Tuesday, September 18, 2018

CHATHURMASYAM








  சாதுர் மாஸ்ய விரதம்   --  J.K. SIVAN 

நமது புண்ய  பாரத தேசத்தில்  ஹிந்து சனாதன தர்ம கோட்பாட்டில்  சாதுக்கள், ரிஷிகள், சந்யாசிகளுக்கு என்று ஒரு சம்ப்ரதாயம் உண்டு. ஒரு நான்கு மாதங்கள்  அவர்கள்  தவம், தியானம், விரதம் உபவாசம் அனுஷ்டிப்பார்கள்.  ஆஷாட மாசம்  சுக்லபக்ஷ 11ம் நாள் ஆரம்பித்து கார்த்திகை  ப்ரபோதினி  ஏகாதசி 11ம் நாள் வரை இந்த நான்கு மாதங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.  ஆங்கிலமாத கணக்கில் கிட்டத்தட்ட  ஜூலை  முதல் அக்டோபர் வரை என்று வைத்துக் கொள்ளலாம். புண்ய நதிகளில் நீராடி சாத்வீக ஒருவேளை உணவு அருந்தி வாழும் காலம்.  கிரஹஸ்தர்கள்  சுப காரியங்கள், கல்யாணம், உபநயனம்  போன்ற வைபவங்களை நடத்துவதுண்டு.  சந்யாசிகள் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோர்  ப்ரவசனங்கள், பூஜை, பஜனை பிரார்த்தனை கூட்டங்கள் நடத்துவார்கள். எல்லாமே லோக க்ஷேமத்திற்காக. ஆஷாட மாச  பௌர்ணமி குரு பௌர்ணமி, வியாச பூர்ணிமா என்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாலு மாதம் இப்போது ரெண்டு மாதமாக குறைந்து விட்டது. நாலு மாசம்  நாலு  பக்ஷமாக செயல்படுகிறது. கால தேச வர்த்தமானத்தில் இதுவும் ஒரு  மாற்றம் தான்.   வியாசபூஜையோடு சாதுர் மாஸ்ய விரதம் தொடங்கும்.

சந்நியாசி ஒரு இடத்தில் தங்குபவர் அல்ல. அவருக்கென்று ஒரு தனி இடம் கிடையாது. பல இடங்களுக்கு சென்று அன்றாடம் கிடைக்கும் பிக்ஷையில் எல்லோரையும்  ஆசிர்வதிப்பவர். இதனால் அவர் பல இடங்களுக்கு சென்று பல மக்களை சந்தித்து அவர்களுக்கு நல்லுபதேசங்கள் செய்ய வழி ஏற்படுகிறது. 
ஒரு இடத்தில் தங்குவதன் மூலம் அந்த இடத்தில் ஒரு பற்று உண்டாகிறது. அது கூடாது. எந்த பற்றும் இருக்காமல் இருப்பது தானே சன்யாசம். இப்படி பல இடங்களுக்கு செல்லும்போது குளிர் மழை காலத்தில் பிரயாணம் செய்வது சிரமம் என்பதால்  ஒரு நான்கு மாதம் மட்டும் ஒரு இடத்தில் தங்கி தனது சேவையை புரிவது தான் சாதுர் மாஸ்யம்.   

மழை காலத்தில்  சிறிய  ஜந்துக்கள்  தங்கள் இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடத்துக்கு  அலையும். அந்த நேரத்தில் அவற்றை கால் மிதி  பட்டு அழியாமல் காக்க ஒரே இடத்தில் சந்யாசிகள் தங்குகிறார்கள். சந்யாசிகள் சமைத்து உண்ணக்கூடாது. செடியிலிருந்து இலை  கூட பறிக்க மாட்டார்கள்.  அதன் மூலம் தாவரங்களுக்கோ மற்ற  ஜீவராசிகளுக்கோ துன்பம் வரக்கூடாது என்பதே இந்த ஏற்பாடு.  சன்யாச ஆஸ்ரமத்தில் அக்னி ஹோமம் கூட கிடையாது.

