THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
▼
Thursday, September 20, 2018
NANDHANAR
நந்தனார் தெரியுமா? J.K. SIVAN
நந்தனார் கதை சிலருக்கு தெரியாதிருக்கலாம். சுருக்கமாக சொல்வதானால் ஒரு ஈவிரக்கமில்லாத பிராம்மண மிராசுதாரோ, ஜமீந்தாரோ, நில உரிமை படைத்த பண்ணையாரோ யாரோ ஒருவர் அவரிடம் பணி செய்யும் அடிமையான நந்தனை ப் படாதபாடு படுத்தி அந்த ஏழை தாழ்ந்த குல அடிமை எப்படியோ கடைசியில் சிவ தரிசனம் பெறுகிறார். அவர் ஆசைப்பட்ட து சிதம்பர நடராஜனை ஒரு தடவையாவது தூர நின்று தரிசனம் செய்வது. .
இந்த நந்தனார் தான் பெரிய புராணத்தில் ''திருநாளைப் போவார் நாயனார்'' என்று பெயர் பெற்றது. நாயனார் உண்மையில் எந்தப் பண்ணையாரிடமும் அடிமை சேவகம் பண்ணியவரில்லை. தத்தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாசனம் செய்யப்பட்டிருக்கும்.
நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் 'துடவை' என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை நந்தனாரும் பெற்றுத் தம்முடைய சொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணத்தில் வருகிறது.
நந்தனார் பிறந்ததிலிருந்து மறந்தும் சிவ சிந்தனை தவிர வேறே இல்லாதவர் என்று சேக்கிழார் சொல்கிறார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்துவந்ததாகத்தான் பெரிய புராணம் காட்டுகிறது. நந்தனார் சரித்ரத்தில் வரும் கொடுங்கோல் பிராம்மணரிடம், வேதியரிடம், அடிமைப்பட்டு ஒரே இடத்தில் கட்டிப் போட்டாற்போலக் காலந்தள்ளவில்லை.
நந்தனார் நாடக ப்ரவசன கதாசிரியர் கோபாலகிருஷ்ண பாரதியார் சிவ பக்தியில் ஊறியவர். கேட்கிறவர்கள் நெஞ்சத்தை பக்தியில் கரைக்கும்படியான உயர்ந்த ஈடற்ற எளிய சந்தத்தில் தாளக்கட்டோடு பாட்டுகள் இயற்றியவர். கடைசிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மஹா சிவராத்திரி புண்யகாலத்தில் சுவாமியோடு கலந்து விட்டவர். சிதம்பர நடராஜனை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்.
கோபாலகிருஷ்ண பாரதியார் இனியவர். எல்லோரிடமும் அன்போடும் எளியோரிடம் ரொம்பவும் இளகின சுபாவத்துடன் பழகியவர். உயர் தர நாடக உணர்ச்சி, பக்தியை பாராட்டும் ஸ்வபாவம், மகிழ்வூட்டும் சாமர்த்தியம் எல்லாமும் படைத்தவராக இருந்திருக்கிறார்.
அவர்வாழ்ந்த காலத்தில் அந்தபக்க சீமையில் மிராஸ் பண்ணும்பெரிய நில சுவான்தார்களில் ஒரு சிலர் பிராம்மணர்கள். அவர்கள் தங்கள் பண்ணையில் பணியாட்களாக உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப்படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், எதிர்த்துப் பேசக்கூட சக்தியின்றி, ''இப்படித்தான் நம் ஜன்மம், நமக்கு வேறு வழி கதி மோக்ஷம் கிடையாது '' என்று சகித்துக்கொண்டு பொறுமையாக கண்ணீரோடு வாழ்ந்ததை பாரதியார் ஒருவேளை கவனித்திருக்கலாம்.
கோபாலக்ரிஷ்ண பாரதியாரைப் பொறுத்தவரை, எந்த ஜாதியரானாலும் பக்திச் செல்வத்தை நிறைய பெற்று ஒருவரால் ஈச்வரனுடனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டுவதற்குத்தான் திருநாளைப்
போவார் கதையை சற்று மாற்றி நந்தனார் சரித்திரம் படைத்திருக்கிறார்.
தான் அறிந்தது, எங்கோ தெரிந்து நேர்ந்த அனுபவம், நேரில் கண்ட நிலவரமும் அவருடைய நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பொல்லாத பிராமண மிராசுதார் பாத்திரத்தை வேதியராக தந்திருக்கிறார். பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளாக ஆக்கி அவரிடம் கொடுமைப்படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே சீன்களைக் கற்பனைப் பண்ணி நந்தன் சரித்திர நாடகக் கீர்த்தனையாகப் பாடி விட்டார்.
அப்புறம் கதாகாலஷேபக்காரர்கள், காந்தீய தேசாபிமானிகள் எல்லோரும் அதை காட்டுத் தீயாக பரப்பி விட்டு, நந்தனார் கதா காலக்ஷேபம் தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பாடப் பட்டு, நந்தனார் என்கிற பேர் பிரபலமாகி, மூலமான பெரிய புராணத்துத் திருநாளைப்போவார் பெயர் எல்லோருக்குமே மறந்து விட்டது. '' யார் திருநாளை போவார்?'' என கேட்கச் செய்து விட்டது.
