Saturday, March 28, 2020

KALABAIRAVASHTAKAM




காலபைரவாஷ்டகம் J K SIVAN
ஆதி சங்கரர்
                                                               
            அட்டகாச சிரிப்பு 
                           
ரிக் வேத காலத்திய ஹிந்துக்களுக்கு  தெரிந்த கடவுள் ருத்ரன் என்கிற சிவனும் விஷ்ணுவும் மட்டுமே.. பின்னர் தனித்தனியே இவர்கள் பக்தர்களால் சைவம் வைஷ்ணவம் என பிரித்து இந்துக்களின் இரு கண்களாக வழிபடப்பட்டனர். சிவன் என்றால் சிவந்தவன். ருத்ரன் என்றால் கர்ஜிப்பவன், ஒளியும் ,வீரமும் கோபமும் கொண்டவன்.

சுக்ல யஜுர்வேதத்தில் சத ருத்ரீயம் என்று ஸ்லோகங்கள் சங்கரன் என்று ருத்ரனை, நமசிவாய என்று அவன் புகழ் பாடுகிறது. நமக்கு அவனிடம் வேண்டுவது என்ன என்று பட்டியல் போட்டு சமகம் என்றும் அவனைப்பற்றி வணங்க நமகம் என்றும் 11 அனுவாகங்களும்  சொல்லி யிருக்கிறது. அவசியம் எல்லோரும் படித்து அர்த்தம் புரிந்து உரிய முறையில் முறைப்படி கற்றுக்கொண்டு தினமும் உச்சாடனம் செய்யவேண்டிய ஒரு பிரார்த்தனை ஸ்தோத்ரம் இது.  சில  வருஷங்கள்  எத்தனையோ சிவாலயங்களுக்கு  SMART  எனும் ஸ்ரீ மஹா ருத்ரம் டிரஸ்ட் குழுவில் ஒருவனாக  சென்று ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்திருக்கிறேன்.  ஏதோ சில வருஷங்கள் அந்த பாக்யம் எனக்கு கிடைத்தது.

என் அம்மா   நன்றாக பாடுபவர். அவர் அடிக்கடி பாடும் ஒரு பாடல் .   இந்த சிவன் பாடலை எழுதியவரும் ஒரு சிவன் தான். ஸ்ரீ பாபநாசம் சிவன். 
சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்? சதா
சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? (சிவனை)

மௌன சித்தர்கள் முதல் ஸனக முனிவர்கள் தம்
வசத்தில் அனுதினமும் வசித்தருளும் பரம (சிவனை)

மன பயங்கரம் கொண்டு அமரர் வெருண்டு விழ
மருட்டி வந்த விடத்தைத் திரட்டியுண்டு வெம்பிக்
கனைத்தலறிய தெய்வக்கன்னியர்கள் திருமடங்கலத்தைச்
சுந்தரமிசை நிலைக்கச் செய் தருள் பரம (சிவனை)

சிரித்துத் திரிபுரத்தை எரித்தழித்தும் தக்கன்
சிரத்தை அறுத்திட்டு அழல்தனில் ஒழித்தும் அஹங்க
ரித்து முனிவர் விட்ட வரிப்புலியைக்கொன்று தோல்
உரித்து இடையில் தரித்த நிருத்தனெனும் பரம (சிவனை)

இரும்புத்தம்பத்தைச் செல்லரித்திடுமோ? நெருப்
பிடையிற்புழு வந்துயிர் தரித்திடுமோ? மன
வருத்தமின்றிக் கண் மலர் பதித்துப் பூசனை செய்த
மாலுக்கு நேமி தந்து பாவித்து அருள் புரிந்த (சிவனை)  

திருமூலர் வெகு அழகாக ஒரு மந்திரம் சொல்லியிருக்கிறார்:

''தேவர் பிரான் தன்னை திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார், அறிந்தபின்
ஓதுமின், கேண்மின், உணர்மின், உணர்ந்து பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.''

