Tuesday, December 13, 2022

COURT DECISION

 பாசம் ஒரு ரூபாய் - #நங்கநல்லூர்_J_K_SIVAN



ராமநாதய்யர் ஏழை என்று கனவிலும் நினைக்க முடியாது. வேதங்கள் அறிந்த ஸம்ஸ்க்ரித பண்டிதர். கல்லூரி ஆசிரியர். வசதியான பூ ஸ்திதி ஊரில் உள்ள வர். உள்ளூர் ராமர் கோவிலின் தர்மகர்த்தா. ஒரே மகன் கோதண்டராமன். நன்றாக படித்து கிராமத்திலி ருந்து குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்து நங்க நல்லூரில் வாசம். ஒரு நிலம் வாங்கி தோட்டத்தோடு ஒரு அழகான வீடு ராமநாதய்யர் கட்டினார். பள்ளிப்படிப்பு மடிந்து கோதண்டராமன் கல்லூரிக்கு சென்றான். அங்கும் மிக நன்றாக படித்து பொறியியல் வல்லுன ராக பட்டம் பெற்றான். டில்லிக்கு வேலைக்கு சென்றான். சில வருஷங்களில் அமெரிக்கா சென்று விட்டான்.

ஒரே மகனை பிரிந்து ராமநாதய்யர் சுசீலா தம்பதியர் ஏக்கமடைந்தனர். முன்பெல்லாம் அடிக்கடி டில்லியிலிருந்து வந்து சில நாட்கள் பெற்றோருடன் இருக்கும் வழக்க முண்டு. கோதண்டராமன் அமேரிக்கா போனவுடன் பெரிய உத்யோகத்தில் சௌகர்யமாக வாழ்ந்தான். இந்தியாவுக்கு அடிக்கடி வருவது சாத்தியமில்லை.வருடத்துக்கு ஒருமுறை வந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று நாலு வருஷங்க ளுக்கு ஒருமுறை என்று வர ஆரம்பித்தான். அங்கே யே கல்யாணம் பண்ணிக் கொண்ட பின் அவ்வளவு தான் போனில் கூட பேச நேரம் இல்லை.

அமெரிக்காவிலிருந்து மீண்டும் டில்லி வந்த பின்னும் கோதண்ட ராமனால் ஊருக்கு வரவோ அப்பாவை பார்ப்பதற்கோ நேரமில்லை. அம்மா காலமாகி விட்டாள் . அதற்கும் வர இயலவில்லை.

மகனின் பிரிவு ராமநாதய்யரை ரொம்ப வாட்டியது. தனிமையில் மன வியாகூலம் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. வசதிகளுக்கு ஒன்றும் குறை வில்லை. தொடர்பு பிள்ளையோடு முற்றிலும் நின்று விட்ட நிலையில் அவன் மேல் ஒரு வழக்கு தொடுத்தார்.

ஒவ்வொரு மாதமும் வசதியாக இருக்கும் மகன் அப்பாவுக்கு மாதம் பணம் நேரிலே வந்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை. நீதி மன்றம் வழக்கை நியாயமான கோரிக்கை என்று ஏற்றது.

கோதண்ட ராமனுக்கு கோபமும் ஆச்சர்யமும் ஒருங்கே வந்தது.

''அப்பா எதற்கு என் மேல் இப்படி வழக்கு போடடிருக்கிறார்? வசதிகளுக்கு குறைவில்லையே''
என்று அதிசயித்தான். அவன் அமெரிக்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இதெல்லாம் புரியவில்லை.
கோர்ட் விசாரணையில் நீதிபதி அதிசயித்தார்.

ஏன் வசதியுள்ள ராமநாதய்யர் மகன் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் நேரில் தனக்கு உயிர் பிரிகிற வரை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஆனால் அவர் வாதம் நியாயமான கோரிக்கை, உரிமை இருக்கிறது என்று யோசித்தார்.
தீர்ப்பு ராமநாதய்யருக்கு சாதகமாயிற்று. தீர்ப்பெல்லாம் முடிந்து ஜட்ஜ் கைலாசம் தனியாக ராமநாதய்யரை அழைத்தார்.

''ஐயர்வாள் , மகன் நிறைய சம்பாதிக்கிறான், வசதி யோடு இருக்கிறான் என்று இருந்தும் ஏன் மாதம் ஒரு ரூபாய் மட்டும் அவன் தரவேண்டும் என்று கேட்டீர்கள். கூடவே பணம் கேட்டிருக்கலாமே ''

''ஜட்ஜ் அவர்களே, நீங்கள் கேட்பது புரிகிறது. எனக்கு மகன் சந்தோஷமாக வாழ்கிறான் என்று தெரியும், அதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனால் இப்படி ஒரு நீதி கிடைத்ததால், எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்,
அடுத்த மாதம் முதல் மாதம் ஒரு தடவையாவது ஒவ்வொரு மாதமும் என் மகன் முகத்தை கண்ணுக்கு எதிரே என்னால் பார்க்க முடியுமே, அவன் கையால் கிடைக்கும் ஒரு ரூபாயை விட அவன் நேரில் வந்து தரிசனம் கொடுத்தால் நான் பெறப்போகும் மகிழ்ச் சிக்கு எல்லையே இல்லை. இதுவரை அவனைப் பார்க்க வோ, நேரில் பேசவோ கூட இயலாமல் போய்விட்டதே என்று தான் இப்படி ஒரு நீதி கேட்டேன்.''

