Sunday, May 31, 2020

ANANDHA RAMAYANAM



ஆனந்த ராமாயணம்  J K  SIVAN 


                    12  சுக்ரீவா  இனி நீ  நாம்  நண்பர்கள்.

 இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியில் கூட,  நேற்று பட்டப்பகலில் நடந்த ஒரு சம்பவத்தை நாலு  பத்திரிகைகள் நாலு விதமாக  எழுதுகிறது.  செய்திகளை  திரிக்கிறது.  ஐந்தாயிரம்  ஏழாயிரம் வருஷம் முன்னால்  ஒரு வசதியும் இல்லாத காலத்தில் நடந்ததை ஒவ்வொரு ராமாயணமும் வேறு மாதிரியாக கொஞ்சம் மாற்றி சொல்வதால் அது தப்பு, நடக்காத ஒரு சம்பவம், கட்டுக்கதை, என்றா  சொல்லமுடியும்?  இன்றும்  நிறைய  தடயங்கள், நிரூபணங்கள் அங்கங்கே இருக்கிறது.

மாரீசன் மானாக  ஓடியபோது  அவன் காலில் இருந்து நூபுரம் விழுந்த இடம் கௌதமி  ஆற்றங்கரையில்  இன்றும் நூபுர கிராமமாக இருக்கிறது. ராமபாணத்தால்   மாரீசன்  ஜென்ம சாபல்யம் அடைந்த இடம்  சாபல்ய கிராமம் என்று இருக்கிறது. சீதையை சுற்றி  பர்ணசாலையை சுற்றி லக்ஷ்மணன் கிழித்த  ஆழமான  லக்ஷ்மண் ரேகா கோடு இன்றும்  ஆறாக ஓடுகிறது.  மலை உச்சியில் ராமர் சீதை படுத்த இடம்.  ராமசாயாகிரி  என்று உள்ளது. 

லக்ஷ்மணன்  ராமரைத்  தேடி  ஓடி  வந்து  நடுக்  காட்டில் சந்தித்து  விஷயம் சொல்ல இருவரும் பர்ணசாலை திரும்பி வந்து  சீதையை காணாமல்  தேடுகிறார்கள்.  ஜடாயு வை  குற்றுயிரோடு  மரணத்தருவாயில்   வழியில் கண்டபோது  ராவணனால்   சீதை கடத்தி செல்லப்பட்டதை, தான்  போரிட்டு  அவளை மீட்க முயன்றதை சொல்லி மாள்கிறது.  அதற்கு அந்திம கிரியைகள்  செய்து முடித்து  தெற்கு  நோக்கி  நடக்கிறார்கள். 

பார்வதிக்கு  ஒரு  சந்தேகம்.   ராமர் விஷ்ணுவாயிற்றே  மானுட அவதாரம் எடுத்து மனைவியை தேடி வருத்ததோடு அலைகிறாரே , உண்மையாகவே  அவருக்கு சீதை எங்கே  என்று தெரியவில்லையா, வருத்தமா, சோகமா  நடிப்பா என்று சோதிக்க சீதையாக வேஷம் பூண்டு   தண்டகாரண்யம் வருகிறாள். ராம லக்ஷ்மணர்கள் சீதையை தேடி அலையும்போது எதிரே சீதை வருகிறாள்

''ராமா எதற்கு உங்களுக்கு  வருத்தம்.  இதோ ஜானகி நான் எதிரே இருக்கிறேனே'' என்கிறாள் பார்வதி. 

'' அம்மா  நீ  யார்? நிச்சயம்  சீதை இல்லை என்று எனக்கு தெரியும் என்கிறார்  ராமர் 
உமாதேவி  லஜ்ஜையோடு  தனது செயலுக்கு வெட்கி,  அவரை வணங்கி தான் யாரென்று உணர்த்துகிறாள். அந்த இடம் இன்றும்   ''த்வம் லஜ்ஜாபுரம் ''என்று விளங்கி அங்கே  தாயார் பெயர்  த்வங்காம்பிகை. 

