Thursday, October 29, 2020

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம்  J K SIVAN

ஆசார்யாளும்  அரியக்குடியும்.   1

மஹா பெரியவா  ஆத்ம ஞானி மட்டுமா?  சாஸ்த்ர சம்பிரதாய, சரித்திர ஞானி மட்டுமா?   இல்லவே இல்லை, இதோடு கூட  சிறந்த  சங்கீத ஞானியும் கூட.    சாதாரணமாக   கற்றுக்கொள்ள  ஏழு வருஷம் ஆகும் . வீணை வாசிப்பது கஷ்டம்.   மஹா பெரியவா அதில் சுலபமாக  கீதங்கள் வாசித்தவர்.
தேவகோட்டையில்  பிரபல சங்கீத வித்துவான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்  மஹா பெரியவாளை  தரிசித்த   போது   ஒரு  அற்புத சம்பவம் நடந்ததே. சிலர்  ஏற்கனவே இதை அறிந்திருக்கலாம். மீண்டும் நான் ஒருமுறை சொல்வதில் என்ன தப்பு? தெரியாதவர்களுக்கு  இதை அடையச்செய்வதும் எனக்கு புண்யம் தானே!
ஜூன் 1961.   பெரியவா  தேவகோட்டையில்  சில  வாரங்கள்  முகாம் போட்டிருந்தார். நகரத்தார்கள் பக்தி மிகுதவர்கள்,  சிறந்த தர்மிஷ்டர்கள், தான தர்மத்தில் முதல் ஸ்தானம் வகிப்பவர்கள்.   அந்த நேரம் மஹா பெரியவா  மௌன விரதத்தில் இருந்தார்.
ஒரு நாள் காலை  அருகே இருந்த ஊரான அரியக்குடியிலிருந்து சில நகரத்தார் பக்தர்கள் வந்தார்கள்.  அவர்கள் ஊர்க்காரரான  அரியக்குடி என்று அழைக்கப்பட்ட  ராமாநுஜய்யங்கார் பற்றி  பெருமையாக  அறிமுகம் செயது கொண்டார் கள்.  அவர்  அப்போது அங்கே தான் அருகே காரைக்குடியில் இருப்பதாக சொன்னார்கள்.
இதைக்கேட்ட  பெரியவாளுக்கு  முகம் மலர்ந்தது.
''அரியக்குடியை  அழைத்து வாருங்கள்''என்று  ஜாடையில் சொன்னார்  பெரியவா.  விஷயமறிந்த அன்று மாலை  மூன்று மணிக்கே  அரியக்குடி ராமாநுஜய்யங்கார்  தேவகோட்டைக்கு வந்து
விட்டார்.
பாகவதருக்கு ஆச்சர்யம்.  பெரியவா ''காஷ்ட  மௌனத்தில் ''  strict  silence , விரதத்தில் இருக்கும்
போது, அழைத்திருக்கிறாரே!.
ஒரு  சிறு வீட்டின் பின்புறம்  கொல்லைப்பக்கம்  கிணற்றருகே ஒரு சிறிய  அறையில்  இருந்தார் பெரியவா.  அதன்  சிறிய  ஜன்னல் வழியாக தான் பக்தர்களுக்கு தரிசனம்.  குப்பை, சகதி, புதர்கள் மண்டிய இடம்.
''பெரியவா,  அரியக்குடி  ஐயங்கார் பாகவதர் வந்திருக்கார்'' என்று  தொண்டர் ஒருவர்  சொன்னார்
''ஜன்னல் கிட்டே அழைச்சுண்டு வா''.
ஜாடையில் உத்தரவு.  ஜன்னலில் பார்த்து வணங்
கி வெளியே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்  ஐயங்கார் . திடீரென்று  பெரியவா காஷ்ட மௌனத்தை கலைத்து  பேசத்  துவங்கினார். அருகே இருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.
"உனக்கு  ராஷ்ட்ரபதி  அவார்டு  கொடுத்திருக் காளாமே. பேஷ் பேஷ்.    ராஜ் பவன் லே  சிவப்பு கம்பளத்தில் நடந்தவன் நீ. பெரிய  பெரிய  ப்ரமுகாள்,  மனுஷாள்,  எல்லோரும்   குவிந்து கைதட்டல் நடுவே  கம்பீரமாக  போனவன்.  உன்னை இந்த காட்டிலும் மேட்டிலும் குப்பையில், கல்லும் மண்ணும் புதரும்  சூழ்ந்த  இடத்தில்  இந்த இருண்ட தொத்தல் அறைக்கு வெளியே  நடக்க வைச்சுட்டேனே'' னு நினைச்ச மனசு கஷ்டமா இருக்கு. '.
''அதெல்லாம் ஒண்ணுமில்லே, எனது பாக்கியம் இங்கே உங்களை தரிசிச்சது''