பெற்றோர் பாசம் எப்படிப் பட்டது என்று எல்லோரும், முக்கியமாக குழந்தைகள் இதன் மூலம் அறிய வேண்டும் என்பது என் அவா. உலகில் மிகவும் சிறந்த பாக்யம் பெற்றோர் நீண்டகாலம் உயிரோடு இருப்பது, அதுவும் அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எல்லோருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம். அது கிடைத்தவர்கள் அதை உதாசீனம் பண்ணு வதோ மிஸ் பண்ணி விட்டு பின்னால் வருந்துவதில் பயனில்லை.அது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். எந்த புண்ய நதியில் குளித்தாலும், எந்த க்ஷேத்ரம் போனாலும் மன சாக்ஷியின் உறுத்தல் தீராது.

ram temple ayodhya


 அயோத்யா ராமர் கோவில் சிற்பி

#நங்கநல்லூர்_J_K_SIVAN

கோவில் கட்டுவது என்றால் ஒருவருடைய உழைப்பால் முடியும் காரியம் அல்ல. ராஜ ராஜ சோழன் ப்ரஹ தீஸ்வரர் கோவிலை கட்டினான் என்றால் அது முழுமையான தகவல் இல்லை. சோழன் கட்ட ஆசைப்பட்டான். ஒரு பழைய கோவில் மாடலைக் காட்டினான். ''அது மாதிரி, ஆனால் பெரிசா.''... என்று தான் சொன்னான். அவனுக்கு எவ்வளவு கல்,மண், ஸ்தபதிகள், தச்சர்கள் வேண்டும் என்று தெரியாது. எங்கிருந்து கல் வர வேண்டும் என்றும் தெரியாது. எத்தனை காலம் ஆகும் என்றும் தெரியாது..கட்டின ஸ்தபதிகளுக்கும் கட்ட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. கட்ட சந்தர்ப்பம் கிடைத்தபோது சந்தோஷமாக கூலிக்கு வேலை செய்தவர்கள். அழகாக கட்டும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களிடம் பணம் வசதி கிடையாது.

யாரோ ஒரு மஹான், தலைமைச் சிற்பியாக இருக்கலாம், இப்போதுள்ள architect மாதிரி சகல விவரங்களும் தெரிந்த அனுபவசாலி, ராஜாவிடம் அவர் எண்ணம் பூர்த்தியாக என்னென்னவெல்லாம் தேவைப்படும், எத்தனை காலம் ஆகலாம் என்று சொல்லி இருக்கலாம்.

''ராஜா எங்கே கட்டவேண்டும்? என்று கேட்டறிந்தபின் எவ்வளவு இடம் வேண்டும், எவ்வளவு கல் வேண்டும், அது எங்கே கிடைக்கும், எத்தனை கை தேர்ந்த சிற்பிகள், உதவியாளர்கள் வேண்டும், சாரங்கள் எப்படி அமைக்க வேண்டும், ஆட்கள், யானை குதிரைகள் எல்லாம் லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறான்.ஆகம சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரிந்தவனாக இதெல்லாம் மனதில் தீர்மானமாகி வரைபடம் போட்டுக்கொண்டு தான் பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்பியது இல்லையா.

ரூபாய் நோட்டை காந்தி நோட்டு என்கிறோம், காந்தி ஜி யா பிரிண்ட் பண்ணினார்?, அவரா டிசைன் பண்ணி னார்?, அவர் படத்தை சிரிப்பது போல் மரியாதைக்காக போட்டிருக்கிறோம்.

ராஜராஜன் மூல காரணம் என்பதால் அவன் முயற்சி யால் எழும்பிய ஆலயம் என்பதால், அவன் எண்ணம் உருப்பெற்றதால் அந்த பெரிய கோவில் பெருவுடை யார் கோயில், ப்ரஹதீஸ்வரர் ஆலயம், ராஜராஜ சோழன் பெயர் ரெண்டுமே என்றும் இணை பிரியாத சரித்ரம் ஆகிவிட்டது. என்றும் அழியாத அமர ஆலயம் ஆகிவிட்டது.

சந்திரகாந்த் சோம்புராவுக்கு 77 வயசு. சிறந்த ஆலய கட்டிட குஜராத்தி நிபுணர். இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நூற்றுக்கணக்கான ஹிந்து ஆலயங்களை நிர்மாணித்தவர்.

உச்ச நீதி மன்றம் அயோத்யாவில் ராமர் கோவில் கட்டலாம் என்று தீர்ப்பு வந்ததும் அடேயப்பா எத்தனை டெலிபோன் அழைப்புகள் அவருக்கு. ஹல்லோ சொல்லியே களைத்துவிட்டார். களிப்பும் அடைந்தார்.
அவர் தான் கட்டவேண்டும் என்று அன்புக்கட்டளையை மீற முடியுமா? அவருக்கும் பரம சந்தோஷம்.

ஒரு போனஸ் செயதி. அவருடைய தாத்தா ப்ரபாசங்கர் தான் 1940களில் சோம்நாத் சிவாலயத்தை உருவாக் கிய சிற்பி.
ஆகவே சரியான ஆளைத்தான் பிடித்திருக்கிறார்கள். சரியான மயன் குடும்பம். சந்திரகாந்த் கட்டியது தான் லண்டனில் உள்ள ஸ்வாமிநாராயணன் ஆலயம். உலகின் பெரிய ஆலயங்களில் ஒன்று.

அயோத்யாவில் ராமர் கோவில் எப்படி இருக்கும் என்று வரைபடம் தயாராகியது. அதை முடிவு செய்வதற்கே ஆறு மாத காலம் ஆனது. சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கரா நிலம் விவகாரங்கள் தீர்ந்து நீதிமன்றத்தால் கோவில் கட்ட அளிக்கப்பட்டது. ரெண்டு மாடி கட்டிடம் , சுற்றுப்புற மதில்சுவர், 270 அடி நீள அஸ்திவாரம் 141 அடி உயரம், நான்கு வாசல் ஆலயம். தெற்கு வாசலில் நமது தென்னக கோவில்கள் போல் கோபுரம். ராஜஸ்தா
னிலிருந்து செந்நிற கற்கள்.உறுதியானவை தருவிக்கப் பட்டன.

சந்திர காந்த் சோம்புராவை அடையாளம் காட்டியது விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சிங்கல்.

Monday, December 12, 2022

DEVAN

 தேவனின்   ''சி.ஐ.டி  C.I. D  சந்துரு.

நங்கநல்லூர்  J K SIVAN 

சில மிக  அற்புதமான  மனிதர்கள், ஏனோ , இறைவன்  சங்கல்பத்தால், பூமியில் உலக வாழ்க்கையைச்  சில காலம் மட்டுமே  வாழ்ந்து   இளம் வயதிலேயே  மறைந்து விடுகிறார்கள். ஆனால் இதில் ஒரு அதிசயம் இருக்கிறது.  இப்படிப்  பட்டவர்கள்  அமரர்களாக, என்றும்  மறக்க முடியாதவர்களாக, நெஞ்சில்  நிறைந்த வர்களாக  மாறிவிடுகிறார்கள்.  ஆதி சங்கரர், விவேகானந்தர், மஹாகவி பாரதியார்  போல  இன்னும் எத்தனையோ  மாமனிதர்கள். 