தேவாதி தேவன் சிவன் யார், அவனது சக்தி, பெருமை, காருண்யம், கம்பீரம் என்று எவன் ஒருவன் அறிந்து கொள்கிறானோ, அவன் அவ்வாறு அறிந்தபின் வாய் ஓயாமல் சிவனை பஜிப்பான், சிவனைப்பற்றி என்னவெல்லாம் அறிந்து கொள்ள முடியுமோ அவற்றைக்  கேட்பான், தனக்குள்ளே சிவனை உணர்வான், பின்னர் அவனே சிவனாகி உயர்ந்த நிலையை அடைவான்.

நான்கு வேதங்களின் மையக்கருத்தான, உட்பொருளான சிவனை எவன் மனமுருகி அன்போடு கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாக பெருக ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை விடாது சொல்லி உபாசிக்கிரானோ அவன் வாழ்வில் நல்ல மார்கத்தில் உய்வான் என்கிறார் திருஞான சம்பந்தர்.

''காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.''

இனி  ஆதி சங்கரரின்  காலபைரவாஷ்டகத்தில் 7வது ஸ்லோகம்

अट्टहासभिन्नपद्मजाण्डकोशसंततिं
दृष्टिपातनष्टपापजालमुग्रशासनम् ।
अष्टसिद्धिदायकं कपालमालिकाधरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥७॥

அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்.
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்.
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.  
ஆதிசங்கரரின் கால பைரவாஷ்டகம் எழுத ஆரம்பித்ததிலிருந்து மனதில் ஒரு புத்துணர்ச்சி எழும்பியது. இந்த ஏழாவது ஸ்லோகத்தில் கண்முன்னே மஹா கால பைரவரை கொண்டுவந்து நிறுத்துகிறார் சங்கரர்.  . 

கோபத்தில் சிரிப்பது  மஹா வீரர்களால் தான் முடியும்.  ''ஹா ஹா ஹா''   என்று  உயர்ந்து நின்று, இடுப்பை  கைகளில் தாங்கி, சிரத்தில்  ஜடாமகுடத்திலிருந்து பின்னோக்கி கங்கை வழிந்தோட, அகண்ட மார்பில் கழுத்தை சுற்றி அணிந்த  நாகம் முப்புரி நூல்  நடுவே  படமெடுத்த தலையை காட்ட, இடுப்பில்  புலித்தோல் பளபளவென்று ஒளிவீச  காது குண்டலங்கள் கழுத்து நிறைய  ருத்திராக்ஷ மாலையோடு வெண்ணீறணிந்த  நெற்றிக்கண்ணின்  நடுவே  அக்னிக்கண்  திறந்து விட்டதே. சிவன்  சிரிக்கிறான்.  அந்த சிரிப்பின் விளைவை இதோ எதிரே  த்ரிபுரம்  அனுபவிக்கப்போகிறது.
 காலம்  காலமாக அசையாத கல்லும் வெட்கப்படும் சிலையாக அசைவன்றி பனிமலையில் மோனத்திலும் காணப்படுபவர். தாமரை இலை நீர்க்கொப்புளமாக பட்டும் படாமலே அநித்தியமான அண்ட மாயலோகங்களையும் சின்னா பின்னம் பண்ணக்கூடிய சக்தியுடையவராகவும்  சிஷ்ட பரிபாலன துஷ்ட சம்ஹார மூர்த்தியாகவும், பாபிகளை அழிப்பவரும், கபாலங்களால் ஆன மாலையை மலர்மாலையாக அணிந்தவரும் கையில் கபாலமேந்தி கருணை பொழியும் காலபைரவா. உன்னை சர்வ புண்ய க்ஷேத்ரமான காசி மாநகர அதிபதியாக வணங்குகிறேன். அடி பணிகிறேன்   



No comments:

Post a Comment