''இங்கேதான் பக்கத்திலே  காரைக்குடியிலே   நீ இருக்கேன்னு சொன்னா. உடனே எனக்கு   முத்து ஸ்வாமி தீக்ஷிதர்  க்ரிதி  '' ஸ்ரீ  சுப்ரமண்யாய நமஸ்தே'' கேக்கணும்னு ஆசை வந்தது. எனக்கு அந்த காம்போதி ராக கீர்த்தனை ரொம்ப   பிடிக்கும். இப்போ நீ இங்கே இருக்கும்போது நீ பாடி கேக்கணும் னு   தோணித்து.   சங்கீதம் சாஹித்யம் ரெண்டுமே  அசாத்தியம்  அந்த தீக்ஷிதர் க்ரிதியிலே.   அக்ஷர சுத்தமா அதை லயிச்சு  ராக தாள  பாவத்தோடு (bhavaa ) பாடினா  சுப்ரமணியன் எதிரே நிப்பான்.  நிறைய  வித்வான்கள் சமஸ்க்ரித  தெலுங்கு  கீர்த்த னைகளை  பாடறேன்னு சொல்லி   சிதைச்சுடறா.  அவா பாடாம  இருந்திருக்க கூடாதான்னு எனக்குத்  தோணும்.  சாஹித்ய  சந்தஸ் அத்தியாவசியம். (தமிழில் சந்தம்  என்போம்) .
''சில  கீர்த்தனைகளை  ராக   தாளத்திற்காக  பதம் பிரிச்சு பாடறது உண்டு. ஆனா  அர்த்தம் அநர்த்த மாகி   விடக்கூடாது.
''இந்த பாட்டையே  எடுத்துக்கோயேன்.  அதுலே ''குருகுஹாயஞ்ஞான  த்வாந்த  ஸவித்ரே'' ன்னு வரும்.    இதை  பிரிச்சுப் பாடும்போது  '' குரு குஹாய  அஞ்ஞான  த்வாந்த  ஸவித்ரே ''  அப்படின்னா,  ''அஞ்ஞானம் எனும்  இருட்டுக்கு  சூரியனாக இருப்பவன்''  ன்னு அர்த்தம்.  அதை  பாடும்போது சிலர்  ''குருகுஹாயா  ஞான  த்வாந்த   ஸவித்ரே '' ன்னு   அதாவது  ' ஞானத்தை இருட்டடிக்கும் சூரியனே  என்கிறமாதிரி  அர்த்தம் தரும்படியாக பாடிடுவா.
''உனக்கு  சுப்ப ராம  சாஸ்திரி  தெரியுமோ? அவருடைய  சங்கராபரண  ராக   க்ரிதி  ''சங்கராச்சார்யம்'' பழக்கமுண்டோ?   இதை  வீணை தனம்மா   வகையறா,  செம்மங்குடி  சீனு,    MS   எல்லோரும் பாடுவா.  அதுல  ஒரு வரி வரும்  '' பரமாத்வைத ஸ்தாபன  லீலம் ''  என்று.  என்ன அர்த்தம்னா   '' விளையாட்டு மாதிரி சுலபமா, ஹிந்து சனாதன தர்மத்தில் அத்வைத  ஸித்தாந் தந்தை  நிறுவிய பரமாத்மா ஆதிசங்கரர்  ''.    இதைப்   ''பாடும்போது   அத்வைதம்   என்கிற  வார்த்தையில்   ''அ'' என்கிற இடத்திலே   அழுத்தம் கொடுத்து பாடணும்...  (பெரியவா தானே  பாடிக் காட்டினார்.  அப்போதெல்லாம் அவர் குரல் கணீரென்று இருக்கும்)   அப்போது தான்  அதன் அர்த்தம்  சப்தத்தில்  த்வனிக்கும்.   எதிர்பார்த்த  அர்த்தம்  புரியும்.  ஜாக்கிரதையாக   இது மாதிரி பாடினா,  சங்கீதம் முறையா கத்துக்கலேன்னா கூட   சரியான  அர்த்தத்தை விளக்கி பாட முடியும்.   நான் சொன்னேனே  அந்த  வித்வான் களெல்லாம்  அர்த்தம்  புரிஞ்சுண்டு பாடறவா.''
அது  இல்லாம  அஜாக்கிரதையா  பரமாஆஆ  ...  த்வைத  ஸ்தாபன லீலம் '' னு பாடினா  அத்வைதம் காணாம    போயிடும்.   ஆதி சங்கரர்  த்வைதம்  ஸ்தாபனம் பண்ணார்னு  காட்டும்.    பெரியவா  தானே  இந்த இடத்திலே  சிரித்தார். மற்றவர்களும் இதை கேட்டு  சிரித்தனர்.
''ஆனா  ஒரு சந்தோஷம்  இதிலே என்னன்னா,  சங்கீதத்தில்  அத்வைதம், த்வைதம்  வித்யாசம்   இல்லே ,அங்கே  மக்கள் ரசிக்கிறது சங்கீதத்தின் இனிமையை .   சங்கீதம்  என்கிறது  பாடற  வித்வான்  மனசை,   அவன்  பாடற  சங்கீதத்துடன் இணைக்கணும்.   ரெண்டும்  ஒன்றிப்போகணும்.   அதிலே  சைவம் வைஷ்ணவம்  த்வைதம்  அத்வைதம் எல்லாம்  கலக்காது.  இல்லேனா  நீ  ஒரு வைஷ்ணவன்,  ''ஸ்ரீ சுப்ர மண்யாய  நமஸ்தே'' அவ்வளவு நன்னா  பாடுவியா?  நான்  தான் கேட்பேனா?  நான் நீ பாடி கேட்டிருக்கேன். லயிச்சதுண்டு.  உன் குரல்  வளம்  கேட்க வேண்டாம். உன் சாஹித்ய திறமை அதோடு கலந்து பரிமளிக்கிறது.  பிசிறு இல்லை.  சரியா இருக்கு.   அதனாலே தான் நீ  இங்கே தான் பக்கத்திலே  காரைக்குடியில் இருக்கேன்னு கேள்விப் பட்டதும் அழைச்சுண்டு வரச் சொன் னேன்.''
அதிக நீளமாக பதிவிட்டால் படிப்பவர்கள் சிரமப்படுவார்கள்  என்பதால்  அரியக்குடியை அடுத்த பதிவில்  மகா பெரியவா எதிரே '' ஸ்ரீ சுப்ரமண்யாய  நமஸ்தே''  பாட விடுகிறேன்....
தொடரும்