43-44 வயதே  வாழ்ந்த  திருவிடைமருதூர்க்  காரர்  ஸ்ரீ R   மஹாதேவன்  B.A.   என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால்  ''அமரர்''  எழுத்தாளர்  ஆனந்த விகடன் ஆசிரியர்   தேவன்'' என்றால்  சகலரும் அறிவார்கள்.
கல்கியால்  ஈர்க்கப்பட்டு தனக்கென ஒரு பாணியை உரிமையாக்கி  அவர்  படைத்த நாவல்கள் , கதைகள், கட்டுரைகள்  பல லக்ஷக் கணக்கான  தமிழர்களால்  திரும்பத்  திரும்ப படிக்கப்படுபவை.   அவரது  மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு, கோமதியின் காதலன், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்  ராஜத்தின் மனோரதம், ஸ்ரீமான்  சுதர்சனம்,கல்யாணி, லட்சுமி கடாக்ஷம்  போன்ற பல   புத்தகங்களை பல முறை படித்து ரசித்தவன் நான்.

சி.ஐ டி. சந்துரு என்ற  ஒரு நாவல் கடந்த ஒரு வார காலத்தில் நான் ஓய்வில் இருந்த போது  படித்தேன்.  இதற்கு முன்பு  ரெண்டு மூன்று முறை   பல வருஷங்களுக்கு முன்பு படித்த நாவல் தான்.  என்றாலும்  ஆரம்பித்தால்  கையிலிருந்து புத்தகத்தை  கீழே  வைக்க முடியாத அளவு, ''அப்புறம் என்ன, ஐயோ  அப்புறம் என்னாச்சு?'' என்று  ஆர்வத்தைக்  கிளப்பிக்  கொண்டே  விறுவிறுப்பாக செல்லும் ஒரு ஈடற்ற  தமிழ் துப்பறியும் நாவல். அற்புதமான எளிய  தமிழில்  சொல்லாற்றல்.  540 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஒரே நாளில்  படித்து முடித்தேன்.  கதை முழுக்க ஆசாமிகளின்   தேடல்,  ஓட்டம், அடி  பிடி  தான், சிலந்தி வலை பின்னுவதைப் போல  தேவன்  இந்த துப்பறியும் நாவலை  பின்னி இருக்கிறார். அதில் வரும் அத்தனை பாத்திரங்களும் ஒன்றுக்கொன்று  சளைத்தவை அல்ல.  விசித்திர குணாதிசயம்  கொண்டவர்கள்.  விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகுமே தவிர   தளர்வற்ற   ஆர்வம் குன்றாத நடை.

 சந்துரு  ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ். முதல் பாரா முதல்  கடைசி பாரா வரை  த்ரில்லிங்குக்கு குறைவே இல்லை.  

செங்கல்வராய பிள்ளை  ஒரு கோடீஸ்வரர். மலயாவிலிருந்து நிறைய  பணம் சேர்த்து, (நேர்வழியில் இல்லை) சென்னையில் தேனாம்பேட்டை மாளிகை கட்டிக்கொண்டு வாழ்கிறார்  பிள்ளையோடு  மலாயாவில்  சிங்கப்பூரில்  பிள்ளையோடு  இத்தகையை  நிழல்  வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட  சுந்தரம் பிள்ளை,  தாமோதரன், சந்தானம், மதுரநாயகம்,கணேசன்  போன்ற  நிழலான  ஆசாமிகள் அவர் சொத்தை  அபகரிக்க  சென்னையில்  ஆட்டம்  போடுகிறார்கள்.    சில  ரகசிய தஸ்தாவேஜ்கள், சாவிகள்  ஒரு தோல் பையில்  பிள்ளையிடமிருந்து  பறிபோக, அந்த  தோல் பை பல கைகள் மாறி, மூன்று வித குழுக்களாக  ஆசாமிகள் ஒருவரை ஒருவர் துரத்தி, விரட்டி, ஜெயித்து, தோற்று. ஆள் கடத்தல்,  ஆள் மாறாட்டம் அநேகம்.  அபாரமான உத்தியில் தேவன்  சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக  அடுக்குகிறார்.  சம்பவங்கள்  லிங்கி செட்டி தெரு  காலி வீடு,  கோவிந்தப்ப  நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை பங்களா,  சிந்தாதிரி பேட்டை  வீடு, சுந்தரம் பிள்ளை தாம்பரம் பங்களா, புரசைவாக்கம், என்று  சுற்றி சுற்றி  நிகழ்ந்து அக்காலத்திய  சென்னையின்  முக்கிய இடங்களை போட்டோ பிடித்து காட்டுகிறது.

1955-56 களில் ஆனந்த விகடனில் ஒவ்வொரு வாரமும் எத்தனை லக்ஷம்  தமிழர்கள்  ஆர்வமாக  வாரா வாரம் இந்த  தொடரை படிக்க காத்திருந்தார்கள் என்பது எனக்கு  சிறிய வயதில் தெரியும்.  நாலணா கொடுத்து  ஆனந்த விகடன்  பிரதியை வாங்க  காத்திருந்து,  ஒவ்வொரு  புதன், வியாழன் வந்த அன்றே   வாங்கி ள்.  அனைத்து பிரதிகளும்  ஒரே நாளில் விற்றுப் போய்விடும்.  

 கோபுலுவின்  அற்புத  ஓவியங்கள்  சந்துரு மற்றும்  நாயர், தம்பி, இந்திரா, சுந்தரம் பிள்ளை, சங்கரன், தாமோதரன்  போன்ற  பாத்திரங்களை அற்புதமாக உயிரூட்டி தத்ரூபமாக  தேவனின் கற்பனையை கண்முன்  காட்டுபவை. கோபுலுவின் சித்ரம் ஒரு தனி ரகம். கல்கிக்கு  மணியம்  மாதிரி  தேவனுக்கு கோபுலு. 
  