வியாசர் மட்டும் குரு அல்ல. இதை தவிர  ஐந்து  குரு  பரம்பரை, மூல புருஷர்கள்,  உண்டு.  முதல்  குழு கிருஷ்ண பஞ்சகம்.  கிருஷ்ணன், வசுதேவர் ,ப்ரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன்.   வியாச பஞ்சகத்தில்  வியாசர், பைலர் , வைசம்பாயனர், ஜைமினி,  சுமந்து.   பகவத் பாத பஞ்சகத்தில் ஐந்து பேர் யார் தெரியுமா?      ஆதி சங்கர பகவத்பாதர், பத்மபாதர், ஸுரேஸ்வரர், ஹஸ்தாமலகர்,  தோடகாச்சார்யார்.  த்ரவிட பஞ்சக குழுவில் ஐந்து பேர்:   திராவிடாச்சார்யார், கௌடபாதர், கோவிந்தபாதர், சங்க்ஷேபகாசார்யார், விவரணாச்சார்யார் .  குரு பஞ்சகம் என்று ஐந்து குருமார்கள்:  குரு, பரமகுரு, பரமேஷ்டி குரு, பரமானந்த குரு,  பராபர குரு.

ஒரு சந்நியாசி எத்தனை வியாச பூஜை பண்ணியிருக்கிறார் என்பதை பொறுத்து அவரது உயர்வு.  தெற்கே  நாம்  அறியும் வியாசபூஜை தான் வடக்கே  குருபூர்ணிமா. அன்று  யாரை  மதித்து வரவேற்று பூஜிக்கிறார்களோ அவர் தான் குரு , வியாசர் அன்று.  எனக்கு அந்த பாக்கியம் ஒரு பள்ளியில் கிடைத்தது. ரெண்டாயிரம் குழந்தைகளுக்கு மேல் கொண்ட  GK  ஷெட்டி ஹிந்து வித்யாலயம்  ஆதம்பாக்கத்தில் உள்ள  நிறுவனத்தில் இப்படி ஒரு  ஸ்ரேஷ்டமான  விழாவில் பங்கேற்க  நான்  ஏதோ ஒரு ஜென்மத்திலாவது  கொடுத்து  வைத்திருக்கவேண்டும்.  
வியாச பூஜையில் நடுநாயகமானவர் கிருஷ்ணன்.  பசுக்களோடு வாழ்ந்தவன் கண்ணன்.  கோ சம்ரக்ஷ்ணம் பண்ணுவதன் மூலம்  நாம் கிருஷ்ணனை வழிபடுவோம்.  பசுக்கள் மெலிந்து   எலும்பும் தோலுமாக  நடந்து  காகிதம், சுவற்று போஸ்டர் பிளாஸ்டிக் பைகளை தின்று மடிகின்றன.    அதன் மாமிசத்தை     உண்போர்க்கு  பணத்திற்காக வெட்டப்படுகிற அக்கிரமம் இன்னும் நிற்கவில்லையே.  ஒரு நாட்டின் சுபிக்ஷம் பசுக்களால் தான். நம் முன்னோர்க்கு புரிந்தது ஏன் இன்னும் நமது மண்டைக்குள் ஏறவில்லை.   முடிந்தவரை  ஒவ்வொரு வீட்டின் வாசலில் ஒரு பழைய பக்கெட்டில் (புதிய பக்கெட்   வைத்தால் தான் காணாமல் போகிறதே)  வீட்டில்  உபயோகிக்காத  சேமித்த  காய்கறி, இலைகள், பழங்கள்  அந்த பக்கெட்டில்  போட்டு வைக்கலாம்.  அரிசி களைந்த நீர், கஞ்சி   கீழே போகாமல் இந்த பக்கெட்டில்  இருப்பது தெரிந்தால் கரெக்ட்டாக  குறித்த நேரத்தில் கடிகாரம் பார்க்கமாலேயே  பசு வந்து வாசலில் நிற்கும். இது என் அனுபவம்.

 . 
   

No comments:

Post a Comment