Wednesday, October 28, 2020

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்     J K   SIVAN  




                                                        எனக்கு  என்ன  பிராயச்சித்தம்?


பார்ப்பதற்கு  எளிமையாக தோன்றினாலும்,  எதிலும் பட்டுக்கொள்ளாமல்  தனித்து இருப்பது தோன்றினா லும், மஹா பெரியவா திரிகால ஞானி, இருந்த இடத்திலிருந்தே எங்கே எது எப்போது நடந்தாலும் துல்லியமாக அறியும் சக்தி கொண்டவர்  என்றுணர்த்த இந்த என்னுடைய  பழைய  கட்டுரையை மீண்டும்  அளிக்கிறேன்.
ஒரு நல்ல விஷயத்தை எவர் மூலமாகவும், எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம், அனுபவிக்கலாம்.   சாமஜ  வர கமனா, ஹிந்தோளத்தில்  எத்தனை பேர் எத்தனை  தடவை பாடினாலும்  கேட்க  அலுக்கவில்லையே.  அதைவிட பல மடங்கு உயர்ந்ததல்லவா  மஹா பெரியவா மஹாத்மியம்.
ஒரு தடவை பால் பாயசம் சாப்பிட்டதால் இனி வேண்டாம் என்றா சொல்கிறோம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இன்னொரு தொன்னைக்கு  கை  நீட்டவில்லையா?  என் மனசை கசக்கி பிழிந்த இந்த சம்பவம் உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்காவிட்டால்  பேசாமல் மாஸ்க் அணிந்துகொண்டு கண் டாக்டரிடம்  இன்றே செல்லுங்கள். 

இதை நான் முதலில் படித்தது  ஆங்கிலத்தில் தான்.   என்னை உலுக்கியது. அன்று தூக்கத்தில் பெரியவா ளையே நினைத்து கண் மூடிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தேன். அவருக்கு சாஷ்டங்க நமஸ்காரத்தை படுக்கையிலே சமர்ப்பித்தேன்.