ஒவ்வொரு தமிழ் தெரிந்த வாசகரும் படித்து இன்புற வேண்டிய  ஒரு துப்பறியும் நாவல்   சி.ஐ.டி  சந்துரு.    தேவன் காலமாவதற்கு முதல் ஆண்டு 1955ல் வெளிவந்த நாவல்.  மனிதர்களின் ஸ்வபாவம், குணம்,  மனநிலை, அவர்களது  செயல் பாடுகள், அனைத்தையும் படம் பிடித்து   கண் முன் காட்டும் தேவனின்  எழுத்தில், சாதுர்யம்,  ஹாஸ்யம், கோபம், பக்தி, நீதி நெறி அக்காலத்திய  வாழ்க்கை முறை,  போக்குவரத்து வசதிகள்,(அநேகர்  ரிக்ஷா வண்டியில் தான்  பிரயாணம் பண்ணினார்கள், பஸ் , நிறைய  பக்கங்களில் ஓடுகிறது.)    பாத்திரங்களின்  சொல்லாடல்  சமயோசிதமாக, ஹாஸ்யத்தோடு  இணையற்ற  தனித்த தன்மையோடு  மிளிர்கிறது.   எண்ணற்ற   சம்பவங்களை  பல முடிச்சுகளாக  கட்டி,  சிக்கல்களை  சந்துரு  ஒவ்வொன்றாக அவிழ்ப்பது போல  காட்சிகள்  ஜோடனை செய்யப்பட்டுள்ளன.

 தேவனின் உன்னத இந்த படைப்பை  அனைத்து தமிழ் அன்பர்களும் ஒருதரமாவது படித்து  நான் பெற்ற  இன்பத்தை பெறலாம்.  இந்த புத்தகம்  கூகிளில்   தேடினால்  இலவச மாக  படிக்க  கிடைக்கிறது.  முகநூலில்  PDF  புத்தமாக  இணைக்க  வழியில்லை.   வாட்சப்பில் இணைத்துள்ளேன். 




LIFE LESSON

 நாம்  சந்தோஷப்படலாம்..

#நங்கநல்லூர்_J_K_SIVAN

 
நாம்  எல்லோருமே  ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.  

சிலர்  வீட்டில்  ஒரு குளிர் சாதன பேட்டி  பிரிட்ஜ்  fridge  இருக்கிறதே. 
அநேகருக்கு  உடம்பில்  அடுத்த நாள்  அணிய  துணி, ஆடை,  இருக்கிறது. 
சிலருக்கு  ஏதோ பழசானாலும் ஒரு ஒட்டு வீடாவது குடிசையாவது இருக்கிறதே,  கால் நீட்டி படுக்க  இடம் இருக்கிறதே.   
கணக்கெடுத்து பார்த்தால் இப்படி இருக்கும் நாம் உலகத்தில் வாழும் ஜனங்களில் முக்கால்வாசி  ஜனங்களை விட  பணக்காரர்களாம்..
அடேயப்பா  என்ன நிலைமையில் மற்றவர்கள், பரம  ஏழைகள் உலகெங்கும் வாழ்கிறார்கள் என்று யோசிக்கவே  நடுங்குகிறது.

நமக்கு பர்ஸ் இருக்கிறது, அதில் ரூபா  காசு இருக்கிறது. எங்கே வேண்டுமானாலும் பஸ்ஸிலோ,  ட்ரைனில்  நின்று கொண்டோ  போக முடிகிறது. நாம்  பணக்கா ரர்களாக இல்லையே என்று வருத்தப்படவே வேண்டாம்.  
மேலே  சொன்ன  சின்ன விஷயங்கள் இருந்தால் கூட,  உலகத்தில் உள்ள  மக்களில்  முதல்  18 சதவீத வசதி படைத்த பணக்கார மக்களில் நாமும் ஒருவர் என்று  புள்ளி விவர கணக்கு பார்ப்பவர்கள்  சொல்கிறார்கள். . 

அப்படியென்றால் மற்றவர்கள், அதாவது,   82 சதவிகித மக்களின் கஷ்டம் நமக்கு தெரியவில்லை. ஏதோ நாம் தான்  வசதி இல்லாதவர்கள் என்று அங்கலாய்க்கிறோம்

கையில் காசு இல்லை,  கடன் இன்னும் பாக்கி இருக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக கட்டி கடனை தீர்க்கிறோம், ஏதோ  ஊருக்கு கடோசியில்   ஒரு சின்ன வீடு,  ஐயையோ அதில்லை, சின்னதாக ஒரு வீடு வாங்கி விட்டோம். அப்போலோவோ  வேறே ஏதோ  ஆஸ்பத் திரி  மருத்துவ செலவில்லை. சைக்கிளில் 20 கி.மீ. மிதித்துக் கொண்டாவது  வேலைக்கு செல்கிறோம், கார்  இல்லை.... ஸ்கூட்டர் இல்லை, 

''யோவ்,  நீ  ஏழை இல்லை...  '' 
உலகத்தில் உள்ள   எத்தனையோ லக்ஷம் மக்கள்,  இந்த  வாரம்  சாகப்போகிறவர்கள், வியாதியால்   சகலமும் இழந்து, நரக அவஸ்தை படுபவர்களில்  நானும்  நீயும்  சேர்த்தி  கிடையாது என்று தெரிந்து கொண்டு  ஆனந்தமாக  தையா தக்கா  என்று குதிப்போம்..  கிருஷ்ணா  தேங்க்ஸ் டா என்று சொல்லுவோம்.  ஏதோ நமக்கு ஆயுசு கெட்டி டா .

கடைசியாக ஒரு  குட்டி சேதி சொல்லி விட்டு  ஓடி  விடுகிறேன்.  
நீ இந்த பதிவை பார்த்தாயா?, படித்தாயா?,  புரிந்து கொண்டாயா?.. 
ஆஹா  அப்படியென்றால்  உலகத்தில் உள்ள  3 கோடி மக்களில்,  கண் பார்வை இன்றியோ, படிக்க முடியாதவர்களோ,  படித்தாலும் புரிந்து கொள்ள முடியாத மனோ நிலை கொண்டவர்கள், பைத்தியங் களில்  நீ  கிடையாது என்று  சந்தோஷப்படவேண்டும்... 

மறுபடியும்  நரசிம்மா உனக்கு தேங்க்ஸ்.

Sunday, December 11, 2022

PESUM DEIVAM


 பேசும் தெய்வம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN


''நான் இருக்கேன் உனக்கு.''

