Thursday, July 12, 2018

nataraja paththu




நடராஜ பத்து 10 J.K. SIVAN

               


 சிறு மணவை நிரஞ்ஜீஸ்வரர்

அந்த அமைதியான கிராமத்தில் அதிகம் பேர் இல்லை.  எங்கும் சுற்றி நெல், பயிறு,  வயல்கள்.  கிணற்றிலிருந்து  ஏற்றம் இறைத்து  நீர்ப்பாசனம்.      காய்கறி தோட்டங்கள். வயல்கள்.   அங்கும் இங்குமாக ஒரு சில வீடுகள்,  விவசாயிகள் மட்டுமே அதிகம்.   மரங்கள், நிழலில் காளைகள், கலப்பைகள், வைக்கோல் போர், குடிசைகள்.

இருப்பவர்கள் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இங்கும் அங்கும் செல்வார்கள் தவிர  ஒரு பெரிய குளத்தங்கரையில் இருந்த சிறிய  சிவன் கோவிலுக்கு வருபவர்கள் கம்மி.

கோவிலை  ஒட்டி ஒரு சந்து. அதில் ஒரு ஒட்டு வீட்டில் இருந்து முதியவர் கொம்பை ஊனறிக்கொண்டு கொண்டு வெளியே  வருகிறார். கால்கள் தானாகவே  அந்த சிறிய பழைய சிவன் கோவில் நோக்கி நகர்கிறது.  அந்த முதியவரை ஊரில் எல்லோருக்கும் தெரிகிறது. முனிசாமி முதலியார் என்றாலே  நடமாடும் சிவன் என்று தான் சொல்வார்களாம்.

நாள் தோறும்  ஒரு முதியவர்  நிரஞ்சீஸ்வரனை வணங்கிவிட்டு  அங்கே ஒரு தனி இடத்தில் இருந்த நடராஜர் சிலை முன் வந்து ஆர  அமர உட்கார்ந்து கொள்வார்.  சிதம்பரம் நடராஜன் அவன் தான் என்று அடிக்கடி சொல்வார். 

நெற்றி நிறைய பட்டையாக விபூதி, கழுத்தில் ருத்ராக்ஷம், காவி உடை, நீண்ட வெள்ளிக்கம்பி தாடி மீசை.  கணீர் குரல். கொட்டும் மழையானாலும், தினமும்  அங்கே  வந்து அமர்ந்து  நடராஜனை கண்கொள்ளாமல் நேரம் காலம் பார்க்காமல் தரிசிப்பார்.   அவரே சிறுமணவையை சேர்ந்த முனுஸ்வாமி முதலியார்.   

கண்கள் மூடியிருக்க,  பனிக்க, தாரை தாரையாக  ஆனந்தக்கண்ணீர் வடிய  அந்த  முதியவர்  தனது மனத்திலும்  எதிரே சிலையாகவும் நடராஜனைக்  கண்டு   வெள்ளமாக தன் மனதிலிருந்து  எழும்  பக்தி பரவசத்தோடு, பாடல்களை  பாடுவார்.  அவரைச் சேர்ந்த சிலர்  அந்த பாடல்களை எழுதிக் கொள்வார்கள்.  அவருக்கு,   தான் பாடுவதோ,  அதை மற்றவர்கள் வெளி உலகுக்கு அறிமுகப் படுத்துவது பற்றியோ சிந்தனையே இல்லை.

இப்படித்தான் அந்த அற்புத மனிதர்  நடராஜ பத்து   பதிகங்களை  இயற்றியவர். அவரது படமோ, அந்த நடராஜர் படமோ இன்னும் என்னை வந்து அடையவில்லை.  எங்கெங்கோ தேடுகிறேன். ஒருநாள் நேரில் சென்று தான் பெறவேண்டும். உங்களுக்கும் தரவேண்டும்.

இன்று  சிறுமணவை இல்லை.  அது சின்னமண்டலி  ஆகிவிட்டது.   நிரஞ்சீஸ்வரர் ஆலயம்  மக்களால் புதுப்பிக்கப்பட்டு மரகதவல்லி சமேத நிரஞ்ஜீஸ்வரர்  அருள்பாலிக்கிறார். 