சுருக்கமாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்று ஆசை.  சாதாரண  அன்றாட தமிழில் எழுதுவது எனக்கு சௌகர்யம்.  இது   பல  பெரியவா பக்தர்களை  சென்றடைந்தால் அதுவே என் முயற்சிக்கு கிடைத்த அருள் பிரசாதம். 
+++

''திருவிடை மருதூரில் அன்று சித்திரா பவுர்ணமி. மகாலிங்கசுவாமி கோயிலில் ருத்ரஅபிஷேகம். பதினொரு ரிக்வித்துக்களோடு ருத்ராபிஷேகம். ஜபம் காலை 8 முதல் பிற்பகல் 2மணி வரை பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணசுவாமி அய்யர். பெரியவா பக்தர். மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில் பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி  கைகட்டி  நின்றார்.   புருவத்தை உயர்த்தி பெரியவா  தலையை சற்று சாய்த்து  "என்ன விஷயம்?"  என்று ஜாடையாக  விசாரித்தார். மிராசுதார் பவ்யமாக தேங்காய்  பழம், வில்வம் , விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் இருந்த தட்டை  பெரியவா முன்பு  வைத்தார்.

"எந்த கோயில் பிரசாதம்?"
"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம் ஏற்பாடு ''பண்ணினேன்'' . அந்த பிரசாதம்."
பெரியவா தட்டை பார்த்தார்.  தொண்டையை சற்று  கனைத்துக் கொண்டு அருகே எல்லோருக்கும் கேட்கும்படியாக உரக்கவே  ஜமீன்தாரிடம் பேசினார்: 
 "நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா?"
"இல்லை பெரியவா. '''நானே தான்''' பண்ணினேன்!" ("நானே" கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)
"லோக க்ஷேமத்துக்கு தானே?"
மென்று விழுங்கினார் மிராசுதார்
 "அப்படின்னு இல்லை பெரியவா . ரெண்டு மூணு வருஷமாகவே வயல்லே சரியா வெள்ளாமை போறலே. அறுவடை திருப்தி இல்லே. கவலையோட எங்க ஊர் முத்து  பரம்பரை ஜோசியரைக்  கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு. வெள்ளாமை பலன் கிடைக்கும்''   என்று சொன்னார். நல்ல விளைச்சல் வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேக பிரசாதம் கொடுத்துட்டு பெரியவா அனுக்ரஹமும். பெற்றுக்கொண்டு.............."
 நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே தட்டு தடுமாறி பேசியவர் நிறுத்தினார்.

" ஒ! அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமத்துக்காகவோ ருத்ரஜெபம் பண்ணலை இல்லையா ''
ஐயர்  நெளிந்தார். பதில் சொல்லவில்லை. கைகட்டி  வியர்க்க எதிரே நின்றார்.
பெரியவா கண்ணை மூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. குண்டூசி கீழே விழுந்தாலும் கணீர் என்று கேட்கும் அளவுக்கு நிசப்தம் எல்லோரும் பெரியவாளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.   பெரியவா  எதிரே இருந்த   தட்டை, சுவாமி பிரசாதத்தை,  தொடவில்லை.

"ருத்ர ஜபத்துக்கு எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே? "
"பதினோறு பேர் பெரியவா"
"யாராரு, எங்கேருந்தேல்லாம் வந்தா?"
 பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.   நாராயணசாமி ஐயர் ,தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்து  படித்தார் 

"திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள், ஸ்ரீனிவாச கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள், மாயவரம் கோபாலக்ருஷ்ண தீட்சிதர், தப்பளாம்புலியூர் தண்டு......... ....." பெரியவா இடைமறித்து:

"ஒ! எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்களஆச்சே .. உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு?

மிராச்தார் சந்தோஷத்தோடு " இருக்கு இருக்கு பெரியவா, நேத்திக்கு அவரும் வந்தார்.
"பேஷ், பேஷ். வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே  கரைகண்டவர்,  அதாரிட்டி.  அவருக்கு வயசு அதிகமிருக்குமே இப்போ. கஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்லமுடியறதுன்னு காதிலே விழுந்ததே"

துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார் பதிலளித்தார் :
'' ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல முடியலே அவராலே மொத்தத்தில் சொல்லவேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று எனக்கு ரொம்ப வருத்தம். பாதி பாதி முழுங்கிடறார். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று கூட தோணித்து''   

"உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதைவேணுமானாலும் சொல்லாதே. தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பத்தி உனக்கு என்ன தெரியும் ? அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ??....
 பெரியவா கண் மூடிக்கொண்டது :
சிறிது மௌனத்திற்கு பிறகு பெரியவா தொடர்ந்தார்.....

"நேத்திக்கு உன் ஊரிலே  கோவில்லே என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு? கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும்போது நீ  என்ன  சொன்னே?  
வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள்''  ---   அவரிடம்  இப்படி  கேட்டியா இல்லையா ?"