இசை  என்றால்  அநேகருக்கு  சினிமா  பாட்டுகள் தான் ஞாபகம் வரும். வேறு தெரிந்துகொள்வதில் விருப்பமில்லை
சிலருக்கு  கர்நாடக சங்கீதம், அதில் பிடித்த ராகங்கள் நினைவுக்கு வரும். 
சிலருக்கு  பக்தி பாடல்கள் மட்டுமே, அது  சினிமாவில் இருந்தாலும், கீர்த்தனைகளாக இருப்பினும்,  மனதில் பகவானை நினைக்கச் செய்தால்  அது மட்டுமே  கவனத்தை கவரும். இதற்கு சங்கீதம்  முறையாக தெரிந்திருக்க அவசியம் இல்லை.   
நான் கடைசி ரகம்.  அதுவும்  பாஷை புரிகிறதோ 
இல்லையோ,  ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ்  என்று பல மொழிகளில்  அற்புதமாக மனதை வருடும்  கீர்த்த னைகளை  அருமையான குரலில் பாடுபவர்களை  தெய்வமாக கொண்டாடு வேன்.  என் மனதை தொட்டவர்கள் அப்படி சிலபேர் தான்  MKT,  TMS, பாலமுரளிகிருஷ்ணா,  PBS,  மதுரை மணி அய்யர், GNB, மதுரை சோமு,  MSS, MLV என்று பல பேர்.

கர்நாடக சங்கீதத்துக்கு உயிர் ஊட்டுவது மிருதங்கம் எனும் அதிசய வாத்யம், சொற்கள் அதில் பேசும். பாலக் காடு மணி ஐயர் , TK  மூர்த்தி, காரைக்குடி மணி  ஆகியோர் வாசிப்பு ரொம்ப பிடிக்கும். TK மூர்த்தியை மடிப்பாக்கத்தில்  அவரது இல்லத்தில்  நேரே சந்தித்து அவரோடு அவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு ஒரு கட்டுரை கூட பகிர்ந்து கொண்டிருக்
கிறேன்.  கர்நாடக சங்கீதம் தெய்வீகமானது. மஹான்கள் வாக் கேய காரர்களால் இயற்றப்பட்ட  கீர்த்தனைகள்  அர்த்த புஷ்டி வாய்ந்தவை. கண்களில் பக்தி ரஸம் ஆனந்தக்  கண்ணீராக பெருக, நெஞ்சை உருக  வைப்பவை. 

சங்கீதம் என்றால் மஹா பெரியவா நினைவும்  எப்போதும்  தானாகவே வரும். அவர்  சங்கீதத்தில் நிபுணர். வீணை வாசிக்க தெரிந்தவர்.  எண்ணற்ற  வித்வான்களை அழைத்து  கீர்த்தனைகள் பாட வைத்து ரசித்தவர் . ஆசிர்வதித்தவர்.  

ஒரு சம்பவம்  எப்போதோ  படித்தது நினைவுக்கு வருகிறது.  சொல்கிறேன்:

யாரோ  ஒரு  மிருதங்க வித்வான், தன்னுடைய  சிறு பிள்ளையோடு மஹா பெரியவா தரிசனத்துக்கு  காஞ்சி மடம் வந்தார்.  பையனும்  மிருதங்கம்  அப்பாவிடம் கற்றுக்கொண்டு வாசிப்பவன்.  பெரியவா  சந்நிதியில் ஒரு கச்சேரி.  அதில்  பையன் மிருதங்கம் வாசித்தான்.  மகா பெரியவா  கச்சேரி முடிந்தவுடன் அந்த பையனை அழைத்து ஆசிர்வதித்து அவனுக்கு ஒரு பட்டுத்துண்டு,  சால்வை பரிசளித்து கௌரவித்தார்.  

45 வருஷங்கள் ஓடிவிட்டன. பையன் இப்போது நடுத்தர வயதினர். ஆகாயவாணி  வானொலி நிலையத்தில் இசைப்பணி. மிருதங்க வித்வான்.  அவர்  ஒருநாள்  மஹா பெரியவா தரிசனம் பெற  காஞ்சி மடம்  சென்றார். போகும்போது தனக்கு முதன் முதலில் மஹா பெரியவா அளித்த   அந்த  சிவப்பு கலர்  பட்டுத் துண்டையும்  எடுத்துச் சென்றார். 

''இந்த பட்டு வஸ்த்ரம்  மஹா பெரியவா எனக்கு பரிசா அளித்து  ஆசிர் வாதம் பண்ணி இன்று நான் சௌகர் யமாக  மிருதங்க வித்வானாக வாழ்கிறேன். உங்க கருணை''என்று கண்ணீர் மல்க கூறி அந்த  சிவப்பு  பட்டு வஸ்திரத்தை எடுத்துக்  காட்டினார். 

''அப்போ உனக்கு  ஒன்பது வயசு''   

பளிச்  சென்று  பேசும் தெய்வம் சொன்னபோது  அந்த வித்துவான் நிலை குலைந்து போனார்.  அருகே இருந்த பக்தர்களும் சேர்ந்து தான்.  எவ்வளவு ஆயிரக்கணக் கான   பக்தர்களை  தினமும் சந்திக்கிறார்.  அதுவும் 45 வருஷங்களுக்கு முன்பு நடந்ததை நேற்று நடந்தது போல் சொல்கிறாரே..!   அது தான் மஹா பெரியவா..

இன்னொரு கூடுதல்   விஷயம்... அந்த வித்வான்  வெளியூரில் எங்கேயோ  சில காலம்  வசிக்க நேர்ந்தது.  அவரால்  மஹா பெரியவா படம் இல்லாமல்  இருக்க முடியாது. தினமும் அதை வணங்கி த்யானம்
 பண்ணுபவர். அவரது பெட்டி பிரயாணத்தில்
தொலைந்து போய்விட்டது.  பெரியவா படம் இல்லை
யே! என்ன செய்வது? மிகவும் ஆசாரமானவர் ,தானே சமைத்து சாப்பிடுபவர்,

அரிசி எங்கே கிடைக்கும்  என்று தேடி  ஒரு கடையில் ஐந்து கிலோ அரிசி வாங்க சென்றார். கடைக்காரர்  இந்தியர் தமிழர் என்று அறிந்து மகிழ்ந்தார்.  அரிசியை ஒரு பேப்பர் பையில் போட்டு சுற்றி கொடுத்தார்  கடைக்காரர்.  

