Thursday, April 18, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J  K  SIVAN 

பகவத் கீதை 


                                                             அர்ஜுனன் கலக்கம் 

அர்ஜுனன் எதிரே பார்க்கிறான். ''எவ்வளவு காலமாக  இந்த  அருமையான  பொன்னான நேரத்திற்காக  காத்திருந்தேன். நொடியில் உங்களை எல்லாம் யமலோகத்துக்கு அனுப்புகிறேன் என்று கௌரவர்களை வெல்லும் கொல்லும்  சந்தோஷத்தோடு  பார்த்தவன்,  என்ன பார்த்தான்?? அதனால் தான் அவன் பார்த்தனோ?

''கிருஷ்ணா, கிருஷ்ணா,  ஐயோ!    இதென்ன   என் எதிரே  என்  தந்தைமார்,பாட் டன்மார், ஆசான்கள், மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள் மற்றும் பல நலன் விரும்பி
களை  அல்லவோ  காண்கிறேன். (1:26)  இவர்கள் என் எதிரிகளா? என்னால் கொல்லப்படவேண்டியவர்களா? எனக்கு  உடல் தளர்கிறதே,  மனம் தளர்ச்சியடைகிறதே.  கை கால் எல்லாம்  துவள்கிறதே. இவர்கள் மேல் எனக்கு கோபம் வரவில்லையே, பாசம் அல்லவோ வளர்கிறது.. (1:27

 "ஓ! கிருஷ்ணா, போரிடும் ஆவலில் ஒன்று கூடியிருக்கும் எனது சொந்தங்களைக் கண்டு என் உறுப்புகள் சோர்வடைகின்றன, எனது வாய் உலர்ந்து போகிறது. (1:28)  எனது உடல் நடுங்குகிறது, எனக்கு மயிர் கூச்சம் ஏற்படுகிறது காண்டீவம் எனது கைகளில் இருந்து நழுவுகிறது. மேலும் எனது தோலும் எரிகிறது. (1:29) 

 என்னால் நிற்க முடியவில்லை; எனது மனம் அலைபாய்கிறது. ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் எதிர்மறையான {விபரீத} சகுனங்களையும் காண்கிறேன்.  1:30  

உடம்பு  நடுங்குகிறது, மயிர்க்கால்கள் குத்திடுகிறது , தலை சுற்றுகிறது, உடம்பு திகு திகு வென்று எரிகிறது, கண்களில் ஜலம் பொங்குகிறது, மனது மயங்குகிறது, நாக்கு வரள்கிறது,  கெட்ட  சகுனங்கள் கண்ணில் படுகிறதே, நிற்கமுடியாமல் கால்கள்  தள்ளாட  விழுந்துவிடுவேன் போலிருக்கிறதே,   கிருஷ்ணா  எனக்கு  இவர்களைக் கொன்று அப்படி ஒரு வெற்றி வேண்டவே வேண்டாம். சந்தோஷம், பெருமை, ராஜ்ஜியம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.  அவர்கள் என்னைக் கொல்லட்டுமே , நான் அவர்களை கொல்லத்  தயாரில்லை.  இவ்வளவோ சொந்தங்களை, பந்தங்களை கொன்று என் சகோதரர்கள் திருதராஷ்டிர வம்சத்தை கொன்று அதால் எனக்கு வெற்றியா, ஒரு  ராஜ்யமா?   ஏதோ உட்பூசல்.   அதற்கு உயிர்ப்பலியா? அவர்கள்  என்ன பாபம் பண்ணினார்கள்? இவர்களைக் கொன்று ஒரு சந்தோஷமா? தவறு செய்தார்கள் என்பதற்காக ஒரு வம்சத்தையேவா  பழி வாங்குவது?  அந்த பாபம்  எனக்கு வேண்டாமே?


நான் வெற்றியையோ, அரசுரிமையையோ, இன்பங்களையோ விரும்பவில்லை. (1:31) ஓ! கிருஷ்ணா,  அரசுரிமை, இன்பங்கள், சுகங்கள் ஆகியவை யாருக்காக எங்களால் விரும்பப்பட்டனவோ, அப்படிப்பட்ட ஆசான்கள், தந்தைமார், பாட்டன்கள், தாய்மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள் மற்றும் சொந்தங்கள் ஆகியோர் தங்கள் உயிரையும் செல்வத்தையும் விடத் தீர்மானித்துப் போருக்குத் தயாராக இங்கே அணிவகுத்து நிற்கும்போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அரசுரிமையோ, இன்பங்களோ ஏன் உயிரோ கூட எங்களுக்கு எப்படிப் பயன்படும்? ஓ! மதுசூதனா, இவர்கள் என்னைக் கொல்பவர்களாக இருப்பினும், மூவுலகங்களின் அரசுரிமைக்காககூட நான் இவர்களைக் கொல்ல விரும்ப மாட்டேன் எனும்போது, (இந்தப்) பூமியின் நிமித்தமாக ஏன் கொல்ல வேண்டும்?  ஓ! ஜனார்த்தனா திருதராஷ்டிர வம்சத்தைக்  கொல்வதால், என்ன மனநிறைவை நாங்கள் பெறுவோம்? அவர்கள் பகைவர்களாகக் கருதப்பட்டாலும் கூட, நாங்கள் அவர்களைக் கொன்றால் எங்களைப் பாவமே பீடிக்கும். 1:31-36
] இது போன்ற ஒரு வளமான வெகுமதிக்கான வாய்ப்பின் போதுகூட, இவ்வளவு அன்பானவர்களையும், எனக்கு நெருக்கமானவர்களை நான் கொல்ல மாட்டேன். மாறாக, அவர்களின் அடிகளில் துன்புற்றாலும், நான் அவர்களைத் திருப்பி அடிக்க மாட்டேன்..  எனவே, இரத்த உறவினர்களான திருதராஷ்டிர மகன்களைக் கொல்வது எங்களுக்குத் தகாது. ஓ! மாதவா , எங்கள் சொந்த இரத்த உறவினர்களைக் கொல்வதால் நாங்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? 

