Wednesday, March 18, 2020

NARAYANEEYAM




ஸ்ரீ நாராயணீயம் 
 3 வது  தசகம் 
                                                                                   பக்தியின்  பெருமை 

இந்த  பத்து  ஸ்லோகங்களை படித்தபிறகு உங்களுக்கு ஒரு பக்தன் எப்படி தன்னை முழுதும்  கிருஷ்ணனிடம்  அர்பணித்துக் கொள்கிறான்/ கொள்ளவேண்டும்,  என்று  மேல்பத்தூர்  நாராயண நம்பூதிரியின்  3வது தசாக  பத்து ஸ்லோகங்கள் சொல்லித்தரும். ரொம்ப மனதைத்  தொடும் ஸ்லோகங்கள்.

पठन्तो नामानि प्रमदभरसिन्धौ निपतिता:
स्मरन्तो रूपं ते वरद कथयन्तो गुणकथा: ।
चरन्तो ये भक्तास्त्वयि खलु रमन्ते परममू-
नहं धन्यान् मन्ये समधिगतसर्वाभिलषितान् ॥१॥

குருவாயூரப்பா, நீ  வரதன், இல்லை, இல்லை,  வரம் தருவதில் ராஜன், வரதராஜன். உன் பக்தர்கள் அதனால்  பெரும் பாக்கியசாலிகள். ஒன்று கேட்டால், அதோடு   கேட்காமலேயே  ஒன்பது சேர்த்து  நீ  கொடுப்பாயே . 


குருவாயூரப்பா, உன் கோவிலில்  நாராயணா  என்ற ஒலி கேட்காத  நேரமே  எனக்கு தெரிந்து இல்லவே இல்லை.  ''அம்மே நாராய ணா'' என்று  உன்னை  தாயாகவும் தந்தையாகவும் அதனால் தானே  கோடானு கோடி பக்தர்கள் ஒருசேர கூப்பிட்டு உன்  வாசலில்  நிற்கிறார்கள்.  உன்  சரித்திரங்கள், லீலைகள் கேட்க கேட்க  இன்பம் பரவசம்  மேன் மேலும் உண்டாகிறதே.  உன் நினைவே  நெஞ்சு நிறைந்து வாழும் வாழ்க்கையைப் போல் இன்பமான, சுகமான அனுபவம் வேறு ஏதாவது  உண்டா?  தேவைகளே தெரியவில்லை. எல்லாம்  நீயே  தானாக  அளித்துவிடுகிறாயே.

गदक्लिष्टं कष्टं तव चरणसेवारसभरेऽ-
प्यनासक्तं चित्तं भवति बत विष्णो कुरु दयाम् ।
भवत्पादाम्भोजस्मरणरसिको नामनिवहा-
नहं गायं गायं कुहचन विवत्स्यामि विजने ॥२॥

ஹே  மஹா விஷ்ணு,  குருவாயூரப்பா  உண்ணி கிருஷ்ணா,  என் உடலில் நோய் என்னை வாட்டுகிறது அது   உன் தாமரைத் திருவடியை  மனமுவந்து  ஆராதித்து  நான்  அடையும்  சந்தோஷத்தை  கெடுக்காமல் இருக்க வேண்டும். என் மேல் கருணை வையப்பா  கருணாகரா, என் நோயை மறந்து, உன் எதிரே சௌகர்யமாக   எங்கோ ஒரு இடத்தில் தனித்து அமர்ந்து திருப்தியோடு உன் திருவடிகளைத்  துதித்து  உன் எண்ணற்ற  நாமங்களை  பஜித்து, ஸ்மரித்து நான்   தியானிக்கவேண்டும். 

कृपा ते जाता चेत्किमिव न हि लभ्यं तनुभृतां
मदीयक्लेशौघप्रशमनदशा नाम कियती ।
न के के लोकेऽस्मिन्ननिशमयि शोकाभिरहिता
भवद्भक्ता मुक्ता: सुखगतिमसक्ता विदधते ॥३॥

என் பிரபு,  உன் கருணை இருக்கும்போது உலகில்  வேறு எது யாருக்கு  தேவை?  எல்லாமே  பக்தர்களை  அடைந்து விடுமே ?  என் வியாதி  உபாதையை தீர்ப்பது உனக்கு  ஒரு பெரிய  காரியமா? ஒருவரா இருவரா.  அடேயப்பா, எண்ணற்ற உன் பக்தர்கள்  தமது துன்பங்கள், கஷ்டங்கள், நீங்கி  உன் அருளால் ஆனந்தமாக  உன்னை நன்றியோடு நினைத்து வணங்கிக்  கொண்டிருக்கிறார்களே!