வீட்டில் அரிசியை ஒரு பாத்திரத்தில்  கொட்டி வைக்க  பேப்பர் பையை பார்க்கிறார்.

அந்த பையின் மேல்  மஹா பெரியவா புன்னகையோடு  அபய ஹஸ்தம் அளிக்கும்  படம் ஒரு பாதி பையை அலங்கரித்து  அழகாக கசங்காமல் இருந்தது. 

அந்த அரிசியை தயார் செய்து வியாபாரம் பண்ணி னவர்  பெரியவா பக்தரோ என்னவோ  அரிசி பேப்பர் பையின் மேல் பெரியவா படம் பிரிண்ட் செய்திருந்தார்.   
அந்த பையில் ஐந்து கிலோ அரிசி இந்த கடைக் காரர் கொடுத்திருக்கிறார்.  வித்வான்  மன நிலை அப்போது எப்படி இருந்திருக்கும்......?!    

தெய்வம் எங்கும் இருக்கிறது, உணர்ந்தால்  மகிழலாம். 

LIFE LESSON

 கோபாலசாமியின்  அறிவுரை.  நங்கநல்லூர்   J K  SIVAN 


ரொம்ப  படித்தவர்கள்  தான்  ஞானிகள் என்பது இல்லை. படிக்காதவர்கள் கூட  நிறைய  யோசிக்கிறார்கள், அவர்கள் தான் அதிகம் யோசிப்பவர்கள். தங்களுக்குள் கேள்விகள் கேட்டுக்கொண்டு பதில் தேடுபவர்கள்.  
கோபாலசாமி  குதிரை வண்டி ஓட்டுபவன் மட்டும் இல்லை.  பழைய  MKT  பாகவதர்  சினிமா வில் வந்த பக்தி  பாட்டெல்லாம் அற்புதமாக அப்படியே  சங்கீதம் தெரியாமலேயே  பாடும்  வேதாந்தி. வயது  72.  கோபாலசாமி  ''சொப்பன  வாழ்வில் மகிழ்ந்து,   ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்,   சத்வகுண போதன்''  பாட்டெல்லாம்  பிச்சு உதறிடுவான்.  குஷியாக   குதிரை வண்டியில்  ஏறிக்கொண்டு  வழியெல்லாம் பாடிக்கொண்டே போவான்...அது ஒரு காலம். உயிரோடு  பயணிகள்  அவன் வண்டியில் சென்றது எத்தனையோ வருஷங்கள் முன்னே. இப்போது  பேசாத, அசையாத, படுத்த உயிரற்றவர்கள் தான் அவன் குதிரை வண்டியில் பயணிக்கிறார்கள்.  கோபாலசாமி  பாடுவதை பேசுவதை நிறுத்திக் கொண்டான்.

இப்போது அவனுடைய  உதவியாளன்  குதிரையை பராமரிப்பவன் சுப்பிரமணி.  அவன் எப்போதும்  கோபாலசாமியை  கேள்விகள் கேட்டு அறிவுரை பெறுபவன்.  கோபாலசாமியின் வாரிசு.

''டேய்   சுப்பிரமணி, என்னையும் ஒருநாள்  இந்த வண்டியிலே தூக்கிக்கிட்டு போனப்பறம் இந்த வண்டியும் குதிரையும் உனக்கே வச்சுக்கோ''

ஒருநாள்  சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரே  ஜெனெரல் ஆஸ்பத்திரி வாசலில்  அவர்கள் பேச்சில் கொஞ்சம் காதில் விழுந்ததைச்  சொல்கிறேன்:
''..................''
சுப்பிரமணி,  இப்போ  நீ  கேட்டியே  அது ஒண்ணும்  புதுசு இல்லை.  ஏற்கனவே  எப்பவோ, உனக்கே  தெரிஞ்சுது தான்.  ஏன் அப்போ உனக்கு அதை இப்போ எடுத்து சொல்லணும் றியா ?  அது தான் விஷயம்.  நமக்கு தெரிஞ்சிருக்கு என்கிறதே நமக்கு தெரியறதில்லே.  எங்கேயாவது எப்போவாவது   யாராவது    எடுத்து  சொன்னா  லபக்னு   மனசு பிடிச்சிக்கும். 

''அது  என்ன விஷயம் நயினா,  கொஞ்சம் சொல்லேன் ?

நம்பளுடைய  வாழ்க்கையிலே  நாம்   எப்பப்பவோ, யார் யாரையோ  சந்திக்கிறோமே  அவங்க யாருமே  ஏதோ தானாவே சும்மனாங் காட்டியும்  நம்ம கிட்டே வந்தவங்க இல்லைப்பா.   ஏதோ நமக்கு  சரியான நேரத்திலே  ஏதோ தெரியாததை  சொல்லிகே கொடுக்கிறதுக்கோ,இல்லேன்னா  நமக்கு  இருட்டிலே  வழிகாட்டவோ, உதவி  செய்யவோ  வந்தவங்க. கடவுளா  பாத்து நம்ம கிட்டே  ஏதோ ஒரு காரணத்துக்காக அனுப்ப பட்டவங்கன்னு  தான் தோணுது.  காரணம் இல்லாம எந்த காரியமும்  நடக்கிறது இல்லேப்பா.எங்க தாத்தா ரங்கய்யா  அடிக்கடி இதை சொல்லி கேட்டிருக்கேன்.

ஒண்ணு   தெரிஞ்சுக்கோ சுப்பிரமணி,   நாம்  எதிர் கொள்ளுகிற  கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ, வேறே  மாதிரி ஒருவேளை  இருந்திருக்கலாமோன்னு  கூட   அடிக்கடி  தோணும். நிச்சயம்  அப்படி கிடையாது. எது எப்படி நடக்கணுமோ அது அப்படி தான், அப்படி மட்டும்  தான்,  நடக்குது.   தலையால் தண்ணி குடிச்சாலும் மாறாது. அப்படித்தான் நடக்கும்.