ஒரு சம்பவம் சொல்லி நிறுத்துகிறேன்.
திரிசிரபுரம்த்தி மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை தமிழறிஞர்களில் முக்கியமான ஸ்தானம் வகித்தவர். அவர் பிராம்மணரில்லை. தமிழ்த்தாத்தா உ.வே. ஸ்வாமிநாதய்யரின் குரு.
பிள்ளையவர்கள் குறுகிய ஜாதி மத வேறுபாடு பார்க்காதவர். நடுநிலையாளர்.
பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தைப் படித்துப் பார்த்துவிட்டு , என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு மூலக் கதையை மாற்றியிருப்பது சரியில்லை எனற வருத்தம்.
இந்த விஷயம் தெரியாமல் பாரதியார் பிள்ளையிடம் தனது நந்தன் சரித்திரத்துக்கு ஒரு சிறப்புப் பாயிரம் வாங்கவேண்டுமென்று பிள்ளையின் திருச்சி வீட்டுக்கு சிதம்பரத்திலிருந்து நடந்து போனார். வீடு தேடி வந்த பிராம்மணரை மனம் வருந்த செய்ய வேண்டாமென்று பிள்ளை நாசூக்காக, ''ஐயரே உங்கள் நந்தன் சரித்திரத்தை சங்கீத நாடக பாணியில் பாடியிருக்கிறீர்கள். எனக்கோ சங்கீதம் வராது. பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள வேறு எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம்'' என்று பாரதியை அனுப்பிவிட்டார். பாரதியார் மறுபடியும் ஒருநாள் பாயிரம் வேண்டும் என்று பிள்ளையிடம் வந்தார்.
''ஐயர்வாள், பண்டித, பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த ''நந்தநார் சரித்ர நூல் தானே பிரசித்தி அடையும். என் பாயிரம் அவசியமேயில்லை'' என்று பிள்ளை மறுபடியும் அவரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.
விடாக் கண்டனுக்கேற்ற கொடாக் கண்டன் என்பார்களே அதுபோல பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு ஒரு உச்சி மத்தியான வேளையில் திருச்சியில் பிள்ளைவாள் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை போஜனம் முடிந்து சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருந்தார். அவர் எழுந்திருந்து வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் நந்தன் சரித்திர கீர்த்தனைகள் பாட ஆரம்பித்தார். பொழுது போகவேண்டாமா அவருக்கு.
உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில் பாரதியாரின் நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் தேனென விழுந்து, அதில் இருந்த பக்தி பாவம், ராக பாவம் பூர்ணமாக நிரம்பி வழிந்து காதில் விழுந்ததால் அவரும் அதில் ஆகர்ஷண மாகிவிட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் வழு என்பது இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை இப்போது குறையாக தோன்றவில்லை.
பாடியவருடைய பக்திப் பிரவாகத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய்விட்டது. அந்த பிரவாகத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். ''வருகலாமோ?'' என்ற பாட்டுக்கு பாரதி வந்தார்.
ஏற்கெனவே அந்த வார்த்தையை இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். வருகை, போகை என்று உண்டு. வருதல், போதல் என்றும் உண்டு. அவை இலக்கண சுத்தமான பிரயோகங்கள். இரண்டுமில்லாமல் இதென்ன வருகல்?ஆரம்ப வார்த்தையே சரியாயில்லையே. வரலாமோ? என்றாலே சரியாயிருக்குமே என்று சொல்லியிருக்கிறாராம்.
பிள்ளைகளின் மனத்திரையில் பாரதியாரின் பாட்டில் விவரிக்கப்பட்ட காட்சி நிழல் படமாக ஓடியது. அதோ, நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தரிசனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபத்தோடு இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த சந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ நந்தனார் உருகி உருகிக் கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை, திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய்விட்டது. அவர் மனத்திலும் பக்தி பரவசம் மேலோங்கியது.
இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி கோபாலகிருஷ்ண அய்யரை நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக ''வருகலாமோ?'' என்று நம்மிடமே கேட்பதுபோல் பண்ணி விட்டோமே என்று ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டுக் கொண்டு வாசலுக்கு ஒடி வந்தாராம். வருகலாமோ அவரையும் வரவழைத்து விட்டது. அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்துவிட்டது என்பது உண்மை.
நந்தனார் தமிழ்ப்படம் 70- 75 ஆண்டுகளுக்கு முன்பு சக்கை போடு போட்டது தமிழ் நாட்டில். பிரபல வித்துவான் இசைஅரசு எம்.எம். தண்டபாணி தேசிகர் தானே நந்தனாக நடித்து இந்த காட்ச்சியை ''வறுகலாமோ'' என்று அசாத்தியமாக பாடியிருக்கிறார். இன்று அந்த அற்புத பாடலை மீண்டும் கேட்டேன். நீங்களும் கேளுங்களேன்.. ப்ளீஸ் சொடுக்குங்கள்https://youtu.be/urcPeMDyxmo
No comments:
Post a Comment