ஒரு வம்சத்தை அழிப்பதால்  அந்த வம்ச வழக்கம், நம்பிக்கை, பழக்கம், வாழ்க்கை முறை எல்லாமே தொலைந்துவிடுமே. அதை அழிப்பதால் பாபம் ஒன்றே மிச்சம். பாபம் அதிகரிக்க,  அந்த குலஸ்த்ரீகள்  ஒழுக்கம் இழக்க நேரிடும். சீலம் குறைவதால்  குலக் கலப்படம். குலச்  சிதைவால் முன்னோர்களுக்குண்டான கடன்கள் நின்றுவிடும். அவர்கள் நரகத்திலேயே  உழல நேரிடும்.  இல்லவே இல்லை. இதை   நான் செய்ய மாட்டேன். பேசாமல் துரியோதனாதிகள் ஆயுதங்களால்  என்னை கொல்லட்டும். நான் தடுக்கவோ எதிர்க்கவோ மாட்டவே மாட்டேன்.   

அர்ஜுனன் தொபுகடீர் என்று கீழே  உட்கார்ந்தான்.  காண்டிபத்தையும் அஸ்த்ரங்களையும், வாள்  அனைத்தையும் எறிந்தான். கண்களில் கங்கை.

இப்படி ஏற்படும் வர்ணங்களின் கலப்பு, அந்தக் குலத்தை அழித்தவர்களையும், அந்தக் குலத்தையுமே கூட நரகத்திற்கு இட்டுச் செல்கிறது. அந்தக் குலத்தின் மூதாதையர்கள், பிண்டம் மற்றும் நீர்க்கடன் சடங்குகளை இழந்து, (சொர்க்கத்திலிருந்து) விழுகின்றனர். 1:41

வர்ணங்களிலும், வர்ண விதிகளிலும், கலப்பை ஏற்படுத்தி, குலத்தை அழைப்பவர்களின் இந்தப் பாவங்களினால் குடும்பங்களின் நிலைத்த சடங்குகள் அழிந்து போகின்றன. 1:42

ஓ! ஜனார்த்தனா, குடும்பச் சடங்குகள் அழிந்த போன மனிதர்கள் எப்போதும் நரகத்தில் வசிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே 1:43

ஐயோ, அரசுரிமையின் இனிமைகளில் இச்சை கொண்டு எங்கள் இரத்த சொந்தங்களையே கொல்லத் தயாராகி, பெரும் பாவத்தைத் தரும் வன்செயலைச் செய்யத் தீர்மானித்துவிட்டோமே. 1:44

கையில் ஆயுதம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்கள், ஆயுதமின்றி எதிர்க்காமல் இருக்கும் என்னைப் போரில் கொன்றால், அஃது எனக்குச் சிறப்பானதாகவே இருக்கும்.{அஃது எனக்கு மிகுந்த நன்மையையே செய்யும்}" என்றான் {அர்ஜுனன்}. 1:45

இதெல்லாம்  கவனித்த  சஞ்சயன்  திருதராஷ்டிரனிடம் " மஹாராஜா, போர்க்களத்தில் இவ்வாறு சொன்ன அர்ஜுனன், கவலையால் மனம் பதைத்து, தனது வில்லையும், கணைகளையும் வீசி எறிந்து விட்டுத் தேரில் அமர்ந்தான்" 1:46 என்கிறான்.

இதே  அர்ஜுனன் தானே   யுத்தம் நிச்சயமானபோது யுதிஷ்டிரன் முகம் வெளுத்தபோது தைர்யம், நீதி, நெறி, நேர்மை எல்லாம் சொல்லி யுத்தம் செய்ய தூண்டினவன்.  ஆம். இதெல்லாம் அந்த கபட நாடக சூத்ரதாரியின் திட்டமோ,  அர்ஜுனனை மதி மயங்கச் செய்து, அவனைக் கேள்வி கேட்க வைத்து, அவனுக்கு சொல்வது போல், நமக்கெல்லாம் வாழ்வின் நெறி முறைகள், நீதி, நேர்மை, சத்யம், தர்மம், கர்மம், ஞானம் புகட்ட இப்படி ஒரு சாகசமோ!  
  
சஞ்சயன்  இந்த எதிர்பாராத திருப்பத்தை திருதராஷ்டிரனுக்கு அப்படியே  எடுத்துசொல்கிறான்.
மேலே பார்ப்போம். இனிமேல் தானே கீதை -- கண்ணன் ''திரு வாய் மொழி''  காத்திருக்கிறது நமக்கு
   
  

No comments:

Post a Comment