இதோ பார்,  நாம என்ன சொல்றோம்? நினைக்கிறோம்?  ஒருவேளை இப்படி செஞ்சிருந்தா  வேறே மாதிரி  லாபகரமாக நடந்திருக்குமோ?  வேறே பலன் கிடைச்சிருக்கலாமோ?. நாம்  கொஞ்சம் வேறே மாதிரி நடந்திட்டிருக்கலாமோ?. அப்படி தானே.'' ஹுஹும்.'' ..  சான்ஸே இல்லே.  எது நடந்துச்சோ, அது அப்படி மட்டும் தான் நடக்கணும் என்கிறது தான்  விதி, அதாவது   கிருஷ்ணன் சாமி   முடிவு. நாம யார்  அதை மாத்தறதுக்கு?

ஒவ்வொரு  நேரத்திலேயும், சந்தர்ப்பமும், நிகழ்வும், வாழ்க்கையிலே  எது எப்படி எப்போ நடக்கணுமோ அப்படி தான் அந்தந்த நேரத்திலே  அதுக்கேத்த மனிஷங்களாலே  நடைபெறுது.   ஆமாம். பக்காவா,   சரியான சமயத்திலே, சரியான நேரத்திலே  டாண்  ணு  நடக்குது. அப்பறம், இப்பறம்,  எல்லாம் அங்கே கிடையாதுப்பா.

நடந்ததை நினைச்சுப் பாக்காதேடாம்பாங்க.  நீ நினைச்சுப் பார்த்தா, நாமளா  இப்படி நடந்தோம், நாமா இதைச் செய்தோம், அடேயப்பா எப்படி நம்மாலே முடிஞ்சுது ன்னு ஆச்சர்யப்பட  வைக்கும்  அது எல்லாமே. .  அது தான் அந்த கிஷ்டன்   செய்யற  வேலை  ப்பா. 

'' தம்பி எதுவுமே  நிரந்தரம் இல்லே. பொழுது விடிஞ்சா காலியாயிடும்,  பூடும் .  கியாரண்டீ எதுவும் இல்லேப்பா. இது ஏம்ப்பா  நமக்கு  மறந்து பூடுது?  மாறிக்கிட்டே  இருக்குது எல்லாமே, சுத்துதுப்பா  உலகம், அதோட எல்லாமே சேர்ந்து தானே  சுத்துது.  சுத்தறது   எப்படி நிலைச்சு இருக்கும்?   நாம  எல்லாரும் ஒரே மாதிரியா இருக்கிறோம்? ஒரேமாதிரியா பேசறோம், நினைக்கிறோம், எதையாவது செய்றோம்? அது தான் மாறுதல்,  எல்லாம்  கிஷ்டன் வேலை. இது புரிஞ்சுக்குனு   அடப்   போய்யா சரிதான் .  ''என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு பாடு''    போய்  ''பன் ''னு  தின்னுட்டு  டீ  குடிப்பா?  

சுப்பிரமணி. நான் சொல்றதே  மனசிலே  நல்லா எழுதி வச்சுக்கோ.  நீ  யாருக்கு நல்லவனா இருக்கியா இல்லையா ன்றது  முக்கியம் இல்லே. உனக்கு நீ  நல்லவனா  நம்பும்படியா  எப்பவும் இருந்துக்கோ. உன்னையே நீ ஏமாத்திக்காதே.   புடிச்சா  நீயும்  கிஷ்டன் சாமியை  கும்பிடு. அவனை நம்பு. நிச்சயம்  அவன் தான் காப்பாத்தறவன்.


mahakavi Bharathi

 ஒரு அபூர்வன் பிறந்த நாள்

நங்கநல்லூர்  J.K. SIVAN

மூன்று நாட்களாக  விடாத மழை,  பயங்கர குளிர்  காற்று,  புயல்,  சென்னை  மரினா கடற்கரை கண்ணுக்கே தெரியவில்லை.  ஜல ப்ரவாஹம் .   கடல்நீர் கொந்தளித்து  மணல் பரப்பை விழுங்கி  தார்  ரோட்டுக்கு வரும் நிலை.   இன்னொரு சுனாமி எங்கோ  விழித்துக் கொண்டிருக்கிறதோ?

இந்த கடலை அடிக்கடி  பார்த்து  வியந்த ஒரு  பரிசுத்தன்  பிறந்த நாள்  இன்று.   பாரதமாதாவின்  அருமைப் பிள்ளைகளில் ஒருவன்.  இவ்வளவு கடல் தண்ணீர் இருந்தும் தாகம்  தீர்க்காது.  சுதந்திரம் தாகம்  தீராமலே  மறைந்த  மஹாகவி சுப்ரமணிய பாரதி.  1882ல்  எட்டயபுரத்தில் பிறந்த மாமனிதனுக்கு இன்று  140 வயது முடிந்து விட்டது காகிதத்தில். அவன் இருந்ததோ 40   வருஷங்கள் கூட இல்லை.  நாலு யுகத்துக்கு அவன் பெருமை பெற்றுவிட்ட  அமர கவி.  தமிழ் என் தாய் மொழி, நான் தமிழன் என்று  எண்ணும்  ஒவ்வொரு  ஹிந்துவும்  ஒரு கணம், ஒரு வினாடி அவனை நினைத்து  வணங்க வேண்டிய  நாள்.   

பாரதியின்  திருவல்லிக்கேணி  வாழ்க்கையில் பசியும்  வறுமையும் புலமையும் நிறைந்து இருந்தது. 

ஒரு காட்சி  இதோ.
காலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாக உக்ரமாகிக்  கொண்டு வந்தது. திருவல்லிக்கேணியில் எப்போதுமே கூட்டம் உண்டு அதுவும் பார்த்தசாரதி கோவில் பக்கம் கேட்கவே வேண்டாம். வெள்ளைக்காரன் காலம். சுதந்திர தாகம் அநேக இந்தியர்களிடையே பரவலாக தொத்திக்கொண்டு வெள்ளையர்களுக்கு நடுக்கம் தந்த வேளை.

அந்த வீட்டில் வீட்டுக்   கவலையே இல்லாத பொறுப்பற்ற பிராமணர் ஒருவர் சதா ஏதோ கனவுலகத்தில் சஞ்சரித்த வராக இருந்தார். மனைவி குழந்தைகள் பற்றி பிரஞையே கிடையாது. நிறைய புத்தகங்கள் யாரிடமாவது கிடைக்கும்.    படிப்பது,   காகிதங்களில் கிறுக்கி எழுதுவது. இதே வேலை. அன்றும் அதே போல் தான்.