அங்கிருந்த அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டுகொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில் பிரவாகத்தோடு

"தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை தத்ரூபமாக சொல்றேள் "
"அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?
"எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு " தலா பத்து ரூபா கொடுத்தேன்"
“தெரியும். எல்லாருக்குமேவா? "

மென்று முழுங்கிக்கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்த மிராஸ்தாரிடம் பெரியவா தானே பேசினார்:

"எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ? . நானே சொல்றேன். எல்லாருக்கும் பத்து பத்து ரூபா கொடுத் துண்டே  வந்து கனபாடிகள் கிட்ட வந்து சம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே.  அவர்  குறைச்சு மந்திரம் சொன்னதாக நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுத்ததில் உனக்கு சந்தோஷம்! . கனபாடிகள் ஒண்ணும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை வாங்கிண்டார்.   அப்படி தானே ?"

மிராசுதார்  ஈட்டி பாய்ந்ததுபோல் துடித்தார்.
"பெரியவா நான் மகா தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ ". வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும் அதிர்ச்சி. பெரியவாளுக்கு இருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது. பெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது. எல்லோரையும் குண்டு கட்டாக கட்டிப் போட்டது.

"நீ பண்ணது அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் ஆத்தில்  எல்லா  ருத்ரம் சொன்ன ப்ராமணா எல்லோருக்கும்  போஜனம் நடந்ததே. நீ தானே சக்கரைப்  பொங்கல் பரிமாறினே. நெய், திராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும் திருப்தியா சாப்பிடணும்னு பாரபட்சம் இல்லாம போட்டியா."

நாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை. மஹா பெரியவாளே தொடர்ந்தார் :

"நானே சொல்றேன். நன்னா இருக்கு இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே.   மஹா பண்டிதர்  வெங்கடேச கனபாடிகள் ''இன்னும் கொஞ்சம் போடுங்கோ'' என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலை. காதிலே விழாதது மாதிரி நகர்ந்துட்டே. சரியா? இது பந்தி தர்மமா? அவர் மனசு நோகடிச்சு   நீ சந்தோஷபட்டே""

இதைச் சொல்லும்போது பெரியவாளுக்கே ரொம்ப துக்கம் மேலிட்டது.  கண்களில் நீர் அரும்பு காட்டியது.  அவரது நா தழுதழுத்தது.  மிராசுதார்  கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.அமைதி பதினைந்து நிமிடம் போல நிலவியது. பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார்.

"தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்றவர் . இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லை. அவர் நாடி நரம்பு மூச்சில் எல்லாம்  சாக்ஷாத் பரமேஸ்வரன் வாசம் பண்றான். அவர் உடம்பு ரத்தம் பூரா ருத்ர ஜபம் ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ பண்ணினது  எவ்வளவு பெரிய  மஹா பாவம்."

மகா பெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார். மிராசுதார் சிலையாகி வெகுநேரமாகி விட்டதே.

“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம்  அவர்  என்ன பண்ணினார்னு  உனக்குத்  தெரியுமா.? வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவிடைமருதூர் கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார். கண்லே தாரை தாரையா நீர்வடிய "அப்பா ஜோதிஸ்வரூப  மகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன் சந்நிதியிலே  எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ எனக்கு 81 ஆயிடுத்து. மனசிலே தான் தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல் போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு அடிக்கடி ''இன்னும் கொஞ்சம் போடுங்கோ'' என்று மிராஸ்தார் கிட்ட கேட்டுட்டேன். முதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு எனக்கு போட இஷ்டமில்லை என்று. இவ்வளவு வயசாகியும் நான்  என்   நாக்கை அடக்கலை . அல்ப விஷயத்துக்கு அடிமையாய்ட்டேன். அதுக்கு நீ எனக்கு  தக்க தண்டனை தரணும் னு தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா. நா இனிமே எங்கே போறது? நீ தானே காசிலேயும் லிங்கமா இருக்கே. பன்னிரண்டு ஜோதிர் லிங்கத்துலே  ஒருத்தன்.   அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் முன்னாலே நின்னு  பிரதிஞை பண்றேன். ''இனிமே இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டு மில்லை. சக்கரை சேர்த்த எந்த பண்டமும் இந்த க்ஷண த்திலேருந்து  என் கையோ நாக்கோ தொடாது.”