ஆதி சங்கரர் திருவாலங்காடு செல்லும் வழியில் இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்ததாக தெரிகிறது. கோவிலின் தற்போதைய படம் இணைத்துள்ளேன்.

இனி முனுஸ்வாமி முதலியாரின் நடராஜ பத்து கடைசி பாடல்:

''நிரஞ்ஜீஸ்வரா, இதுவரை நான் கெஞ்சியது போதாதென்றால் இன்னமும் சொல்லவா?

அவ்வளவு சொல்லியும் கரையாத உன் மனம் என்ன இரும்பாலானதா? பாறைக் கல்லா? அல்லது உன் தோடுடைய செவி தான் செவிடா?

நீ செய்வது உனக்கே அழகா? ஓஹோ உன் மனம் பூரா மரகதவல்லி மீதோ? ஒருக்கால் நான் சொல்வது உனக்கு கேட்கக்கூடாது என்று எனக்கே ஒரு சாபமோ? உன் பிள்ளைகளைப் பற்றிய கவலையா? யார் மீதாவது உள்ள கோபத்தை என்னிடம் காட்டுகிறாயோ?

இது மட்டும் நிச்சயம். நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை விடப்போவதில்லையே!

எங்கே போவேன் உன்னை விட்டு. இங்கே தான் சுற்றிக்கொண்டே இருப்பேன். உன் நிழலாக.
உன்னை அணுகி இருக்கும்போது எனக்கென்ன தீங்கு நேரும்?

யோசித்தால் ஒன்று புரிகிறது. இந்த நிலை எனக்கு ஏற்பட்டதற்கு நீயோ நானோ காரணம் அல்ல.
என்னை கடைக்கண்ணால் பார் என்றேனே. பார்த்தால் குற்றம் யாருடையதாக இருந்தாலும் குறை தீர்ந்து விடுமே. என்னைக்  கரை சேர்க்க வருவாய் சிவகாமி நேசா, சிதம்பரம் வாழ் நடராஜனே.''


அர்த்தம் ஒருவாறு ஏதோ தெரிந்ததை சொல்லிவிட்டேன். இனி பாடலை பார்ப்போம். அது தான் எளிமையாக புரிகிறதே.

''இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.''


இது வரை நடராஜ பத்து  ரசித்தவர்களை  முடிந்தால் இனி நேரே சென்று நிரஞ்சீஸ்வரர் தரிசனம் பெறலாம். சிவன் கோவில்களில் இப்போதெல்லாம் நடராஜபத்து பாடுகிறார்கள் என்பது மனதுக்கு இனிய விஷயம்.

நிரஞ்சீஸ்வரரர் ஆலயம்  சென்னையிலிருந்து 70 கி.மீ தூரம் தான்.

சென்னையையடுத்த திருவள்ளூர் ஜில்லாவில் பேரம்பாக்கத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் சின்னமண்டலி என்ற கிராமம் தான் அக்காலத்தில் சிறுமணவை., திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. சென்னை அரக்கோணம் மார்கத்தில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து நிரஞ்ஜீஸ்வரர் சிவாலயம் 8 கிமீ தூரம். ஒருகாலத்தில் கூவம், தக்கோலம் போன்ற ஸ்தலங்களைப்போல   இன்றும் இருக்கும் பிரசித்தியான சிவாலயங்களில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் எத்தனையோ சிதிலமான கோவில்களில் இதுவும் ஒன்றாகி உள்ளூர் மக்களால் மீண்டும் புனருத்தாரணம் செய்ப்பட்டு ஒரு சிறு கோவில் இன்றுள்ளது.கோவிலை ஒட்டி புஷ்கரணி. கோவிலை விட மூன்று மடங்கு பெரியது.  .

ஏன் இந்த கோவிலைப் பற்றி ஒருவரும்  முகநூலில்,  google லில் அறிவிக்கவில்லை.  அந்த ஊரில் ஒருவரும் இல்லையா?   





1 comment: