Thursday, May 10, 2018

63 SAINTS



அறுபத்து மூவர் -- J.K. SIVAN மெய்ப்பொருள் நாயனார். திருக்கோவலூர் என்றாலே மலையமான் பேர் நினைவுக்கு வரும். அந்த வம்சத்தில் ஒருவர தான் மெய்ப்பொருள் நாயனார். சிறந்த சிவ பக்தர். அப்போது அந்த பகுதி சேதி நாடு என்று அறியப்பட்டது. ராஜா இல்லையா? நிறைந்த செல்வந்தராக இருந்தும் தனது செல்வம் மற்றவருக்காக தன்னிடம் தரப்பட்டது என்ற கொள்கை கொண்டவர். எண்ணற்றோர் அவரிடம் தான தர்மங்கள் பெற்றனர். சிவனடியார்களை பற்றி சொல்லவே வேண்டாம். மக்கள் நன்றாக வாழ்ந்தனர். ராஜாவான நாயனாரிடம் மதிப்பு அன்பு மரியாதை பெருகி ஊரெல்லாம் வாழ்த்தியது. செயதி அண்டை அசல் நாடுகளிலும் பரவியது. அடுத்த தேச ராஜா முத்தநாதன். எப்படியாவது சேதி நாட்டை அபகரித்து, கைப்பற்ற துடித்தவன் பலமுறை யுத்தம் செயதும் தோற்றுப்போனான். ஊரே திரண்டு நாயனாரை ஆதரித்து எதிர்த்த முத்தநாதனை முறியடித்தது. எப்படியாவது மெய்ப்பொருள் நாயனாரை ஜெயிக்கவேண்டும். அவர் நாட்டை அடையவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகி பல யோசனைகள் திட்டங்கள் தீட்டினான். கடைசியாக அவரை வெல்ல சிறந்த ஒரு திட்டம் தயாரானது சிவனடியார் வேஷம் தரித்துக் கொண்டால் தான் மெய்ப்பொருளாரை வெல்ல முடியும் என முடிவெடுத்தான். மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனை வாயிலில் ஒரு நாள் பகலில் ஒரு சிவனடியார் நின்றார். ''யார் ஐயா, என்ன வேண்டும் உங்களுக்கு?'' என்றான் தத்தன் என்கிற அந்த காவலன். '''நான் ஒரு சிவ பக்தன். உங்கள் அரசரை பார்க்க வந்துள்ளேன்'' ''இருங்கள் அனுமதி கிடைக்குமா என்று கேட்டு வந்து சொல்கிறேன் '' ராஜா மெய்ப்பொருள் நாயனார் தனது அறையில் பஞ்சாக்ஷர ஜபம் செய்து கொண்டிருந்தார். காத்திருந்த வாயில் காப்போன் மெதுவாக அவரிடம் செய்தி சொன்னான். ''மஹாராஜா, சிவப்பழமாக, ஒரு பெரியவர் உடலெல்லாம் திருநீறு அணிந்து, உத்திராக்ஷ மாலைகளோடு, ஜடாமுடியோடு கையில் நீண்ட நிறைய ஓலைச்சுவடிகளோடு உங்களை காண வந்திருக்கிறார் அனுப்பலாமா? ''இதென்ன கேள்வி. உடனே அவரை என்னிடம் அனுப்பு. அவருக்கு தக்க மரியாதை, உபச்சாரம் செயது வரவேற்க வேண்டும்'' என்கிறார் மெய்ப்பொருள் நாயனார் தங்கு தடை இன்றி சிவனடியார் ராஜாவின் பிரத்யேக அறைக்குள் நுழைந்தார். நாயனார் எழுந்து வணங்கி அவரை வரவேற்றார். ''மன்னா, உனக்கு ஆகம நூல் விளக்கம் தர வந்தேன். உனக்கு விருப்பமல்லவா? உனக்கு உபதேசம் செய்யும் நேரம் உன்னையும் என்னையும் தவிர மற்றவர் கேட்க வேண்டாம்'' லென்றார் சிவனடியார். ஓலைச்சுவடி மூட்டையை தரையில் இறக்கினார். காவலாளிகளை வெளியே அனுப்பினார் மெய்ப்பொருள் நாயனார். சிவனடியாரை தனது ஆசனத்தில் அமர்த்தி நான் அவர் காலடியில் அமர்ந்தார். கண்களை மூடி கைகூப்பி தனது காலடியில் அமர்ந்த தனது பரம எதிரியை சுவடிக்கட்டில் மறைத்து வைத்திருந்த கூர் வாளால் வெட்டிக்கொல்ல அதிக நேரம் பிடிக்கவில்லை சிவனடியாராக வேடம் புனைந்த முத்தநா தனுக்கு. ''ஹா'' என்ற அரசன் குரல் கேட்டு ராஜாவின் மெய்காப்பாளன் தத்தனும் மற்ற காவலாளிகளும் கூர்வாளோடு உள்ளே நுழைந்தனர். முத்தநாதன் தான் சிவனடியார் போல் பொய் வேஷதாரி, அரசனை என்று தெரிந்து அவனை கொல்ல துணிந்தனர். ''தத்தா , இவர் சிவனடியார், நம்மவர். பாதுகாப்பாக இவரை ஊர் எல்லையில் கொண்டு விட்டு என்னிடம் வந்து விஷயம் சொல்லவேண்டும் '' என்ற வார்த்தைகளோடு மெய்ப்பொருள் நாயனார் சிவ வேடம் புனைந்த முத்தநாதனை யாரும் தாக்காமல் தடுத்து உயிர் பிழைக்க வைத்து காப்பாற்றினார். ராஜா சொல் தட்டாத தத்தனும் கடும் கோபத்தோடு இருந்த போதிலும் முத்தநாதனை உயிர் தப்ப அனுமதித்தான். அவன் தப்பியதை அரசனிடம் உரைத்தான். தனது உயிர் பிரியுமுன்பு மெய்ப்பொருள் நாயனார் அனைவரையும் அழைத்து எக்காலத் திலும் சிவனடியார் யாராக இருந்தாலும் அவர்களை தக்க முறையில் வரவேற்று உபசரிக்கவேண்டும் என்று அறிவுரை தந்து வேண்டிக்கொண்டார். சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே அவர் கடைசி மூச்சு பிரிந்தது. சிவத்தொண்டில் கடைசி மூச்சு வரை ஈடுபட்ட மெய்ப்பொருள் நாயனாருக்கு சிவபிரான் ரிஷபாரூடராக காட்சி அளித்தார். '' கொலைசெய்ய வந்தவனையும் பொய் சிவபக்த வேஷம் தரித்தாலும் அவனை மதித்த உன்னை போல் ஒரு சிறந்த சிவ பக்தன் இல்லையப்பா, நீ என்னுடன் வா'' என பரமேஸ்வரன் மெய்ப்பொருள் நாயனாரை தன்னுடனே கயிலையில் இருத்திக்கொண்டு மகிழ்ந்தான் என்று சொல்ல அவசியமில்லை அல்லவா? இப்படிப்பட்ட ஒரு சிவபக்தரை அறுபத்து மூவரில் ஒருவராக நாம் வழிபடுகிறோம்.


No comments:

Post a Comment