Thursday, September 7, 2017

வெள்ளி வட்டிலும் விப்ர நாராயணாவும் - 2

அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN

வெள்ளி வட்டிலும் விப்ர நாராயணாவும் - 2

திருக் கரம்பனூர் என்று ஒரு ஊர். அதில் அக்காலத்திய முறைப்படி இறை பணியில் தம்மை அர்ப்பணித்த இரு பெண்கள் (தேவ தாசிகள் என அழைக்கப் பட்டவர்கள் ) ராஜ சபையில் நாட்டிய மாடுபவர்களாக அரசர்கள் ஆதரவில் வாழ்ந்தவர்கள். அந்த இரு பெண்களின் பெயர்கள் ஒருத்தி தேவி, மற்றவள் தேவதேவி. இருவருமே மிகச் சிறந்த அழகிகள். பார்ப்போர் நெஞ்சங்களை வலை வீசி பிடித்து, பிழிந்து அடிமையாக்கும் விழிகளைக் கொண்டவர்கள். ஆடலோடு பாடவும் தெரிந்தவர்கள். கேட்க வேண்டுமா ராஜாவின் ஆதரவுக்கு, அவர்கள் செல்வாக்குக்கு?

சோழ ராஜா உறையூரில் அரண்மனையில் வசித்தான். அரசனின் நல் ஆட்சியில் எல்லோருக்கும் எங்கும் சுபிட்சமான வாழ்க்கை. தேவி தேவதேவி யின் ஆடல் பாடலில், அழகில், மயங்கி அரசன் முத்தும் பவழமும் பொன்னும், வைரமும் வாரி இறைத்தான் அவர்களுக்கு.

''தேவி அக்கா , நாம் போகும் வழியில் ஸ்ரீ ரங்கம் சென்று ரங்கநாதனை தரிசிக்க ஆவலாக இருக்கிறது. செல்வோமா?'' என்றாள் தேவதேவி, இளையவள், பேரழகி.

பல்லக்கு ரங்கநாதனின் கோவிலை நெருங்கியபோது வழியில் விப்ர நாராயணரின் நறுமண, மலர்கள் பூத்து குலுங்கிய நந்தவனம் கண்ணில் பட்டது.

''அமைதி சூழ்ந்த இந்த நந்தவனம் யாருடையது? அடடா நாம் எங்கிருக்கின்றோம் பூலோகத்திலா, வைகுண்டத்திலா? இது போல் அழகிய பூத்துக் குலுங்கும் நந்தவனம் எங்குமே கண்டதில்லையே அக்கா ?'' என்றால் தேவ தேவி.

''ஒ, இது விப்ர நாராயணர் என்கிற ஒரு பிராமண பக்தருடைய நந்தவனம். அவர் செடி வளர்த்து மலர்கள் பறித்து தன் கையால் மாலை தொடுத்து அரங்கனுக்கு அன்றாடம் சாற்றும் ஒரு துறவி''

''அப்படியா, அவரைக் கட்டாயம் பார்த்து சேவிக்க வேண்டும் அக்கா'' என்றாள் தேவதேவி.

''அதற்கென்ன வா உள்ளே போய் அவரை தரிசிப்போம்'' என்றாள் தேவி.

அவர்கள் ஆஸ்ரமத்தில் நுழைந்தபோது நாராயணனைத் துதித்துக்கொண்டு மலர்ச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தார் விப்ரநாராயணர். அவரது கம்பீரத்தில், அழகிய தோற்றத்தில், மனம் பறி கொடுத்து கண்டதும் காதல் கொண்டாள் தேவதேவி. தனது காதலை தெரிவித்து வணங்கினாள். ஏதோ ஒரு பூனை, நாயைப் பார்ப்பது போல் அவர்களைப் பார்த்து விட்டு அவர் துளியும் அவர்களை லக்ஷியம் செய்யாமல் தனது வேலையில் தொடர்ந்தார் விப்ரநாராயணர்..

