Wednesday, June 10, 2020

PESUM DEIVAM



பேசும்  தெய்வம்      J K SIVAN
                                                                       

             இதோ ஒரு  கர்ம யோகி 

ஹிந்துக்களின் பக்தி அசைக்கமுடியாதது. நமக்கு தெரிந்து தமிழகத்தில் எங்காவது  ஒரு தெருவாவது   பிள்ளையார் இன்றி உண்டா?  கிராமங்களில் இன்னும் விசேஷமாக  ஆற்றங்கரை, அரசமரத்தடி என்று பிள்ளையார், காவல் தெய்வங்களை எங்கும் காணலாம்.   கடவுள் பக்தி நமது ரத்தத்தோடு ஊறியது.  பாரம்பரியமாக நாம்  பெற்ற சொத்து இது.  பக்தி உள்ளே  உறைந்திருக்க,  செய்யும் தொழிலே  தெய்வம் என்று இருப்பவர்கள் நாம். கர்ம யோகிகள் தான் நாம் அனைவருமே. 



ஆயுத பூஜை என்று  பிரத்யேகமாக  ஒருநாள் நமது  உபகரணங்களுக்கு , வாகனங்களுக்கு,  எழுதுகோலுக்கு, புத்தகங்களுக்கும் நன்றியோடு வணக்கம் செய்பவர்கள்.

தமிழ்  நாட்டில்  எங்கோ  ஒரு  கிராமம்.  சரியான  குக் கிராமம்.  எங்கும்  பச்சைப் பசேலென்று வயல்கள்.  வாய்க்கால்களில் நீரோடும்.  பாத்தி கட்டி  வயலுக்குள்  சிலு சிலுவென்று  நீர்  பயிர்களுக்கு  வேருக்கு  உயிரூட்டும்.  தூரத்தில்  மரங்கள்.  ஆத்தகரை,  அரசமரத்தடி  பிள்ளையார்.   பழைய  சிவன் கோயில்.  அங்கே  மஹா பெரியவா  காம்ப். 

ஒரு நிமிஷம் சிந்தித்தீர்களா?  ஏன்  இவ்வளவு பேர்  மஹா பெரியவாளை இன்னும் நினைத்து, வணங்கி, அவரைப் பற்றி பாடுகிறார்கள், பேசுகிறார்கள், என் போல் எழுதுகிறார்கள்?  காரணம் ஒன்றுமே இல்லை. நாம் மனிதர்களாக பிறந்து மனிதர்களாக வாழ்கிறோம்.  அவர்  மனிதராக பிறந்து தெய்வமாக வாழ்ந்தவர். தெய்வம் என்றால் பயபக்தி என்பதில் பக்தி மட்டும் தான் வேண்டும். பயம் வேண்டாம். குழந்தைகளிடம் ''உம்மாச்சி கண்ணை குத்தும்'' என்று சொல்லி பயத்தை உள்ளே விதைக்கவேண்டாம்.  அன்பு, பாசம், நேசம், கருணை யின் உருவம் தான் கடவுள். அது  பெரியவா.

அந்த குக்கிராமத்தில் தங்கி விட்டு  மறுநாள்  பிரயாணம்.  ஆகவே அந்த கிராமத்தில்  பரிவாரங்களோடு  ஒரு பழைய கால சிவன் கோவிலில்  தெய்வம்  தங்கியது.

விஷயம்  பரவி அண்டை  அசலில்  உள்ள  பக்தர்கள்  குழுமி விட்டனர்.  கிராமம்  நிரம்பிவிட்டது. வருவோரும் போவோரும்  கூட்டம்.  பெரியவா தரிசனத்துக்கு  வரிசை வரிசையாக  மக்கள்  வெள்ளம்.  அலுக்காமல்  சலிக்காமல்  தெய்வம்  அனைவருக்கும்  இன்முகத்துடன்  தரிசனம் கொடுத்தது.  சிலருடன்  பேசியது.

