Tuesday, October 31, 2017

உத்தவ கீதை.


உத்தவ கீதை.    J.K. SIVAN 

               உத்தவா  இன்னும் சொல்கிறேன்  கேள்!

உத்தவா,  உனக்கு  நான் சொல்வது புரிவதற்கு கொஞ்சம் கஷ்டமானதாக தோன்றினால் அது உன் மனத்தில் தோன்றும் சந்தேகத்தின்  பிரதிபலிப்பு. எனக்கு இது புரியும் என்று எண்ணியவாறு அதை அணுகினால் கட்டாயம் புரியும். 

கிருஷ்ணா,  உத்தவன் மூலம் இதை எங்களுக்கும்  நீ சொல்வது  நன்றாகவே புரிகிறது. உன் உபதேசத்தை தொடர்ந்து நடத்து. பயனடைகிறோம். 

''என்னை சரணமென்று அடைக்கலம் அடைந்துவிடு. பகவானுக்கும்  அவனது பக்தர்களுக்கும் சுவை செய்வதில் ஈடுபடுத்து.   தனிப்பட்ட  சுய  விருப்பம், தேவைகள் தேடாதே. உனது ஸ்வய தர்மத்தை கடைப்பிடி.

பரமாத்மாவை அறிய விருப்பமுள்ளவன் பலன்களை அளிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருள் சேர்க்காமல் இருப்பது போன்ற நியமங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.  குருவிற்கு சேவை, பணிவிடை செய்பவன் அகந்தை, பொறாமை, மமதை, பரபரப்பு, வெறுப்பு, வீண் பேச்சு, மனைவி-மக்கள்-மனை-நிலம்-உற்றார்-செல்வம் முதலியவற்றில் ஒட்டுதல் இல்லாதவனாகவும், அன்பு, வினைத்திட்பம், அனைவரின் நலனில் சம நோக்கு உடையவனாகவும் இருக்க வேண்டும்.

ஆத்மா சுயம் ஜோதி வடிவானது; அனைத்திற்கும் சாட்சியாக இருப்பது; இந்த உடலை விளக்கமுறச் செய்யும் ஆத்மா, இந்த உடலிருந்து வேறானது. இந்த மனித உடல், மாயையின் முக்குணங்களின் சேர்க்கையால் ஆனது. அதனால் தான், மனிதன் உலகவாழ்க்கையுடன் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கிறான். அதாவது, தோற்றமும் அழிவற்ற ஆத்மாவின் மேல் பிறப்பு-இறப்பு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆத்மக்ஞானம் ஏற்பட்டுவிட்டால், இந்த மயக்கம் வேருடன் கிள்ளி ஏறியப்பட்டுவிடும்.

புலன் விவகாரங்களில் சம்பந்தப்படாத சுத்த ஆத்மா புலனளிக்கும் சுகமம் இன்பமும் மாயை, உண்மையானது இல்லை என்பதை உணரும். அதைத்தேடி ஓடுவது வியர்த்தம் , வீண் என அறியும். 

எனவே ஆத்மாவிற்கு எதிரான அனாத்மாவான பொருட்கள் நிலையானது என்ற நினைப்பை விட்டொழித்து, மிக உயர்ந்ததும், தனிப்பெரும் பொருளானதும், தனக்குள் விளங்குவதுமான ஆத்மாவை தேடவேண்டும். 

பஸ் டிக்கெட் வாங்குகிறோம்.  அது எந்த ஊர் செல்லவேண்டுமோ அது வரை தான் சுகமாக ஜன்னல் பக்கத்தி உட்கார்ந்து வேடிக்கை பார்க்க நம்மை தூக்கிச் செல்லும். கொடுத்த காசுக்கு  பயணம் முடிந்தவுடன் இறக்கி விட்டுவிடும். அதுபோல் தான்  புண்ணிய இருப்பு நம்மிடம் உள்ள வரையில் சுவர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கலாம். புண்ணியம் தீர்ந்ததும்,  மனிதனை கீழே பூமியில் மீண்டும் பிறப்பெடுக்க தள்ளிவிடும். , அவர்கள்   இன்ப துன்பங்களுக்கு காரணமான உடலைக் கொண்டு, செயல்கள் செய்து, அழிந்து போகும் தன்மையை உடைய உடல்களையே மீண்டும் மீண்டும் அடைகிறார்கள்.    இதுவே திரும்ப திரும்ப  வரும் ஜனன மரண நியதி.  

முக்குணங்கள் கர்மாக்களைச் செய்ய தூண்டுகிறது; கர்மபலன், செயல் செய்பவனின் விருப்பத்திற்கேற்றபடி அமைகிறது. இந்த சீவன் முக்குணங்களுடன் கூடியிருப்பதால், கர்மபலன்களை அனுபவிக்கிறது. குணங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே ஒரே பரமாத்மாவான என்னை, காலம், ஆத்மா, உலகம், இயற்கை, தர்மம், என்று பலவிதமாக கூறுகிறார்கள்.