எதிர்ப்பட்ட சில ராக்ஷஸர்களை வதம் செய்து பிரம்மாண்டமான   கபந்தன் எனும் ராக்ஷஸனை சந்திக்கிறார்கள். அவர்களை தன்னுடைய  காத தூரம்  நீண்ட கரங்களால் பிடித்து விழுங்க முற்பட அவனை ராமர் பாணத்தால்  கொல்கிறார் . ஒரு காலத்தில் சாபம் பெற்ற  கந்தர்வன் ஒருவன் கபந்தன் உடலிலிருந்து எழுகிறான். ராமரை வணங்குகிறான். 

''ஸ்ரீராமா,   அஷ்டாவக்ர ரிஷியால் சபிக்கப்பட்டு ராக்ஷஸனானேன். உங்கள் வரவால் நான் மீண்டும் பழைய உரு பெறுவேன் என்று சாபவிமோசனம் சொன்னபடி நடந்துவிட்டது. ராகவா, நான் இந்த காட்டில் பல வருஷங்கள் இருப்பதால் சில விஷயங்கள் சொல்கிறேன்.  இந்த வழியாக நேரே கிழக்கில் சென்றால் மதங்க ரிஷி ஆஸ்ரமம்  வரும். அங்கே  சபரி என்பவள் வெகுகாலம் தங்களை தரிசிக்க காத்திருக்கிறாள். அவள் சீதையை மீட்டு வரும் மார்க்கம் சொல்லுவாள்''  என்று  வணங்கி விண்ணுலகம் செல்கிறான்.

ராமர் வருவார் என்று தினமும்  எதிர்பார்த்து கனிவர்கங்களை சேர்த்து வைத்து காத்திருக்கும் சபரி என்ற முதியவள் ராமலக்ஷ்மணர்களை தரிசித்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறாள். 

''ராகவா,  இங்கிருந்து தெரியும் காட்டின் இடப்புறம் ஒரு மலை தெரியும் அதற்கு முன்பு   ஒரு  பெரிய  ஆறு ஓடும். அது தான் பம்பை ஆறு.  அதை தாண்டி தான் அந்த  ருஷ்யமுக பர்வதம் உள்ளது.  அந்த மலை  உச்சியில்  சுக்ரீவன் என்ற  வானர அரசன் மந்திரிகளோடு  வசிக்கிறான். அவனோடு நட்பு கொண்டால் நீங்கள் சீதையை மீட்டு வர உதவி செய்வான்.  இனி என் பூலோக வாழ்வின் அர்த்தம் நிறைவேறி விட்டது. சந்தோஷமாக நான் இப்போதே அக்னிப்ரவேசம் செய்வேன்'' 

அவ்வாறே  சபரி மறைய ராமலக்ஷ்மணர்கள்  பம்பா நதியை அடைந்து ஸ்னானம் செய்து ரிஷ்யமுக பர்வம் நோக்கி நடக்கிறார்கள். 

''பார்வதி,  இனி  உனக்கு  நான் ஆனந்த  ராமாயணத்தின் எட்டாவது சர்க்கத்தில் உள்ள விஷயங்களை சுருக்கமாக சொல்கிறேன்''  என்று  பரமேஸ்வரன் மேலே தொடர்கிறார். . 

''ஹனுமான், சீக்கிரம்  இங்கே வா.  அதோ பார்  யார் அந்த இருவர்  நமது ரிஷ்யமுக பர்வதத்தை  நோக்கி நடந்து  வருபவர்கள்?  மலை யடிவாரம் சென்று யார் அவர்கள் எதற்கு கையில்  தனுசு அஸ்த்ரங்களோடு இங்கே வருகிறார்கள். எதிரிகளாக இருந்தால் நாம் ஜாக்கிரதையாக  எதிர்த்து தாக்க  தயாராக
 இருக்கவேண்டாமா ?அருகே சென்று விசாரி.  எதிரிகள் என்றால் சைகை காட்டு. நாங்கள் மலை உச்சியில் உன்னை கவனித்துக் கொண்டிருப்போம். நண்பர்கள் என்றால் புன்னகை செய். புரிந்து கொள்வோம்.'