''என்ன ஆணவம் இவனுக்கு? உலகமே மயங்கும் என் அழகில் மயங்காத ஒரு ஆடவனும் உண்டா? இந்த மனிதனை என் அழகில் மயங்கச் செய்கிறேன் பார்'' என்று வீரம் பேசிய தேவதேவி,

''அக்கா, இங்கே சில நாள் நான் தங்கி இவனை மாற்றிக் காட்டுகிறேன் பார். நீ போ. நான் என் சபதத்தை முடித்துவிட்டு வருகிறேன்'' என்றதும் தேவி சென்று விட்டாள். தேவ தேவி ஸ்ரீரங்கத்தில் இடம் பிடித்து தங்கினாள் .ஆடம்பர உடை ஆபரணங்களைக் களைந்தாள் . ரிஷிபத்னி போல காவி உடை அணிந்தாள். விப்ர நாராயணர் ஆஸ்ரமத்துக்கு மீண்டும் சென்றாள்.

''யார் நீ? என்ன வேண்டும் உனக்கு?''

''சுவாமி, நான் இதுவரை ஒரு நரக வாழ்க்கை அனுபவித்தவள். சொச்ச காலத்தையாவது தங்களோடு சேர்ந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து மன நிம்மதி பெற விழைகிறேன்.'' நடிக்கத் தெரியாதா தேவதேவிக்கு.

'' அடடா, என்னே அந்த பெருமாளின் கருணை. தாராளமாக இங்கே தங்கி நீயும் என் அரங்கநாதனுக்கு உன்னாலான சேவைகளை புரியலாம்''

ஒரு இயந்திரம் போல் தனது காரியங்களை செய்து கொண்டிருந்தார் விப்ர நாராயணன். அவளை அருகே சேர்ப்பதில்லை. அவளை ஆஸ்ரமத்தின் வெளியே தங்க அனுமதித்தார்.

ஒரு நாள் கொட்டும் மழையில் நனைந்து வெளியே நின்றிருந்த தேவதேவி மழையில் ஒதுங்க இடம் இன்றி தவிப்பதைப் பார்த்துவிட்டு, உள்ளே பூஜை செய்து கொண்டிருந்த விப்ர நாராயணா இரக்கம் கொண்டவராய் அவளை உள்ளே அழைத்து தனது மேல் ஆடையை கொடுத்து உதவுகிறார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அவள் சிஸ்ருஷைகள் செய்து நெருங்க, பஞ்சை நெருப்பு பற்றிக்கொண்டு விட்டது. பிறகு ஒருநாள் தனது சகோதரி, மற்றும் தாயிடம் அவரை அழைத்து செல்கிறாள். விப்ர நாராயணா அவளிடம் தன்னை இழந்த நிலையில் தன்னிடமிருந்த பொருள்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்துவிட்டு இனி கொடுக்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் அவர்களால் விரட்டப் படுகிறார். சோர்ந்து மனம் உடைந்த விப்ர நாராயணர் நந்தவனம் திரும்பி களைத்து

'' நாராயணா எனக்கு தேவதேவி வேண்டுமே. அவள் வீட்டார் என்னை அண்ட விடவில்லையே என் செய்வேன்'' என்று மயங்கிய நிலையில் தேவதேவியின் தாய் வீட்டுக்கு யாரோ ஒருவர் வருகிறார்.

''யார் நீங்கள் என்ன வேண்டும் ?'' என்கிறாள் தேவதேவியின் தாய்.

''அம்மா, என் குரு விப்ர நாராயணா, இதை தாங்களிடம் சேர்ப்பிக்க கொடுத்தனுப்பினார்''

ஒரு பெரிய வெள்ளிப் பாத்திரம் அவரிடமிருந்து பெற்ற தேவதேவியின் தாய்க்கு மகிழ்ச்சி இருக்காதா?

'' நீங்கள் சென்று விப்ர நாராயணாவை இங்கே வரச் சொல்லுங்கள்'' தாய் அவரை வீட்டில் அனுமதிக்கிறாள்.

இதற்குள் தேவதேவி உண்மையிலேயே அவரது தூய பக்தியால் ஈர்க்கப்பட்டு விப்ர நாராயணரின் அடிமையாகிறாள்.

வெள்ளிப் பாத்திரம் கொடுத்த ''சிஷ்யர்'' நந்தவன ஆஸ்ரமம் சென்று சோர்ந்து கிடந்த விப்ரநாராயணாவை எழுப்புகிறான்.

''யாரப்பா நீ ?''