அதர்மத்தில் நாட்டம் , தீயவர் சேர்க்கை , புலன்களுக்கு அடிமையாவது,  மனம்போனபடி வாழ்க்கை, , கஞ்சன், பேராசைக்காரன், பெண்ணாசைப் பிடித்தவன்  ஆகியோருக்கு  கோரமான இருள் சூழ்ந்த நரகம் காத்திருக்கிறது. 

கனவில் என்னன்னவோ மனம் விரும்பிய  காட்சிகள் வருகிறது. சந்தோஷம் அடைகிறோம். க்ஷண நேரம் தான் அது.    கனவில்  நிஜமாக நடப்பது  போன்று உற்பத்தியான  காட்சியெல்லாம்  கண் திறந்தவுடன் காணாமல் போகிறது.  எல்லாம் மனமெனும் குரங்கின் மாய லீலைகள். 


உத்தவா, என்னையே  குறியாக கொண்டு  நாட்டம் உள்ளவன் புலன்களின் ஈர்ப்பு பக்கமே போகமாட்டான். தன்னை மேலும் உயர்த்திக்கொள்ளும்  எண்ணமுடையவன் பலன் எதிர்பாராது தனது காரியங்களை செய்பவன்.

என்னை ஏற்றுக்கொண்ட பக்தன் வேதங்கள்  சொல்லும் பாப கார்யங்களை புரியமாட்டான்.  புரிந்தால் என்னை அடைய முடியாதே. என்னை அடைய  தக்க  ஞானிகளை, குருமார்களாக அடைந்தபோது  நான் எளிதில் அவனை சேர்வேன்.  நன்குணர்ந்த ஞானிகளும் நானும் வேறல்லவே.

ஒரு  ஊழியன், பெரிய மனிதனிடம் உத்யோகத்தில் இருக்கும்போது, தன்னையே  அந்த பெரியமனிதன் அந்தஸ்துக்கு தானே உயர்த்திக் கொண்டு வறட்டு அதிகாரம், கெளரவம் எல்லாம் இன்றி, பணிவோடு எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும்.  அதிகமாக  பேசாமல்  தனது  பொறுப்புணர்ந்து  கடமையை  ஆற்றவேண்டும்.   விநயம் வெகு அவசியமானது.

தன்னை ஆத்மா என உணர்ந்தவனுக்கு  உற்றார், உறவினர், குடும்ப பாசமோ நேசமோ உலக ஈர்ப்புகளோ  கிடையாது. பெரும் பொருளும், வெறும் பொருளும் தேடுபவனுக்கு பரம் பொருள் எங்கிருந்து கிடைக்கும்.

பற்றி எரியும் கட்டை வேறு, அக்னி வேறு, என்று இருந்தாலும் தன்னை அழித்துக்கொண்டு கட்டை தீயாகிறது.  நமது உடலும் உடலில் உள்ள ஆத்மாவும் வேறு. ஒன்றாக இருந்தாலும் ஆத்மா தேஹ சம்பந்தம் இல்லாதவன். 

அக்னியில்,  சில நீர் பூத்திருக்கும், சில கொழுந்து விட்டு எரியும், சில  கொஞ்சூண்டு தீ பற்றி மற்றது எரியாமல் இருக்கும், சில பற்றிக்கொள்ளவே  செய்யாது. ரொம்ப பிரயாசைப்பட்டு எரிய வைத்தல் மெதுவாக வேறு நேரம் கழித்தது எரியும்.  இதுபோல்  அனந்த உடலுக்கு, தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மா அந்தந்த உடலின் தன்மையை  அனுசரித்து ஞானத்தை வெளிப்படுத்தும். 

இந்த உலகில்  காணும் அனைத்து  ஜீவர்களிலும்  தாவர ஜங்கம  வஸ்துக்களிலும் பகவானே இருக்கிறான் எனபதால், இவைகளில் பகவானையே பார்க்க வேண்டுமேயன்றி அந்தந்தப் பொருளாக அல்ல. இதற்காக தான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்  என்று பிரஹலாதன்  நரசிம்மனை பற்றி நிச்சயமாக  கூறினான். 

உத்தவா  இன்னும் நிறைய சொல்கிறேன் கேட்கிறாயா? புரிகிறதா?
கிருஷ்ணா  இது எனக்கு கிடைத்த அரும்பெரும் பாக்யம். சொல் காதார  கர்ணாம்ரிதமாக கேட்கிறேன்.
அன்பர்களே, இது உத்தவனால் நமக்கும் கிடைத்த பாக்யம்.  ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா  இந்த பூவுலகத்தி கடைசியாக தோன்றி அவதாரம் முடிந்து விடைபெறும் சமயம்  உத்தவனுக்கு உபதேசித்தது தான் இந்த உத்தவ கீதை.   இதை உங்களுக்கு  தெரிவிக்கும் சிறு பணியில் ஈடுபட்டிருக்கும்  நானே உங்களிலும் பெரும் பாக்கியசாலி 

No comments:

Post a Comment