அடிக்கடி நண்பர்கள் சிலர் வருவார்கள். அந்த மீசைக்கார ப்ராமணனிடம் பேசி விட்டு போவார்கள். அவர் மனைவி சாது. எதிர்த்து பேசமாட்டாள்.    அடிக்கடி   மீசைக்காரரை  சந்திக்க  வரும்  தாடிக்கார குடும்ப நண்பர் வந்து திண்ணையில் அமர்ந் தார்.மீசைக்காரர் அதை லக்ஷியம் பண்ணாமல் எதையோ எழுதிக்  கொண்டி ருந்தார்.

தாடிக்காரரைப்  பார்த்த மீசைக்காரர் மனைவி   அவரை வரவேற்றாள்.

''வாங்கோ. தீர்த்தம் சாப்பிடறேளா?'' அது தான் இருந்தது வீட்டில்.

''என்ன சமையல் இன்னிக்கு?.

''வாயு பக்ஷணம். மணி அரிசி இல்லை, பருப்பு, புளி, நெய்,  தீர்ந்து போய் பல நாள் ஆகிறது. இவர் ஒன்றுமே கவனிப்பதில்லை. நானும் சொல்லிப்  பார்த்தாகி விட்டது. இன்று தோட்டத்தில் சில கீரைகள் பறித்தேன். அது தான் மசியல் சாதம். சுட்டப்பளம். நாளை எப்படியோ?'' 

தாடிக்காரர் எப்போது ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் வைத்திருப்பார்.  அன்று அதுவும் இல்லை சுப்ரமணிய சிவா விடம். கடவுளே என்று வருத்தப்பட்டார்.

காதில் வாங்காதது மாதிரி இருந்த மீசைக்காரர் தலையைத்  தூக்கினார். தாடிக்  காரரை பார்த்து கம்பீரமாக  ஒலித்தார்: 

'' சிவா, இதை பாருங்கோ, தான் எழுதியதை காட்டினார் மீசைக்காரர். 

தாடிக்காரர் அதைப் படித்து வியந்து போனார். அந்த காகிதத்தில், அந்த மோசமான வறுமை நிலையில் மீசைக்கார பாரதியார் எழுதியது '':

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
(எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
(எத்தனை)

முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா

பாரதி ஸ்தித ப்ரஞன். ஜீவன் முக்தன். பசியில் வயிறு வாடியபோதும் இறைவா எத்தனை கோடி இன்பம் தந்தாய் என்று நன்றியுடன் சொல்லும் ஒரே தமிழன். தனி ஒருவனுக்கு உணவு இல்லையென்றால் இந்த ஜகத்தையே அழித்து விடு.என்று பொதுநலமே குறியாக கொண்ட அக்னிக் குஞ்சு மஹாகவி பாரதியார். இன்று அவர் பிறந்த நாள்.

ஐந்து வயதில் அம்மாவை இழந்த சுப்ரமணிய பாரதிக்கு எல்லா பெண்களும் தாய். பெண்கள் விடுதலைக்கு பாடு பட்ட முதல் வீரத் தமிழன். பாரதியின் புதுமைப்பெண் எப்படி இருப்பவள் தெரியுமா?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

வெள்ளையனிடம் இருந்து தப்பி புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்க இடத்துக்கு சென்ற பாரதிக்கு அங்கும் சில நண்பர்கள் உண்டு. எப்போதும் ஒரு கை ரிக்ஷாவில் வேலைக்கு போவார். அவரைக்  கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும். முக்யமாக ஏழைகளுக்கு. இந்த ரிக்ஷா இழுப்பவனுக்கும் அதே போல் அவர் மேல் பிரியம். அவரை பாட சொல்லி கேட்பார்கள். அவரை சித்தராக பார்த்தார்கள்.

''சாமி உங்களை என் ரிக்ஷாவில் இழுத்துகிட்டு போறதுக்கு காசு வாங்கமாட்டேன் என்றான் அந்த கூலியாள். இந்த மாதிரி நிறைய ரிக்ஷாகாரர்களுக்கு தன்னுடைய மேல் அங்கவஸ்திரத்தை கொடுத்திருக்கிறார். அவர் வஸ்திரத்தை போட்டுக்கொண்டால் அவரைப்போல் தமிழ் எழுதவோ,  பேசவோ,  கொஞ்சமாவது வரும் என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை.

பாரதிக்கு தமிழ், ஹிந்தி, ஸம்ஸ்க்ரிதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரெஞ்சு, இங்கிலிஷ் , லத்தீன், கிரீக், லத்தின், அரபிக், உருது என்று 32 மொழிகள் தெரியும். இருந்தாலும் அவர் மார் தட்டி வீரமாக பெருமையாகச்   சொன்னது என்ன ஞாபகம் இருக்கிறதா?

'' யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்''

நம் எல்லோரையும் இந்த நாட்டின் மன்னர்களாக்கிய இந்த கவிஞன் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக தனது அனைத்து பாடல்களும் தேசீய மயமாக்கப் பட்ட பெருமைக் குறியவர்.

சம்பளம் வாங்கிக்கொண்டு சுதேச மித்ரன் ஆபிசிலிருந்து ரிக்ஷாவில் வீடு திரும்பும்போது ரிக்ஷாக் காரர் தனது வறுமையைச் சொல்லிக்  கொண்டு வண்டியை இழுத்துக்  கொண்டு ஓடுகிறார்.

 ''இந்தா இதை வீட்டுக்கு கொண்டு போ ''என்று தனது சம்பளம் முழுதும் அவனுக்கு கொடுக்க யாருக்கு தோன்றும்?. அது  தான்  வறுமையில் வாடிய  கர்ணன் பாரதியார்.

ஜாதி அடிப்படையில் அரசுகள் தோன்ற ஆரம்பித்து நன்றி மறந்தவர் பாரதியை சிறப்பிக்கத்  தவறிவிட்டனர். அந்த மா பெரும் கவிஞன் உயர்ந்த பரந்த நோக்கம் கொண்டவன் என்பது ஏனோ மறந்து விட்டது:

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

பாரதி புதுமை பித்தன் மட்டுமல்ல, சித்தனும் கூட.

எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்
பாரதி புத்தனும் கூட என்றும் இறவாத ஞானி.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...