मुनिप्रौढा रूढा जगति खलु गूढात्मगतयो
भवत्पादाम्भोजस्मरणविरुजो नारदमुखा: ।
चरन्तीश स्वैरं सततपरिनिर्भातपरचि -
त्सदानन्दाद्वैतप्रसरपरिमग्ना: किमपरम् ॥४॥````

கிருஷ்ணா, உன்  பிரதம பக்தன்  நாரதனைப் பற்றி நினைக்கும்போது எனக்கு  அவரைப்போல நம்மால் ஆக முடியவில்லையே  என்று தோன்றும்.  திரிலோக சஞ்சாரி என்று மூவுலகும் சென்று திரிந்தாலும் ஒரு கணமாவது உன் நாமம் பஜிக்க  மறந்ததுண்டா?  நாரதர் முதலான உன் பக்தர்கள்  துக்கம், துன்பம் என்றால்  என்னவென்றே  தெரியாதவர்கள். உன் திருவடியைத் தவிர வேறே ஏதாவது பற்றி நினைக்க நேரமோ,  மனதில் இடமோ இல்லாதவர்கள்.  பூர்ண ஞானிகள். உன்னோடு  மனதில் இரண்டறக்  கலந்தவர்கள்.   க்ரிஷ்ணானந்த வாசிகள். இதற்கு மேல் என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில்?


भवद्भक्ति: स्फीता भवतु मम सैव प्रशमये-
दशेषक्लेशौघं न खलु हृदि सन्देहकणिका ।
न चेद्व्यासस्योक्तिस्तव च वचनं नैगमवचो
भवेन्मिथ्या रथ्यापुरुषवचनप्रायमखिलम् ॥५॥
என்னப்பா  குட்டி கிருஷ்ணா,  உன் மேல் எனக்கு பக்தி பிரவாஹம் பெருகட்டும்.  அந்த ப்ரவாஹம்  பெரும் வெள்ளமாக  என் நோயை, துன்பத்தை, அடித்துச் செல்லட்டும். நான்  சுதந்திரமானவனாகிவிடுவேன்.  உன்மேல் பக்தி வைப்பது  வீணல்ல.  எனக்கு சந்தேகமே துளியும் இல்லை.  கைமேல் அது பலன் கொடுக்குமே . வியாசர் போன்ற ரிஷிகளின் வாக்கு பொய்யா?  ஆம்  என்றால்,  உன் வார்த்தைகள் , வேதங்களின் கூற்று  எல்லாமே  அப்புறம்  பொய் தான்... தெருவில் பொறுப்பற்று திரியும் சோம்பேறிகளின் வார்த்தைகளாகி விடுமே அவை ?

भवद्भक्तिस्तावत् प्रमुखमधुरा त्वत् गुणरसात्
किमप्यारूढा चेदखिलपरितापप्रशमनी ।
पुनश्चान्ते स्वान्ते विमलपरिबोधोदयमिल-
न्महानन्दाद्वैतं दिशति किमत: प्रार्थ्यमपरम् ॥६॥
வாதபுரீசா, உன்னை பணிவது, வணங்குவது, பக்தியோடு போற்றுவது எல்லாம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு  இனிமையான  ஒரு தனி உரிமை.  இனிமை என் வார்த்தைகளில் இல்லை. உன்  உன்னத தெய்வீக  லீலைகளில் இருப்பதால் வார்த்தைகள் அதைச்  சொல்லும்போது இனிக்கிறது. அது  மேலும் மேலும் பெருகும்போது பக்தன் துன்பங்களை , துக்கங்களை எல்லாம் இழக்கிறான் என்பது தெள்ளத்  தெளிவான உண்மை. அந்த பக்தி அவனுக்கு  பூரணானந்தத்தை அல்லவோ பரிசளிக்கிறது. ஆத்ம ஞானம்  அவனை சிறப்பிக்கிறது.  இதற்கு மேலும் ஒருவனுக்கு  தேவை  என்ன இருக்கிறது   நீயே  சொல்?

विधूय क्लेशान्मे कुरु चरणयुग्मं धृतरसं
भवत्क्षेत्रप्राप्तौ करमपि च ते पूजनविधौ ।
भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी-
परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते ॥७॥

என்  குட்டி கிருஷ்ணா,   என் துன்பங்கள் என்னை விட்டு விலகச்செய்  கண்ணா.  இரு கால்களையும் வீசி நான் ஜம்மென்று உன் கோவிலுக்கு அடிக்கடி நடந்து வரவேண்டும் அப்பா. என் கரங்கள் உன்னை கூப்பி வணங்கவேண்டும், உன்னை வழிபடவேண்டும்.  என் கண்கள்  ஆசை தீர உன்  காந்த  சக்தி நிறைந்த திவ்ய ரூபத்தை முழுமையாக தரிசிக்கவேண்டும்.   அப்பாப்பா,   என் நாசியை உன் திருவடிகளில் அர்ச்சிக்கும்  துளசி மாலைகளிலிருந்து வீசும் நறுமணம் துளைக்கிறது . நான் ஆனந்தத்தில் திளைக்கிறேன்.  என் செவிகளில் உன் திவ்ய சரித்ரம்,  மஹிமை, மகோன்னத  லீலைகளை பற்றிய  விஷயங்கள்  நிறைய  தேனாக  பாய்கிறது . 

