞ்சிபுரத்தில் மஹா பெரியவாளுக்கு கேட்கிறது? இப்படி வெளியே தெரியாத ஒரு டெலிபோன் கூட இருக்கா?
அந்த கிழவரின் உடல் சிலிர்த்தது. குப்பென்று வியர்த்தது. வார்த்தைகள் தடுமாறியது.
''நான் யார்? எதில் சேர்த்தி? பண்டிதனா? சாஸ்திரியா? ஞானியா? தர்மிஷ்டனா? பணக்காரனா? புரவலனா? அக்னிஹோத்ரியா? ஏதாவது கவர்ன்மென்ட் அதிகாரி, MLA , கவுன்சிலர், மந்திரி, கட்சி தலைவன்.... ஹுஹும்.. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையே. கடைசியாக எப்போ பெரியவாளை பார்த்தேன். ஒருநாள் ஒரு தேங்காயை மட்டும் எதிர்க்க வச்சு நமஸ்காரம் செய்தது ஞாபகம் வருது... எதிரே கண்ணாடி போட்டுண்டு, காவி வஸ்திரம், கையில் தண்டம், தலைமேல் வில்வமாலை குறுக்கே போட்டுண்டு, செவுத்திலே சாஞ்சிண்டு ஒரு காலை மடக்கி உட்க்கார்ந்துண்டு இருந்த தெய்வம்...... முகம் இன்னும் ஞாபகம் இருக்கு...
மெதுவாக எழுந்த கிழவரை, மடத்தில் இருந்து வந்தவர் இடுப்பில் ஒரு கை , தோளில் ஒரு கை கொடுத்து அணைத்து பிடித்துக்கொண்டு நடத்தி வாசலில் நின்ற காரில் ஏற்றுக்கொண்டார். கிழவர் ஒரு கணம் யோசித்தார். ஏதாவது எடுத்துக் கொள்ள மறந்துவிட்டேனா? பை , பழம், பர்ஸ்.... ஒன்றுமே தொடவில்லை, வெறும் கையோடு , கட்டின வேஷ்டி மேல் துண்டை சுறுக்கி இடுப்பில் கட்டிண்டு கிளம்பிட்டார்.
உள்ளூர சிரிப்பு. என்ன இது கார் கொண்டு வந்திருக்கே.... வேகமாக அவரைப் போய் பார்க்க விமானம் அல்லவோ கொண்டு வந்திருக்க வேண்டும்.....
காரில் காஞ்சிபுரத்தில் மடத்தில் நுழைந்த போது மார்பு படபடத்தது... பெரியவா அங்கே இல்லை அப்போது. விசாரித்ததில் .... ''பெரியவா இதோ வர நேரம்... காமாக்ஷி தரிசனம் பண்ண போயிருக்கா'' என்று தெரிந்தது.
கூட வந்த மடத்து ஆள் ''தாத்தா, பெரியவா வரதுக்குள்ளே சட்டுன்னு அம்பாளைத் தரிசனம் பண்ணறேளா . வாங்கோ அழைச்சுண்டு போறேன் ''
''இல்லேப்பா முதல்லே, பெரியவா தரிசனம் அப்புறமாதான் மத்ததெல்லாம் ..''
சற்று நேரத்தில் மஹா பெரியவா வந்துட்டா. கும்பல் நெருங்கியது.
வரிசையாக நகர்ந்து நகர்ந்து வந்துவிட்டார். இதோ பெரியவாள் எதிரில்....எத்தனை காலம் காத்திருந்த சந்தர்ப்பம் இதோ அதிர்ஷ்டவசமாக கிடைத்துவிட்டதே. நழுவ விடலாமா.....மனது ஆனந்தத்தில் கொப்புளித்தது. மார்பில் படபடப்பு அதிகரித்தது.
பெரியவா கண்களை உற்று பார்த்தார். கண்கள் சந்தித்து மனசை திறந்து வார்த்தைகளை பேசாமலேயே கொட்டின. கைகளை தூக்கி சிரமேல் வைத்து நமஸ்கரித்தார்.
மனசு லேசாயிற்று. நான் எங்கே பறந்து கொண்டிருக்கிறேன்.... கீழே ஆயிரம் மைல்களுக்கு கீழே காஞ்சிபுரம், மடம் , மஹா பெரியவா என் நமஸ்காரம்......... பாக்யம் ஆனந்தம்...
கும்பல் ... பின்னல் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். கிழவர் நமஸ்கரித்தனர் எழுந்திருக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறாரே....
ஐந்து நிமிஷத்துக்கு மேல் ஆயிற்று... ஹுஹும் கிழவர் நகரவே இல்லை. எப்போ எழுந்திருப்பார்?
அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அதற்காக தானே எல்லோரும் அங்கே அந்த பேசும் தெய்வத்தை பார்க்க வருவது..
''இந்தாடா இதை எடுத்து அவருக்கு போர்த்து..''
மஹா பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து, அருகே இருந்த சிப்பந்தியிடம் கொடுத்தார்.
அந்த காஷாய வஸ்திரம் அந்த பாக்கியசாலி கிழவரின் உயிரற்ற தேகத்தின் மேல் போர்த்தப்பட்டது .
மாதத்திலேயே சாஸ்திரிகள் மேற்கொண்டு அந்திம கிரியைகளை நடத்தினார்கள்.
முதல்லே பெரியவா தரிசனம்.... அப்பறமா மத்ததெல்லாம்.... நிறைவேறி விட்டது.
No comments:
Post a Comment