வரிசையில் ஒருத்தி.  விவசாய வேலைசெய்யும் ஒரு பெண்மணி, தரிசனத்துக்குவந்திருந்தாள் . அவள் முறை வந்துவிட்டது.  அருகில் வந்துவிட்டாள் .  கையும்  ஓடவில்லை, காலும் ஓடவில்லை  அவளுக்கு.  புது அனுபவம். ''பயம்'' கலந்த  மரியாதை.  வியர்த்து விறுவிறுத்து  சற்று நடுக்கத்துடன்  அருகே  வந்தவள்  பெரியவாள் எதிரில் கையைகூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சுபடபடவென்று அடித்து கொண்டிருந்தது.

அவள்   கண்களில் கண்ட  மருட்சியை பார்த்து  பெரியவா ரசித்தார்கள்.  அவளுடன் ஆவலுடன் தெய்வம் பேசியது:

" நீ  என்ன வேலை பண்றே?"
"வயல் கழனி  வேலைக்கு போறேன், சாமி.
''குழந்தை குட்டி  இருக்கா ? சாமி  கும்புடுவியா ?  ''\

''ஆறு பசங்கள். என்  மாமியா, என்கிட்டவே  இருக்கு. காலையிலே சோறாக்கி வெச்சிட்டுபோயிடுவேன். இருட்டினப்பாலே   தான்   ஊட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமி  கும்பிடறது?  எப்போ கோயிலுக்கு போறது? உடம்பு  களைச்சுப் போவுது. ஊட்டுக்கு போனா  அப்பாடா  ன்னு கீழே  சாய சொல்லுது. எனக்கு  சாமி கும்பிடவே நேரமில்லே,  எப்படி கும்பிடறதுன்னும் தெரியாது சாமி.."

பெரியவாளின் திருக்கண்கள் கருணையால்நிரம்பியிருந்தன.

"சாமி கும்பிடணும்னு  நினைகிறியே,அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்!  நான் சொல்லி தரேன்.   தினமும்  காலையிலே சூரிய உதயம் ஆனவுடன்,கிழக்கே சூரியனை பார்த்து ஒரு கும்பிடுபோடு. சாயங்காலம்  சூரியன் மறைய சமயம்  விளக்கு வச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு.
''சாமி கும்புடவாணாமா   சாமி.  எப்படி சாமி? ''

"நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம்   சாமியை நினைச்சாலே போறும் - சகலபுண்யமும் கிடைச்சிடும்.."

பெண்மணி கண்களை துடைத்துகொண்டாள்.    ''நான்  இன்னாத்தை கண்டேன்  சாமி  இஸ்கோல்  போவாத  நாயி ''

 "சூரியனை கும்பிடு - சகல புண்ணியமும்கிடைச்சிடும்!"

''இன்னாமோ  சாமி  உன்னியப்  பாத்ததும்  குளு  குளுன்னு  ஆயிபோச்சி  சாமி.  ஒண்ணுமே  சொல்ல  நா  எழலியே, பாத்துக்கிட்டே  இருக்கலாம்  போல   இருக்கு  சாமி  நீ  இங்கியே  இரு  சாமி . வேறே எந்த ஊருக்கும் போவாதே ''

பெரியவாள் அருகே  இருந்த  சிப்பந்தியை  கூப்பிட்டு  அவளுக்கு  நிறைய  பழங்களை  கொடுக்கச்  சொன்னார்கள்.  குழந்தை மனத்தோடு  கர்ம யோகி யாக  வந்த  அந்த  சாதாரண  குடியானவ பெண்மணி  பெரியவா தரிசனம் முடிந்து  திரும்பும்போது  புண்யாத்மா வாக  துடைத்து விட்ட  கண்ணாடியாக திரும்பிச்  சென்றாள்.  ஞான சூரியன்  பார்வையே  சர்வ  பாப த்தையும் த்வம்சம்   செய்து விடுமே.  சகலபுண்ணியமும் கிடைத்துவிடுமே. !

 

No comments:

Post a Comment