Monday, July 9, 2018

KRISHNA STORY



               கிருஷ்ணா யார் நீ? J.K. SIVAN 


குழந்தைகள் என்றாலே  விஷமம் செய்யவேண்டும்.  சோர்ந்து மூலையில்  உட்காரும் குழந்தை உடனே டாக்டரிடம் செல்ல வேண்டியது.


பிருந்தாவனத்தில் அந்த பொடியனின்  விஷமம்  தாங்கமுடியவில்லை.  அவன் சின்னப்பயல்.  இருந்தாலும் கொஞ்சம்  பெரிய  பையன்கள்  விளையாடும்போது  தானும்  அவர்களோடு  இணைவான். அவர்களோ முதலில்  அவனை  லட்சியம் செய்ய வில்லை.  போகப் போக  மூர்த்தி சிறிதானாலும்  விஷம  கீர்த்தி பெரியதாக  தென்படவே, அவனுடைய விஷமத்தால் அவர்களுக்கும் லாபம் இருக்கவே,  அவனைக் கூட்டு  சேர்த்து கொண்டார்கள். அவன் அம்மாவுக்கும்  இது சௌகர்யமாக இருந்ததே. கொஞ்ச நேரமாகவாவது  அவன் விஷமம்  வீட்டில் இருக்காதே.

ஒருநாள்  மாலை  இந்த விஷம சிறுவர்களிடம் ஒரு  நாவல் பழ மரம் மாட்டிகொண்டது.   ஆயர்பாடி  நந்த கோபன்  வீட்டு பின்புறம்  இருந்த  அந்த  பெரிய  நாவல் மரத்தின் மேல்  அவர்கள் பார்வை பட்டது.   நிறைய நாவல்  பழங்களை மரத்தில்  பார்த்து விட்டு,பெரிய  பையன்கள்  மரம் ஏறினார்கள். "கிருஷ்ணா,  நீ  சின்னவன்,  மரத்தில்  ஏறாதே.  நாங்கள்  மேலே ஏறி  கிளைகளை உலுக்கும்போது கீழே விழும் பழத்தை எல்லாம்  பொறுக்கி  நீ  ஒரு  துணியில் சேகரி. பிறகு  நாங்கள்  இறங்கி வந்தவுடன் அனைவரும்  பங்கு போட்டு  திங்கலாம்."

"சரி"  என்று தலையாட்டினான்  கிருஷ்ணன்.   பழங்கள்  மேலேயிருந்து  உதிர்ந்ததும்  ஒவ்வொன்றாக  அப்படியே  மண்ணுடன்  ஒட்டிக்கொண்டிருந்த பழங்களை  கிருஷ்ணன் தின்று கொண்டிருந்ததை ஒரு  பயல்  பார்த்து விட்டான்.  "டேய்,  எல்லாரும்   அங்கே  கீழே  நடக்கிற அக்ரமத்தை பாருங்கடா. முக்காவாசி  பழத்தை  அந்த  கிருஷ்ணன்  தின்னுண்டு  இருக்கறதை.   இந்த கிருஷ்ணன் ரொம்ப மோசம். எவ்வளவு  சாமர்த்தியம்  பார்த்தாயா. எப்போ  இவன்  நம்பளை ஏமாத்தினானோ  அவனை பத்தி மண்ணு திங்கறான் என்று அவ அம்மாவிடம் சொல்லிடறேன். அவள் அவனுக்கு   நல்லா டின் கட்டிடுவா"     என்று  ஐடியா  கொடுத்தான்  ஒருவன். அதே போல்  நடந்தது. யசோதை  கோபமாக  வெளியே  வந்தாள்.  தூரத்தில் மரத்தடியில்  பையன்கள்  கூட்டம்.  நடுவே தரையில் கிருஷ்ணன்  அமர்ந்திருந்தான்.  வாய்  நிறைய  பழங்கள்.  உதடு  கன்னம், தாடையில் எல்லாம்  கருநீல நாகப்பழ  கலரில்  மண்ணோடு கலந்து  சாறு அப்பி கிடந்தது.

