THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
▼
Sunday, May 13, 2018
st thiyagaraja
இன்னும் ஐந்து நாளில் ..! -- J.K. SIVAN
1767ல் திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமி இல்லத்தை உள்ளே போகாமல் வெளியே இருந்தே கொளுத்தும் வெயிலில் பார்த்தபோது என்னென்னவோ எண்ணக்கற்றைகள் மனதில் சிக்கலாக எழுந்தன. அப்பா காகர்லா ராம ப்ரம்மம் அம்மா சீதா. என்ன அற்புதமாக ராமனும் சீதையும் அவர் பிறப்பிலேயே அவரோடு ஐக்கியமாகி விட்டனர். அப்போது ஆந்திரா தமிழ்நாடு என்று இந்த நாட்டை ஆண்ட வெள்ளைக்காரனோ, சிறு குறுநில மன்னர்களோ கூறுபோடவில்லை. தண்ணீருக்கு சண்டை போடவில்லை. ஒரு மொழி பேசுபவன் இன்னொரு பாஷைக்காரனை வெறுக்கவில்லை. சுதந்திரம் என்று ஒரு தரித்திர நிலை நமக்கு வந்தபிறகு எண்ணற்ற துன்பங்களையும் சேர்த்து வரவழைத்துக்கொண்டோம். மராத்தியர், தெலுங்கர்கள் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் அதில் ஒரு குடும்பம் தியாகய்யர் குடும்பம்.
தியாக ப்ரம்மம் மூன்றாவது பிள்ளை. ரெண்டு அண்ணாக்கள். பஞ்சாபகேச ப்ரம்மம், பஞ்சநத ப்ரம்மம். திருவாருர் சுவாமி பெயரை வைத்ததால் அவர் தியாகராஜர். அப்பா வழி தாத்தா கிரிராஜ கவி. கவிஞர், சங்கீத வித்வான். அம்மா வழி தாத்தா பெயர் வீணை வித்வான் காளஹஸ்தய்யா. இந்த தாத்தா தியாகய்யருக்கு வீணை கற்றுக்கொடுத்தவர். தாத்தா மறைவிற்கு பிறகு அதிர்ஷ்டவசமாக '' நாரதீயம்'' என்ற சங்கீத புத்தகம் கிடைத்தது.
ஆரம்ப கால குரு ஸோன்டி வேங்கடரமணய்யா. ஸ்வாமிகள் இயற்றி பாடிய முதல் க்ரிதி ''நமோ நமோ ராகவைய்யா '' தேசிக தோடி ராகத்தில். ராமனையே மூச்சாக கொண்டு ஆயிரக்கணக்கான கிருதிகள். சில சிவன், கிருஷ்ணன், சக்தி, கணேசன், முருகன் ஹனுமான், என்று இதர தெய்வங்கள் மேலும் உள்ளன. .
தஞ்சாவூர் ராஜா, ஒருநாள் தியாகய்யரை அரண்மனைக்கு வரவழைத்து தன மீது ஒரு பாடல் இயற்ற ஆள் அனுப்பினான். நிறைய பணம் மூட்டை மூட்டையாக தருவதாக சொல்லியும் ஸ்வாமிகள் அதை துச்சமாக கருதி பாடிய கீர்த்தனை ''நிதி சால சுகமா'' ராமனின் நாமத்தைவிட உன் செல்வம் ஒரு இன்பமா, சுகமா என்று பாடிய அற்புத கல்யாணி ராக பாடல். அதை பாடி நிறைய வித்துவான்கள் சம்பாதிக் கிறார்கள்.
ஸ்வாமிகள் திருப்பதி, காஞ்சிபுரம் எல்லாம் நடந்து சென்றிருக்கிறார். காஞ்சிபுரத்தில் ப்ரம்மேந்த்ர மடத்தில் உபநிஷத் பிரம்மயோகியை சந்தித்தார். ஸ்ரீ ஸ்வாமிகளின் 251வது பிறந்த நாள் விழாவில் ஒரு சிறு புத்தகம் ''நாதபிரம்மம் 251'' என்று அவர் வாழ்க்கை குறிப்பு புத்தகம் எழுதினேன். ஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அதை வெளியிட்டார்.
தியாகராஜர் நாரதரை வழிபடுபவர். ''வர நாரத '' எனும் க்ரிதி இதை விளக்கும். யாரோ ஒரு சந்நியாசி ஒருநாள் தியாகையரை திருவாரூரில் சந்தித்து நாரத மந்த்ர உபதேசம் செய்தார் என்பார்கள். அப்புறம் தான் ஒருநாள் தியானம் செய்யும்போது நாரதர் இயற்றிய ''ஸ்வரார்ணவம்'' என்ற புத்தகம் கிடைத்தது.
திருவையாறில் சந்நியாசியாக வாழ்ந்து 6.1.1847 புஷ்ய பஹுள பஞ்சமி அன்று 80 வயதில் மறைந்தார் ஸ்வாமிகள். அவர் இயற்றிய கடைசி க்ரிதி ''கிரிபை ''எனும் சஹானா கீர்த்தனை. யார் யாரோ பாடினாலும் எனக்கு என்னவோ ஸ்ரீ M.D .ராமநாதன் மனதை உருக்கும் ராகம் ஸஹானாவில் நிதானமாக பாடியது ரொம்ப பிடிக்கும். அதை இணைத்திருக்கிறேன்.
28 ஹரிகாம்போதி ஜன்யம்.
Aa: S R2 G3 M1 P M1 D2 N2 S
Av: S N2 S D2 N2 D2 P M1 G3 M1 R2 G3 R2 S
ஆதி தாளம்.ராகம் ஸஹானா
பல்லவி
கிரிபை நெலகொன்ன ரமணி குறி தப்பக கந்தி
அனுபல்லவி
பரிவாருலு விரிசுர துலச்சேபடி விசாரிச்சு கோசருச்சு சேவிம்பக (கிரிபை)
சரணம்
புளகாங்கிதுடை ஆனந்தாஸ்ருவுள நிம்புச்சு மாதாள தாவளெனநி
கலவரிஞ்சகனி படி பூதலபை காசேடனு தியாகராஜ வினுதுநி (கிரிபை)
(ஆஹா நான் கண்டிப்பாக பார்த்தேன். பிரமித்தேன். ஸ்ரீ ராமன் மலைமீது நின்றிருந்ததைப் பார்த்தேனே. ராமனைப் பார்த்ததும் என் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. வார்த்தை வரவில்லை. பிரம்மானந்தம் .இன்னும் ஐந்து நாளில் உனக்கு மோக்ஷம் என்று ஆசிர்வதித்தான்.) ஐந்து நாளில் தியாகய்யர் பூவுலக வாழ்க்கையை நீத்தார். https://youtu.be/j-LN88zFbjs
No comments:
Post a Comment