கண்ணைத்  தொடச்சுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.
'' நாராயணசாமி நீ இப்போ சொல்லு   திருவிடைமருதூர்  சர்வேஸ்வரன் மகாலிங்கம் நீ பண்ணின ருத்ரத்தை ஏத்துப் பாரா ?" 
மௌனம். அனைவரும் கண்ணீர்  சிந்தும்  கற்சிலைகள்.   மிராசுதாரிடமிருந்து  என்ன பதில் எங்கிருந்து வரும்?.
மணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை.  பாவம்  அவர்  பட்டினி  கிடந்தார்.  தனது மதிப்புக்குரிய  ஒரு பக்தனுக்கு நேர்ந்த அவமானத்துக்காக  தானே  தனக்கு தண்டனை கொடுத்துகொண்டார். எல்லார் கண்களிலும் அனைத்து இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் மிராஸ்தார் அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா நீங்க தான் என்னை காப்பாத்தணும் ” என்று பெரியவா காலடியில் விழுந்தார்.   அப்போதும் அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவே யில்லை. "

பெரியவா “எல்லாரும்  சித்தே  இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரஹம் பண்ணுவார்" என்றார். 
பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65 வயது மதிக்க தக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு அப்போதுதான் ஒரு தட்டுடன்  உள்ளே பெரியவாளிடம்  வந்தார்.

"  பெரியவாளுக்கு நமஸ்காரம்.  என் பேரு மகாலிங்க தீக்ஷிதர். திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன். நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம் சமர்ப்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போக வந்தேன்" என்று சொல்லி கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்..
அவரை தடுத்து பெரியவா " சிவ தீக்ஷை வாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது" என்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து அர்ச்சகருக்கு காமாட்சி சந்திரமௌலீஸ்வரர் பூஜை பிரசாதம் தரப்பட்டது. அப்போது தான் அங்கு தங்கள் ஊர்   மிராசுதார் நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். 
" பெரியவா இவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவா தான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் கைங்கர்யம் பண்ணினா"
மிராசுதாரையும்  வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார். நாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் " என் பாபத்தை எப்படி கரைப்பேன்.  எனக்கு  என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ" என்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். "நான் என்ன பிராயச்சித்தம் சொல்ல முடியும். தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்."

''பெரியவா, நான் இப்பவே ஓடறேன். அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும் என்று சொல்வாரா?.  அவர் மனசுலே  புகுந்து   நீங்கதான் அருள் செய்யணும்"

பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார்.
" உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்" .என்று கூறிவிட்டு   மஹா பெரியவா உள்ளே சென்று விட்டார். வெகு நேரமாகியும் பெரியவா பிறகு வெளியே வரவில்லை. மிராசுதார் ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம்.  ஏதோ அசுபம் என்று பார்க்கும்பதே  தெரிந்து விட்டது.   அன்று விடி காலையில்  வெங்கடேச கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்துவிட்டார் என்று கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார். கனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை. கனபாடிகளின் காலை பிடித்து என்னை மன்னிச்சுடுங்கோ நான் மகாபாவி. என்று கதறினார். சுரீர் என்று அப்போது தான் உரைத்தது
அதனால் தான் பெரியவா " ப்ராப்தம்" இருந்தால் என்று சொன்னாரா?.
++++
தன் பாபம் தீரவேண்டும்  என்று   நாராயணசுவாமிஐயர்   எண்ணற்ற மடங்களுக்கும் கோயிகளுக்கும்  தான தர்மங்கள் எல்லாம் செய்து கடைசியில் காசியில் முக்தியடைந்தார் என்று கேள்வி*

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம்    J K  SIVAN                                                             
          வெண்ணீறணிந்ததென்ன  என்ன  என்ன?                              
மஹா பெரியவா உருவத்தைப்  பற்றி நினைக்கும்போது நம் கண்முன்னே தோன்றுவது அவரது நெற்றியில் உடலில் ஜொலிக்கும் பால் வெண்ணீறு அல்லவா. அதைப் பற்றிதான் இந்த கட்டுரை. 

வெறும் மரக்கட்டை விறகினை  எரித்து  சாம்பலாக்கினால் மட்டும்  விபூதி அல்ல. அதற்கு வேறு சில சாமான்களும் தேவை.  எரிந்து பஸ்மமாக மிஞ்சுகிறது. ஞானம் என்கிற நெருப்பு மனித வாழ்வின் கர்மங்களை எல்லாம் எரித்து  பஸ்மம் தான்  மிச்சம். கீதையும் இதை சொல்கிறது.  ஞானம் தான்  எஞ்சியுள்ள பஸ்மம் .விபூதி!   மஹா பெரியவா இதை அழகாக சொல்கிறார்:

‘பல வர்ணங்களைக் கொண்ட பொருள்களைக் காண்கிறோம். ஆனால், அவை அவ்வளவும் எரிந்தபின் மாறிவிடுகின்றன. கடைசியில் வெளுத்துப் போவிடுகின்றன. நாம் சாயம் வெளுத்துப் போய் விட்டது என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். என்றால், மெய்யான ஆத்மாவின் வடிவம் தூய வெண்ணிறம் – வடிவம் கொடுத்தால் அது விபூதி. பொய்யானது இந்த தேகம். இதன் மேல் விபூதியை பூசிக் கொள்கிறோம். ஒரு நாள் இதுவும் எரிந்து, இறுதியில் இந்த வெண்ணிற விபூதியை சார்ந்து நிற்கிறது. விபூதி நாம் யார், நம் முடிவு எப்படி? என்பதை தெளிவாக்குகிறது.