எதிரே வந்த பிராமண பிரம்மச்சாரி மிகவும் இனிய ஸ்வபாவம் கொண்டவனாக வினயமாக பேசுகிறான், என்று மகிழ்ந்த ராமர் 

''ஹனுமா, நாங்கள் உங்கள் அரசன் சுக்ரீவனை சந்தித்து அவனது நட்பை கோரி, அவன் உதவியுடன் ராவணன்  கடத்திச்சென்ற சீதையை மீட்க  அவனை சந்திக்க வந்திருக்கிறோம்'' என்கிறார்.  

ஹனுமான்  மலை உச்சியை பார்த்து  புன்னகைக்கிறார். 
''ராம லக்ஷ்மணர்களே , நீங்கள்  ஏற்கனவே   களைத்திருக்கிறீர்கள். மலை ஏறவேண்டாம். என்  தோளில்  அமருங்கள், நான் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறேன் என்று அவர்களை தூக்கி செல்கிறார் ஹனுமான்.
சௌகர்யமாக ஒரு மர  நிழலில் அவர்களை  அமர்த்தி சுக்ரீவனிடம் சென்று  ராம லக்ஷ்மணர்கள் யார், எதற்கு வந்தனர் என்பதை  சொல்லி  ராமரிடம் அவனை  அழைத்து  வருகிறான். அக்னி வளர்த்து அக்னி சாட்சியாக இருவரும் நட்பை உறுதி செய்து  கொள்கிறார்கள்.

பிறகு  பேச்சுக்கிடையே  தனது சங்கடத்தை சுக்ரீவன் விளக்குகிறான். 

''ஸ்ரீ ராமா,  மயனின் பிள்ளை துர்மதன் என்ற ராக்ஷசன் என் அண்ணன்  வாலியை யுத்தத்திற்கு அழைக்க, கிஷ்கிந்தையில் ஒரு குகை அருகே  யுத்தம் நடக்க  இருவரும் அந்த குகையில் நுழைந்தனர்.   நீ  இங்கேயே  இரு என்று வாலி   என்னிடம் சொல்லி,  ஒரு மாத காலமாகியும் காத்திருந்து  ஒருவராவது குகையிலிருந்து  வெளியே வரவில்லை.  குகை வாயிலிருந்து ரத்தம் ஆறாக பாய்ந்து வந்தது .    ஒருவேளை வாலியை அந்த ராக்ஷஸன் கொன்றிருப்பானோ என்று பயந்தேன்.  அந்த நேரம்  கிஷ்கிந்தையை  வாலி இல்லாததால் எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களோடு போராட நான் என்ன செய்வது என்று யோசித்து,  குகையின் உள்ளே இருந்து  இந்த நேரம் பார்த்து   வாலியைக்  கொன்ற  துர்மதன் வெளியே வராமல் இருக்க ஒரு பெரிய மலையால் குகை வாயிலை அடைத்துவிட்டேன். என் வரவைக் கண்ட எதிரிகள் ஓடிவிட்டார்கள்.  வானர மந்திரிகள் யோசித்து இனி வாலி இல்லை என்பதால் என்னையே கிஷ்கிந்தா அரசனாக முடி சூட்டினார்கள்.    ஆனால்  நடந்தது வேறு.  

வாலி தான் தர்மதனை கொன்றவன் . குகையை விட்டு வெளிவரமுடியாமல் மலை தடுத்ததை கண்டு அதை உதைத்து வெளியே வந்தான். நான் அவனுக்காக எ காத்திருக்காமல் குகை வாயிலை மூடியதில்  அசாத்திய கோபம். கிஷ்கிந்தையில் நான் அரசனாக ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்ததை கொண்டு வெகுண்டு என்னை கொல்ல துரத்தினான்.  நான் ஓடினேன்........

நாம் சுக்ரீவனை தொடர்ந்து செல்வோம்..

No comments:

Post a Comment