பையன்கள் கிருஷ்ணன் மேல் வரிசையாக குற்றம் சாட்டினார்கள்.  யசோதைக்கு இது வழக்கமாக போய்விட்டதால், அவன் மீது அசாத்திய கோபம் வந்தது. அதே நேரம் அவன் மீது இருந்த பாசம்,அவனது காந்த பார்வை அதைவிட அதிகமாக இருந்ததே. கத்தினாள் யசோதை. இன்று இந்த சின்ன குழந்தை இவ்வளவு மண் தின்றிருக்கிறானே. உடம்புக்கு ஏதாவது  என் குழந்தைக்கு வந்துவிட்டால்???

"அடே கிருஷ்ணா, உன்னோடு  ஒரு நாள்  கூட  நிம்மதி கிடையாது எனக்கு. எப்பவும்  ஏதாவது  ஏடாகூடம்.  வாய்  நிறைய  இவ்வளவு  மண்ணு  தின்னால்  உடம்பு என்னத்துக்கு  ஆகும்.  திற  வாயை?''

''மாட்டேன் ''  தலையாட்டினான்.  பேசவில்லை. பேசமுடியாதவாறு  வாய் நிறைய  நாகப்பழம்.  

''அடம் பண்ணினே  பிச்சுடுவேன்  பிச்சு.  மரியாதையா  வாயை திற''

கண்கள் மலங்க மலங்க  பார்த்தன.  தலையை  மீண்டும் அசைத்தான். 

''பிடிவாதமா  பண்றே.  இப்ப பார்''

யசோதா  கிருஷ்ணனின்  வாயை பலவந்தமாக தனது  கையால்  திறந்தாள்.  வாய் மெதுவாக திறந்தது.  உள்ளே  எவ்வளவு  மண் இருக்கிறது  என்று கவலையோடு  பார்த்தாள்.  ஆனால்  அவளுக்கு  மார்பு  படபட என்று  அடித்துக்கொள்ள,  கண்கள் இருள கை கால்  நடுங்க தலை சுற்றியது. கிருஷ்ணன்  வாயில்  மண் அல்ல மண்ணுலகம்  வானுலகம்,  இந்த  பிரபஞ்சமே தெரிந்தது.  அனைத்தும்  சுழன்றது.  இதோ  யமுனை,  கங்கை,  ஹிமாசலம், எண்ணற்ற ஊர்கள், மக்கள் வெள்ளம், இதோ  ஆயர்பாடி  கூட  தெரிகிறதே  அவள்  வீடு,  இதோ இதோ  அவள் எதிரில் இருக்கும் அந்த நாவல்  மரம், அதன் கீழே  அவள்,  எதிரே  தரையில் உட்கார்ந்து கொண்டு  கிருஷ்ணன், ......திறந்த  வாய்,......  அந்த  திறந்த வாய்க்குள்  மீண்டும்  பிரபஞ்சம்,....  திரும்ப திரும்ப ..... அளவில்லாத  பிரபஞ்சம்..நீண்டும் அதற்குள் அதே........." 

 யசோதை  கையை  அவன் வாயில் இருந்து  எடுப்பதற்குள்  அவளே  தரையில்  மயங்கி விழுந்தாள்.  அவன்  வாயை மூடிக்கொண்டு சிரித்தான்.

குழந்தை யான பழைய  விஷமக்காரன் கண்ணன்.

 சற்று நேரத்தில்  சுதாரித்து கொண்டு எழுந்த  யசோதாவுக்கு  இன்னும் நடுக்கம் முழுக்கவும் தீரவில்லை. 

'' என்  கிருஷ்ணா, நீ  யார்...? .    வாய்  மெதுவாக முணுமுணுத்தது.

 

No comments:

Post a Comment