
யாத்ரா விபரம் J.K. SIVAN
ஆறாவது சப்தஸ்தானம்
மேலைத் திருக்காட்டுப்பள்ளி வழியாக வந்தால் திருக்கண்டியூருக்கு மேற்கே 3 கி.மீ., நடந்தால் இன்னொரு சப்தஸ்தான க்ஷேத்ரம்.திருப்பூந்துருத்தி சப்தஸ்தானங்களில் ஆறாவது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரம்.
ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி ‘ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிர பரணி, ராமேஸ்வரம் ஆகிய 13 தீர்த்த ஸ்னானம் பண்ணினால் ஈடற்ற புண்ணியம், பித்ரு சாபங்கள் விலகும். இந்த புனித தீர்த்தங்களில் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட ஆசைதான். ஆனால் இது யாரால் எப்படி முடியும் ? என்று அதிசயித்தார்கள். அங்கே காசியப முனிவர் இருந்து, அவர் காதில் இந்த பேச்சு விழுந்ததால்
‘ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன் பார்க்கிறீர்களா?’ என்றார்.
உடனே காசியபர் சிவனை வேண்டி தவம் இருந்தார். பல சிவ தலங்கள் சென்றவர் திருப்பூந்துருத்திக்கு வந்தார். இங்கேயும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவர் தவத்தை மெச்சிய பரம சிவன் ஆடி அமாவாசை அன்று காசியபருக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தபோது மேலே சொன்ன 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அதுவே இப்போது இங்கே காசியப தீர்த்தம். கிணற்றில் நீரெடுத்து தானும் ஸ்நானம் செய்தபின் புஷ்பவனீச்சரவுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தார். முக்தி அடைந்தார்.
காசியப தீர்த்தம் சோமாஸ்கந்த மண்டபம் பக்கத்தில் தென்கிழக்கு மூலையில் கிணறாக இருக்கிறது. வடிவில் உள்ளது. அருகே ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை நாச்சியார்,மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் எல்லோரும் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமாவாசையிலும் இந்த ஸ்தலத்தை வலம் வந்தால் அது தான் கிரிவலம்.அதிலும் ஆடி அமாவாசை நாளில் இந்த கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.
இங்கே இன்னொரு விசேஷமும் நடந்தது. அப்பர் பெருமான் திருஞான சம்பந்தருக்கு தெரியாமல் அவர் அமர்ந்திருந்த பல்லக்கை சுமந்து வந்த இடம். அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்ய நடந்த இடம், அவர் கால் பட்ட இடத்தில் என் கால் படக்கூடாதே என்று சம்பந்தர் வெளியே இருந்தே சிவனை தரிசிக்க விரும்பியபோது பெரிய நந்தி மறைத்தது. திருப்புன்கூரில் நந்தனாருக்கு வழி விட்டது போல் இங்கே நந்தி திருஞான சம்பந்தருக்கு வழிவிட்டதால் அழகாக நந்தி இங்கே சந்நிதியை விட்டு விலகி இருக்கிறது. இன்னொரு அற்புத சிற்பமாக காட்சி தருபவர் வீணா தட்சிணாமூர்த்தி.
இங்கே கொடிமரம் காணோம். பலிபீடம் நடராஜர் சபை இருக்கிறது. அம்பாள் சந்நிதி தெற்கு பார்த்து இருக்கிறது.
எடுத்த சில படங்களும் தினமலர் இணையதளத்தில் நன்றியுடன் எடுத்துத் தருவதும் இணைக்கப்பட்டுள்ளது.
கோவில் நேரம்: காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

No comments:
Post a Comment