''சுவாமி நான் தேவதேவி அம்மாள் வீட்டிலிருந்து வருகிறேன். அவர்கள் உங்களை உடனே வரும்படி செய்தி சொல்ல சொன்னார்கள் ''

''ஆஹா, அப்படியா, நாராயணா என்னே உன் கருணை ! தேவ தேவியை தேடி ஓடிச் சென்ற விப்ர நாராயணரை அவள் அன்போடு கட்டி அணைக்கிறாள் .

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது அப்போது என்று இந்த இருவருக்குமே தெரியாதே.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் அர்ச்சகர் மறுநாள் காலை வழக்கமான பூஜை செய்யும்போது அன்றாடம் உபயோகிக்கும் பெரிய வெள்ளி வட்டில் பாத்திரம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, ராஜாவிடம் முறையிட, ஊரெங்கும் அது தேடப்பட்டு, தேவதேவி வீட்டில் இருப்பதை கண்டுபிடித்து அவளும் அவள் தாயும் அரசர் முன்னே நிறுத்தப் படுகிறார்கள்.

விசாரணையில் ''விப்ர நாராயணர் தான் அதை தனது சீடன் மூலம் என் வீட்டுக்கு கொடுத்த னுப்பினார்'' என்கிறாள் தேவதேவியின் தாய்.

விப்ரநாராயணா அரசன் முன்னே கொண்டு வரப்பட்ட போது '' அரசே நான் இதை திருடவில்லையே, மேலும் எனக்கு யாருமே சிஷ்யர்கள் கிடையாதே'' என்கிறார். ஆனால் கோபம் கொண்ட அரசனால் கோவிலைச் சேர்ந்த பூஜா பாத்திரத்தை திருடிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப் படுகிறார்.

''எம்பெருமானே, ரங்கநாதா இதென்ன சோதனை. உன் பாத்திரத்தை நானா திருடுவேன்.நான் திருடினேனா. எனக்கு யார் சிஷ்யன்? எனக்கு ஏன் இப்படி ஒரு அவல நிலைமையை நீ தருகிறாய்?

பக்தன் கதறிய நேரத்தில் பகவான் சோழ அரசன் கனவில் ''நானே தான் விப்ரநாராயணாவின் சிஷ்யனாக வந்து அந்த பாத்திரத்தை எடுத்து தேவதேவி வீட்டில் கொடுத்தேன் '' என்று கூற திடுக்கிட்ட அரசன் அவரை விடுதலை செய்கிறான். பிறகென்ன. விப்ர நாராயணர் ராஜோபசாரங்களோடு கௌரவிக்கப் பட்டு அவர் பெருமை எல்லோருக்கும் புரிய அவருக்கும் எம்பெருமான் திருவிளையாடல் புரிகிறது.

''பகவானே, பக்தர்களுக்காக நீ என்னவெல்லாம் லீலா விபூதி புரிகிறாய். உன்னைவிட உன் பக்தர்களே சிறந்தவர்களாக பாவிக்கும் பக்த வத்சலா. உன் பக்தர்கள் பாத தூளி என் சிரசில் படட்டும். இன்றுமுதல் உன் தொண்டர்களின் திருவடிப் பொடியாகவே நான் உன்னை சரணாகதி அடைகிறேன் என்று நெஞ்சுருகி, கல்லும் கரையும் பாசுரங்கள் அவரிடம் இருந்து வெளிவர அவரை நாம் தொண்டரடிப் பொடி ஆழ்வாராக அறிகிறோம்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக தொண்டரடிப் பொடியாழ்வராக விப்ரநாராயணாவை
வணங்குகிறோம்.

தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி, 10 பாசுரங்களை கொண்டது. திருமாலை 40-45 பாசுரங்கள் கொண்டது. ஆழ்வாரின் 'பச்சைமாமலை போல் மேனி'' பாசுரம் நான் மட்டுமல்ல உங்களில் அனைவர் மகிழ்ந்து பாடும் பாசுரம் அல்லவா?

''வைஜயந்தி வனமாலா, உன் பூலோக அவதாரம் என் விருப்பப் படியே நடந்தது''என்று விஷ்ணுவும் மகிழ்ந்தார்.

No comments:

Post a Comment