प्रभूताधिव्याधिप्रसभचलिते मामकहृदि
त्वदीयं तद्रूपं परमसुखचिद्रूपमुदियात् ।
उदञ्चद्रोमाञ्चो गलितबहुहर्षाश्रुनिवहो
यथा विस्मर्यासं दुरुपशमपीडापरिभवान् ॥८॥
கலியுகத்தின்  கண்கண்ட  என் தெய்வமே,  என் மனது கொந்தளிப்பில் இருக்கிறது. மன , உடல் ரீதியில் உளைச்சல், வலி, துன்பத்தால் வாட்டுகிறது.   உன் திவ்ய சுந்தர ரூபம் என் மனதில் பதியட்டும், ஞானானந்தம் நான் பெறவேண்டும்.  அது என் பக்தியை பன்மடங்கு பெருக்கும். ஊக்குவிக்கும்.  உடல் மயிர்கூச்செறியட்டும் , புளகாங்கிதமடையட்டும், கண்களில் ஆனந்த பாஷ்பம்  ஊற்றாக வடியட்டும் . இனம்புரியாத சொல்லவொண்ணா இன்பத்தில் மனம் நிலைக்கட்டும். ஆஹா,   நினைத்தாலே  இனிக்கிறதே இந்த  எண்ணம்.  அதை நினைக்கும்போது  என் வியாதி, நோய், நொடி, வருத்தம்  எல்லாம்  தூசு.

मरुद्गेहाधीश त्वयि खलु पराञ्चोऽपि सुखिनो
भवत्स्नेही सोऽहं सुबहु परितप्ये च किमिदम् ।
अकीर्तिस्ते मा भूद्वरद गदभारं प्रशमयन्
भवत् भक्तोत्तंसं झटिति कुरु मां कंसदमन ॥९॥

குருவாயூர் கிருஷ்ணா, குட்டா,  எனக்கு ஒரு ஆச்சர்யம். உன்னிடம் சொல்கிறேன். கேள். உன்னை கொஞ்சமும் நினைக்காதவர்கள், உலக வாழ்க்கையே பிரதானமாக கொண்டவர்கள் எப்படி  சந்தோஷமாக வாழ்கிறார்கள்?  வரதப்பா,  நான் உன் தீவிர பக்தன். எனக்கு ஏன் இத்தனை கஷ்டம்.  ஏன்  எதற்காக? இது உனக்கு பாரபக்ஷமாக தோன்றவில்லையா? அதனால்  உன் புகழ் குன்றிவிடாதா?   கம்சன் போன்ற  பெரிய பெரிய  ராக்ஷஸர்களையே  தீர்த்து கட்டியவன் நீ ,   எனது இந்த சில்லறை வியாதிகளை  போக்குவது உனக்கு  ஒரு பொருட்டா?  என்னை உன் சிறந்த பக்தர்களில் ஒருவனாக  ஆக்கி விடு. 

किमुक्तैर्भूयोभिस्तव हि करुणा यावदुदिया-
दहं तावद्देव प्रहितविविधार्तप्रलपितः ।
पुरः क्लृप्ते पादे वरद तव नेष्यामि दिवसा-
न्यथाशक्ति व्यक्तं नतिनुतिनिषेवा विरचयन् ॥१०॥

கிருஷ்ணா,  ரொம்ப ரொம்ப கெஞ்சிக் கேட்கிறேன். என்னை மன்னித்து விடப்பா.   இப்படி நான் புலம்பி என்ன பயன்?  வரதராஜா, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேனடா உண்ணி  கிருஷ்ணா,  உன் கருணை என் மீது பாயும் வரை, இனிமேல் நான்  கப்சிப்.   என் புலம்பல்களை இப்போது  முதல்  விடப்போகிறேன். அதுவரை  பேசாமல் சாஷ்டாங்கமாக  இதோ என் எதிரிலே  தோன்றும் உன்  திருவடிகளை பிடித்துக்கொண்டு   உன் காலடியில் விழுந்து வணங்கிக்கொண்டே இருப்பேன். உன் பெருமைகளை பாடுவேன், உனக்கு  என்னால் முடிந்த பணிவிடை செய்வேன். சேவை புரிவேன்.  அப்படித்தான்   உன்னை  வழிபடப்போகிறேன். இதை விட சிறந்த வேறு  வழி ஒன்றுமே  இல்லை. 

நாராயணீயம் தொடரும்.....

No comments:

Post a Comment