விபூதி   சிவப் பிரசாதம்.  சிவன்  காடுடைய சுடலைப் பொடி  பூசிய உள்ளம் கவர் கள்வன்.  பஸ்மம் சிறந்த  ரக்ஷை’, `திருநீறு’   ஸமஸ்க்ரிதத்தில்   விபூதிக்கு  எத்தனையோ அர்த்தம். மனத்தூய்மை அதிலொன்று.

 அரிமர்த்தன பாண்டியனுக்கு அப்புறம்   அவன் வம்சத்தில்  640 முதல் 670 வரை மதுரைக்கு ராஜா  மாறவர்மன்  அரிகேசரி பாண்டியன் எனும்  'கூன் பாண்டியன்'. அவன் மனைவி சோழர்குலத்தை சேர்ந்த  மங்கையர்க்கரசி.

 அரிகேசரி சமண சமயத்தின் மீது பற்று கொண்டு  சைவ மதத்தை வெறுத்தான்.  ராணி  மங்கையர்க்
 கரசிக்கும்  மந்திரி  குலச்சிறையார்  இருவரும்  விபூதி கூட  அணிய முடியாத அளவு  தீவிர  சமணப்பற்று ராஜாவுக்கு.  இருவரும்   மதுரை சொக்கநாதனிடம்  எப்படியாவது  அரிகேசரி பாண்டியன் திரும்ப சைவ மதத்திற்கு திரும்ப  வேண்டிக்கொண்டார்கள்.  பாண்டிய  நாட்டில் சமணர்கள் அதிகாரம் மேலோங்கி இருந்தது.    இந்நேரம் தான்  திருஞான சம்பந்தர் புகழ் எங்கும் பரவிக்கொண்டு வந்ததது. ராணியும் மந்திரியும்  எப்படியோ  பக்தர்களை அனுப்பி  பாண்டிநாட்டில் சைவ வீழ்ச்சிபற்றியும், சமண ஆதிக்கம் பற்றியும் எடுத்துரைத்தார்கள். மன்னனை சைவத்துக்கு மீட்க  அரும்பாடு பட்டனர்.  
 "வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்'' எனும்  கோளாறு பதிகம் பாடினார்.  ஞான சம்பந்தர் காலில் விழுந்து ராணியும்  மந்திரியும் அழைத்தனர். அடியார்களோடு ஒரு மடத்தில் மதுரையில் தாங்கினார். அன்றிரவே  மடத்துக்கு சமணர்கள் தீ வைத்தனர். மடம் தீப்பற்றி எரிவதைக்  கண்ட  சம்பந்தர் சிறிதும் பதட்டமில்லாமல்  சிவன் மீது பதிகம் பாடினார்.   மடத்தில் தீ அணைந்தது. ஆனால், அந்த தீ  மன்னன்  ராஜாவை தாக்கி திடீரென்று ராஜாவுக்கு  தாங்கமுடியாத  வெப்பு நோய்.  அனல் மாதிரி  ஜுரம், மூன்று நான்கு நாட்களாகியும்  உஷ்ணம் குறையவில்லை. வலி பொறுக்கமுடியாமல் துடித்த ராஜாவுக்கு சமணர்களின் மருத்துவம் பலனளிக்கவில்லை . வெப்பு தாங்காமல் பதறித் துடித்தான்.   ராணிக்கும் மற்ற எல்லோருக்கும் அரண்மனையில் கவலை. கண்ணீர். எப்படி குணமாகும்?. சமணர்கள் மருத்துவம் பலனளிக்க வில்லையே. 
 ''நாதா,  ஞான சம்பந்தரை  அழிக்க சமணர்கள் வைத்த தீ தான் உங்களை வாட்டுகிறது. அவரால் தான்  மடத்தை பாதித்த தீ அணைந்தது. உங்கள் நோயையும் தீர்ப்பார். நான் அவரை   வேண்டி  வரவழைக்கிறேன்''
''என் வெப்பு  நோயை அவர் போக்கினால், நான் சமணத்தை விடுவேன். சைவமதத்தில் மீண்டும் இணைகிறேன்'' கூப்பிடு அவரை'. 
அரண்மனைக்குள்  சம்பந்தர் காலடி பட்டதுமே  எங்கும் தென்றல் வீசியது.  கம்மென்று  பன்னீர் மணம் கமழ்ந்தது. பச்சிளம் பாலகனாக முருகனே நேரில் வந்தது போல்  சம்பந்தர் அரசனை அணுகினார்.   
''என்ன ஆயிற்று என்று வினவ, ராஜா தனது தாங்க முடியாத வலியை  முக்கி முனகி ஒருவாறு சொன்னான். அவர் காலில் விழுந்தான். அவன் தலையை அன்பாக ஆதுரமாக தடவி, அவன் எதிரே அமர்ந்தார். ஒரு சில வினாடிகள் சிலையாகி  கண்மூடி மதுரை சுந்தரேசன் மீனாட்சியை மனதில் வேண்டினார்.   கணீரென்று குரல் எழும்பியது. அரண்மனையில் பெரும் கூட்டம். ராஜாவை சுற்றி நிற்க இடம் இல்லை. எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர். 
 `மந்திரமாவது நீறு’ என  துவங்கி  10  பாடல்கள் ஒலிக்க ,  ராஜாவின்  உடல் மீது தனது பட்டுக் கையினால்  சம்பந்தர்  விபூதியை  எடுத்துப்  பூசினார்.   சில நிமிஷங்களில்  இருந்த இடம் தெரியாமல்  ராஜாவின்  வெப்பு நோய் நீங்கியது.   நன்றிக்கண்ணீரோடு  பாண்டியன்  சம்பந்தர் காலில்  விழுந்தான்.  அப்புறம்  அனல் வாதம் புனல் வாதம் போட்டிகள் நடந்தது.  கூன் விழுந்த பாண்டியன் நிமிர்ந்து நின்றான் `கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறன்' ஆனான். சைவ சமயத்தை ஏற்று சிறப்பாக ஆட்சிசெய்தான்.   
நான் சொல்ல வந்தது  10  திருநீற்றுப் பதிகங்கள் பற்றி.  முதல் ரெண்டு மூன்றாவது மனப்பாடம் செய்யவேண்டிய பதிகங்கள். 
மந்திர மாவது நீறு
  வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
  துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
  சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
  திருஆல வாயான் திருநீறே.  1

வேதத்தி லுள்ளது நீறு
  வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
  புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
  உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
  திருஆல வாயான் திருநீறே.  2

முத்தி தருவது நீறு
  முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
  தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
  பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
  திருஆல வாயான் திருநீறே.  3

காண இனியது நீறு
  கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம்
  பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு
  மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு
  திருஆல வாயான் திருநீறே.  4

பூச இனியது நீறு
  புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு
  பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
  வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
  திருஆல வாயான் திருநீறே.  5

அருத்தம தாவது நீறு
  அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
  வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு
  புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
  திருஆல வாயான் திருநீறே.  6

எயிலது வட்டது நீறு
  விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
  பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
  சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்
  தாலவா யான் திருநீறே.  7

இராவணன் மேலது நீறு
  எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு
  பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு
  தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி
  ஆலவா யான்திரு நீறே.  8

மாலொ டயனறி யாத
  வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள்
   மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும்
  இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம்
  மாலவா யான்திரு நீறே.  9

குண்டிகைக் கையர்க ளோடு
  சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு
  கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார்
  ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும்
  ஆலவா யான்திரு நீறே.  10

ஆற்றல் அடல்விடை யேறும்
  ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும்
  பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற
  தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
  வல்லவர் நல்லவர் தாமே.

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன், திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர்  மேனிமேல் பூசிக் கொள் வது. அழகு தருவது. நூல்களால் புகழப்படுவது. 
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

திருஆலவாயான் திருநீறு  மோக்ஷம் தருவது.  முனிவர்கள்  அணிவது.  நிலையானது. பெரியோர்கள் போற்றுவது.  சிவனிடம் பக்தி தருவது. சித்திகளை அளிப்பது. கண்ணுக்கினியது. அழகூட்டுவது. பெருமை தருவது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது. புண்ணியம் வளர்ப்பது.   பேச இனியது.  ஆசை அறுப்பது.   நோய் தீர்ப்பது. துன்பம் போக்குவது.  திரிபுரம் எரித்தது. இம்மை மறுமை  இரண்டிலும் இன்பம் தருவது. செல்வமாக  கருதப்படுவது. தூய்மையை அளிப்பது.ராவணேஸ்வரன்  பூசி வரம் பெற்றது.  நல்லோர் மனதில் இடம் பெற்றது.  பராசக்தி  வடிவம்.  பாபம் போக்குவது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...